மாணவர்கள் குண்டர்தனத்திற்கு, கல்வி முறையும் காரணம் – கே.எஸ். பவானி

gang 24கிள்ளான் வட்டாரத்தில் 18 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டது சமீப காலத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், அனைத்து தரப்பினர்களின் கவனத்தையும் மீண்டும் பள்ளி மாணவர்கள் குண்டர்கும்பலில் ஈடுபடும் பிரச்சனையின் பக்கம் திருப்பியுள்ளது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. குண்டர்கும்பல்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவது, பல காலமாக பள்ளிகளிலும் பள்ளிக்கு வெளியிலும் வேரூன்றி இருக்கிறது. இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற பிறகுதான் இது ஒரு பெரும் பிரச்சனையாக நமக்கு தெரிகிறது.

எல்லா தரப்பினரும் தம் பலவீனங்களை மறைக்க, மற்றொரு தரப்பினரைச் சுட்டிக்காட்டுவதே இங்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. பிள்ளைகளுக்கு நல்வழி காட்டுவதில் பெற்றோர்கள் தவறிவிட்டனர் என்று இறுதியில் எல்லா குற்றங்களும் பெற்றோர்கள் மீதே சுமத்தப்படுகின்றன. தங்கள் குழந்தைகளைக் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ளவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

bawaniஇருப்பினும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, மாணவர் சமூகம் தினமும் 6 முதல் 8 மணி நேரத்தைப் பள்ளிகளில்தான் கழிக்கின்றது. இதில் சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்புகள் அல்லது புறப்பாடத்திட்ட நடவடிக்கைகளில் கலந்துகொள்வது சேர்க்கப்படவில்லை. ஆக, பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையிலான உறவு பிரிக்க முடியாத ஒன்று. இந்தக் கூற்று பள்ளித் தரப்பினர் மீது பழி சுமத்தும் நோக்கம் கொண்டது அல்ல. மாறாக, மாணவர்கள் குண்டர்கும்பல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்ட, நாட்டின் கல்வி முறையும் ஒரு காரணமா என்ற கேள்வியை நம்மிடையே எழுப்புகிறது.

நம் நாட்டின் கல்விமுறை அதிகபட்ச “தேர்வு சார்புடையது”, அதாவது மாணவர்களின் சாதனை மதிப்பீடு, நினைவாற்றல் போன்றவை தேர்வு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மிக எளிய உதாரணம், மழலையர் / பாலர் பள்ளியில் படிக்கும் 5 வயது குழந்தைக்கு 10 முதல் 16 பயிற்சி புத்தகங்கள் வரை கொடுக்கப்படுகின்றன. தினந்தோறும் 5 முதல் 10 பயிற்சிகள் வீட்டுப் பாடமாக கொடுக்கப்பட்டு, அவை மறுநாளுக்குள் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இது முற்றிலும் உண்மையான விஷயம். புதிதாக பாலர்பள்ளியில் நுழையும் குழந்தைகளுடையப் பெற்றோர் பலரின் மனக்குமுறல் இதுவாகும். என்ன விதமான கல்விமுறை நம் நாட்டில் அமல்படுத்தப்படுகிறது? விளையாடவும் பிறருடன் பேசிபழகவும் வேண்டிய இளம் வயதில், எதற்காக அவர்களை இயந்திர மயமான ஒரு கல்வி முறையால் அழுத்த வேண்டும்?

Perkasaonestreamschool1உலகிலேயே மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடு பின்லாந்து. ஏழு வயதில் கட்டாயக் கல்விக்குப் போகும் வரையில், குழந்தைகள் விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் எனும் ஒரு நாட்டைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் பிறகு, 16 வயது வரை , தேர்வுகள் மற்றும் கல்விசார் தரநிலையற்றக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட பள்ளிகளில், எந்த ஒரு விதிவிலக்கும் இல்லாமல் அவர்கள் பயில வேண்டும். 16 வயதை அடைந்த ஒரு மாணவன் தம் படிப்பைத் தொடர, கல்வி செயல்திறன் அடிப்படை அல்லது தொழிற்சார் கல்வி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இரண்டுமே பொதுவாக மூன்று ஆண்டுகள் படிப்பு. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் தகுதியை இவை உருவாக்கும்.

