தமிழ்க்கல்வி வழங்கும் பள்ளிகளாக இயங்க வேண்டும்! மே19-இல் திரள்வோம்! மலேசிய மாதிக முழக்கம்!

dmkதமிழ்ப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கை திணிப்பு தேவையில்லை..! தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளாகவே இருக்கட்டும்! என்று தமிழ்மொழியின்பாலும் தமிழ்ப்பள்ளியின்பாலும் அக்கறையோடு சிந்தித்து, தாய்மொழிக் கல்வியின் மூலம் கற்பித்தாலே, தொடக்கக் கல்வியில் ஒரு மாணவனின் கல்வித்தரத்தை உயர்த்தும் என்பது உலக ஒன்றியத்தின் முதல் கல்வி கொள்கை.

இதை உணர்ந்து, “மே 19 இயக்கத்தின்” ஏற்பாட்டில், எதிர்வரும் 19.05.2017 ஆம் நாள், பிற்பகல் 2.30 முதல் 4.30 மணிவரையில் புத்ரா ஜெயா கல்வி அமைச்சின் வளாகத்தில் மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். நடைபெறும் பேரணியை மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.  அந்த பேரணியில் கலந்துகொள்ள தமிழ்மொழியையும் தமிழ்ப்பள்ளியையும் காப்பாற்ற ஆர்வம் கொண்ட அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் என்கிறார் மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் பஞ்சு நாகமுத்து, அவரின் அறிக்கை வருமாறு:

DLP may 19கணிதம் – அறிவியல் இந்த இரண்டு மொழிப்பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிக்க அனுமதித்தால், இன்னும் 10-15 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகள் தமிழ்ப்பள்ளிகளாக இருக்காது. தமிழ்ப்பள்ளி என்று பேருக்கு ஒரே ஒரு பாடம் மட்டுமே தமிழ்ப்பள்ளியில் நடக்கும், பின்னர் அது எப்படி தமிழ்ப்பள்ளியாக தொடரும். பெற்றோர்களே..! சிந்தியுங்கள்..!

எனவே ஆங்கிலத்தில்தான் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த இரண்டு பாடங்களையும் போதிக்க வேண்டுமென்றால், தாராளமாக உங்கள் பிள்ளைகளை வேற்றுமொழிப் பள்ளியில் போட்டுக்கொள்ளுங்கள். தமிழ்ப்பள்ளியில் ஏன் குழப்பத்தை உருவாக்குகிறீர்கள். (இந்த விசயத்தில் சீனப்பள்ளியின் பொற்றோர்களும் – அவர்களின் கல்விமான்களும் தெளிவாகவே இருக்கின்றனர்)

இருமொழிக் கொள்கை டி.எல்.பி. ஏன் தேவையில்லை என்பதற்கு பத்து காரணங்களை விவரிக்கிறார் நாக பஞ்சு.

முதலாவது, ஒரு குழந்தைக்குத் தன்னுடைய தொடக்கக் கல்வியைத் தாய்மொழியில்தான்
கற்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (UNITED NATION) கல்விக் கொள்கையாக உள்ளது.

najib_tamil_schoolஇரண்டாவது, 2003ஆம் ஆண்டில் கணிதம் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் (PPSMI) திட்டத்தை அறிமுகப்படுத்தி, பின்னர் அத்திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக 2012இல் மலேசியக் கல்வி அமைச்சு அறிவித்தது. தோல்வி அடைந்த ஒரு திட்டத்தைத் தற்போது   வேறொரு பெயரில் மீண்டும் அமுல்படுத்துவதில் உண்மையும் நேர்மையும் அறவே இல்லை. மேலும்,

ஆங்கில மொழி ஆற்றலை அதிகப்படுத்த வேண்டுமானால், ஆங்கிலப்பாடத்தின் கற்றல் கற்பித்தலில் மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு கணிதம், அறிவியல் போன்ற திறன் பாடங்களை (TECHNICAL SUBJECT) ஆங்கில மொழியில் கற்பிக்க நினைப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை.

ஏற்கனவே 10 ஆண்டுகள் கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பித்ததால் PISA, TIMMS முதலான அனைத்துலகத் தேர்வுகளில் மலேசிய மாணவர்களின் தேர்ச்சிநிலை படுவீழ்ச்சி அடைந்ததைக் கல்வி அமைச்சு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், அதே திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதில் எந்தவித ஏரணமும் (LOGICAL) இல்லை.

உலக அளவில் அறிவியல் துறையில் வளர்ச்சி பெற்றுள்ள செருமன், உருசியா, கொரியா, சீனா, சப்பான், முதலான நாடுகளில் கணிதம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவை அவர்களின் தாய்மொழியிலேயே கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

கடந்த முறை (2003-2012) PPSMI என்னும் பெயரில் தனிக் கொள்கையாக இருந்த பொழுதே படுதோல்வி அடைந்த இந்தத்திட்டம், தற்பொழுது MBMMBI என்னும் கொள்கையின் கீழே துணைத் திட்டமாக அறிமுகமாகிறது. தனிக் கொள்கைக்கே படுதோல்வி என்றால், துணைத் திட்டம் வெற்றி பெறுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான பாடநூல்கள், துணைநூல்கள், பயிற்சிநூல்கள், கலைச்சொல் உருவாக்கம் ஆகிய அனைத்துப் பணிகளும் வளர்ச்சிகளும் நின்று போகும் – இருப்பவையும் அழிந்து போகும்.

MALAYSIA-VOTE-INDIANSதமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், உருவாக்கமும் தொழில்நுட்பமும் ஆகிய 4 பாடங்களைக் கற்றுக் கொடுப்பதற்குத் தமிழ் ஆசிரியர்களுக்குப் பதிலாக வேறு இன ஆசிரியர்கள் நியமிக்கப்படலாம். இதனால், நமது இனத்திற்கான வேலை வாய்ப்பு, உயர்க்கல்வி வாய்ப்பு, பொருளாதார வாய்ப்பு அனைத்தும் பறிபோகும்.

தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களைக் கண்காணிக்கும் தமிழ் அதிகாரிகள், உதவி இயக்குநர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, காலப்போக்கில் அறவே இல்லாமல் போகும் பரிதாப நிலைமை உருவாகலாம்.

Dong zong1இறுதியாக, மலாய்மொழி மற்றும் மலாய் இலக்கியம் சார்ந்த 15 இயக்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இருமொழிக் கொள்கை எதிர்ப்புக்குழு (BADAN BERTINDAK MENENTANG PROGRAM DLP & HIP) சீனக் கல்வியாளர்கள் அமைப்பு (DONG ZONG) மலேசியத் தமிழ்க் காப்பகம், தமிழ் அறவாரியம், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு இன்னும் பல அமைப்புகள் மிக மிக உறுதியாக எதிர்க்கும் இந்த இருமொழிக் கொள்கையை மலேசியக் கல்வி அமைச்சு உடனடியாகக் கைவிட வேண்டும்.
இந்தத் தலைமுறையில் தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் நாம் இணைந்து காப்பாற்ற வேண்டும்! நம்மால் இணைந்தால் காப்பாற்ற முடியும்! இல்லாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அன்பான குழந்தைகள் தாய்மொழிக்காகவும் இன அடையாளத்திற்காகவும் பண்பாடு மீட்புக்காகவும் போராட்டம் நடத்தும் அவல நிலைமை ஏற்படும் தேவைதானா? சிந்தியுங்கள் என்கிறார் நாக பஞ்சு.

நமது குழந்தைகளுக்குச் சிறப்பான, பாதுகாப்பான, முழு உரிமை உள்ள எதிர்காலத்தை நாம்தான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்..! இது இக்காலத்தின் கட்டாயம்..! இதனை நாம் இணைந்து செய்யாவிட்டால் நமது குமுகாயத்திற்கு நாமே செய்யும் துரோகமாகிவிடுமென மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழக தலைவரும், பெட்டாலிங் செயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான நாக.பஞ்சு குறிப்பிட்டார்.