பின்லாந்து நாட்டில் பள்ளிக் கட்டணம் செலுத்துவது ஒரு குற்றமும் சட்டவிரோதமும் ஆகும். அங்கு பாலர்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியோடு எல்லா மாணவர்களுக்கும் இலவச உணவும் வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து, உட்புறங்களில் வாழும் மாணவர்களுக்கு இலவசப் போக்குவரத்தையும் அந்நாட்டு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பின்லாந்து நாட்டில் மாணவர்கள் தங்கள் கல்வித் திறமை அடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கப்படுவதில்லை, மாறாக திறன் ஆற்றல் அடிப்படையில் குழுக்களாகச் சேர்க்கப்படுகின்றனர். பரிசோதகர்கள் இல்லை; 18 வயது வரை தேர்வுகள் இல்லை; பள்ளி அட்டவணை இல்லை, தனியார் கல்விக்கூடங்கள் (டியூசன் செண்டர்கள்) இல்லை, பள்ளிச்சீருடை இல்லை. ஆசிரியர்களை, அவர்களின் முதற்பெயரை வைத்தே குழந்தைகள் அழைக்கின்றனர். 15 வயதுடைய மாணவர்களுக்கு ஓர் இரவில் 30 நிமிடங்களுக்கு மேற்போகாத வீட்டுப்பாடம் மட்டுமே கொடுக்கப்படுகின்றது.

இது போன்ற கல்வி முறையைக் கவனிக்கும் போது, புத்தகத்தைப் படிக்காமல் தேர்வும் எழுதாமல் மாணவர்கள் எப்படி புத்திசாலிகள் ஆவார்கள் என்று பலருக்குக் கேள்விகள் எழலாம். பின்லாந்து நாட்டின் கல்வியறிவு விகிதம், அதாவது, வாசிப்பு, எழுத்து, புரிந்துகொள்ளும் திறன் 100%. மலேசியாவில் 94.6%, ஆக, 96.7%-ஆக இருக்கும் நமது அண்டை நாடான தாய்லாந்தைவிட நாம் கீழே உள்ளோம். மேற்குறிப்பிட்ட எடுத்துகாட்டுகள், நம் நாட்டு கல்வி முறையில் ஏதோவொரு பெரிய பிரச்சனை உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 5 அல்லது 6 வயது பாலர்பள்ளி முதல் 17 வயது (எஸ்.பி.எம்) அல்லது 19 வயது (எஸ்.டி.பி.எம்/மெட்ரிகுலேஷன்/ஏ லெவல்) வரை, கல்வி மற்றும் தேர்வு சார்ந்த கல்விமுறையால் மாணவர்கள் ஒரு சிறை வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபட்ட தனித்துவம், சிறப்புத் தன்மை மற்றும் ஆர்வம் உண்டு. மாணவர்களும் அதுபோல்தான், படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்தி உயர்ந்த புள்ளிகளைப் பெறுவார்கள். அதேசமயம், படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்கள் ஓரங்கட்டப்பட்டு அறிவற்றவர் அல்லது முட்டாள் என்று வகைப்படுத்தப்படுவர். இந்தக் கல்வி முறையைத்தான் நமது அரசாங்கம் பெருமிதத்தோடு, மலேசிய நாட்டின் கல்வி முறை மிகச் சிறந்தது என்று இன்னமும் கூறுகிறது. துரதிருஷ்டவசமாக இந்தக் கல்விமுறை மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு,  சந்தையில் இயந்திர மனிதர்களை மட்டுமே உருவாக்குகிறது என்பதைக் கவனிக்க தவறிவிட்டது. பள்ளி என்பது சிறை, பல்கலைக்கழகம் ஒரு தொழிற்சாலை, மாணவர்கள் எதிர்காலச் சந்தைப் பொருள்கள் என்ற கூற்று இங்கு மெய்பிக்கப்பட்டுள்ளது.

chinese and indian education in malaysiaசரி, கல்வி முறைக்கும் குண்டர்தனத்திற்கும் என்ன சம்பந்தம்? குண்டர்தனத்தில் ஈடுபடும் பெரும்பான்மையான மாணவர்கள், பள்ளியில் ஓரங்கட்டப்பட்டு, புத்திசாலிகள் அல்லவென்று வகைப்படுத்தப்பட்ட குழுவைச் சார்ந்தவர்கள். புத்திசாலி மாணவர்கள் மீது ஆர்வமும் கவனமும் செலுத்தும் கல்விமுறையால், பின்தங்கிய மாணவர்கள் அவர்கள் மீது கவனமும் மரியாதையும் கொடுக்கும் குழுக்கள் அல்லது நடவடிக்கைகளைத் தேடி சேர்ந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அங்குதான் பின்தங்கிய மாணவர்களின் குண்டர்கும்பல் நடவடிக்கைகளின் ஈடுபாடும் தொடங்குகிறது. அங்கே அவர்களுக்குப் படிக்க வேண்டிய அழுத்தம் இல்லை. மாறாக, உடற்சார்ந்த நடவடிக்கைகள் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

ஆரம்பத்திலிருந்தே, படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களுக்கு விளையாட்டுத் துறை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி இருந்தால், இந்த மாணவர்களும் அவர்களுக்குப் பிடித்த துறையில் சிறப்பான மாணவர்களாக தேறி இருக்கக்கூடும். மலேசியாவில் அரசாங்கப் பள்ளி மாணவர்களுக்கு விரும்பிய துறைகளைத் (தொழில்நுட்பம் அல்லது தொழில்முறை) தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை. காரணம் அனைத்து மதிப்பீடும் கல்விசார் தேர்வு முடிவுகள் வழி அளவிடப்படுகிறது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் எல்லா தரப்பினர்களும் வெற்றியாளர்கள் ஆவதற்கு ஆளாய் பறக்கிறார்கள். கல்வியின் முகான்மை இலக்கையும் பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையும் மறந்து பற்பல கோணங்களிலிருந்து வரும் அழுத்தங்களால், சிறந்த பள்ளிக்கூடம், சிறந்த மாணவர், சிறந்த ஆசிரியர் என்ற நிலையில் இன்று குறுகிப்போய் நிற்கிறது, மலேசிய கல்வி முறைமை.

மலேசியாவில் இடைநிலை தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பள்ளிகள் மொத்தம் 91 மட்டுமே இருக்கின்றன. இந்த எண்ணிக்கையை 50.7 இலட்சம் மாணவர்களோடு ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவாகும். மாணவர்கள், அவர்களின் திறமை மற்றும் ஆர்வத்திற்கேற்ப, வழிகாட்டி, உருவாக்கப்பட வேண்டும். கல்வித் தேர்ச்சி விகிதம் என்ற அடிப்படையில் இல்லாமல், பல்வகைப்பட்ட கல்வி முறையின் மூலம் தகுதி, திறமை மற்றும் செயல்திறன் மிக்க மாணவர்கள் உருவாக்க வேண்டும். தொடக்கத்திலேயே, மாணவர்கள் தங்களையும் தங்கள் திறனையும் அடையாளங்காண பல்வகைப்பட்ட கல்வி முறை உதவுகிறது. ஆக, ஆரம்ப நிலையிலேயே சுய விழிப்புணர்வு கொண்ட மாணவர்கள், குண்டர்கும்பல் சகவாசம் போன்ற ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவர்.

பெரும்பாலான மாணவர்கள் குண்டர்கும்பலில் ஈடுபடுவதற்கான காரணம், தத்தம் பள்ளிகளில் பெருமையும் அங்கீகாரமும் கிடைக்காததே ஆகும். தளிரில் இருந்துதான் மூங்கிலை வளைக்க வேண்டும் எனும் பழமொழிக்கு ஒப்ப மாணவர்களின் திறன் மற்றும் ஆர்வம் அறிந்து, ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நல்வழி காட்டினால், நிச்சயமாக அவர்கள் ஒரு மிக நல்ல வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்து தனக்கும் நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக இருப்பர்.

ஆக, மாணவர்கள் மத்தியில் இன்று குண்டர்கும்பல் சகவாசம் தலைவிரித்தாடுவதற்கு பள்ளிக்கூடங்களின் பலவீனமான கல்வி முறையும் ஒரு முக்கியக் காரணம் என்பதை நான் வலியுறுத்துகிறேன். எனவே, இந்த விஷயத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, பல்வகைப்பட்ட கல்விமுறையை அறிமுகப்படுத்த வழிமுறைகளை எடுக்க வேண்டும். மலேசிய மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு, கல்விமுறைமையில் மாற்றங்கள் செய்ய வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது.

வழக்கறிஞரான  கே.எஸ். பவானி கம்பார்   பி.எஸ்.எம்  கிளையின் செயலாளர் ஆவார்.