இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இதர சமயங்களை அவமதிக்காதீர்

noinsulttootherreligionsஇஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீருக்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட தகுதி (பிஆர்) அளிக்கப்பட்டிருப்பதைத் தற்காப்பதற்கு இதர சமயங்களை அவமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று இன்னொரு சக போதகர் வான் ஜி வான் ஹுசேன் அறிவுறுத்துகிறார்.

“ஹிண்ட்ராப் (பெசத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா) ஸக்கீர் மலேசிய குடிமகனாவதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“நாம் ஹிண்ட்ராப் மீது கோபப்படலாம், ஆனால் அது மற்றவர்களின் சமயங்களை அவமதிக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது”, என்று வான் ஜி இன்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இப்பதிவில் இதே விவகாரம் பற்றிய அவரது முன்னைய அறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிண்ட்ராப் ஸக்கீருக்கு பிஆர் தகுதி அளிக்கப்பட்டிருப்பதைக் கடுமையாக குறைகூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலாய்-முஸ்லிம் அரசுசார்பற்ற அமைப்புகள் ஹிண்ட்ராப்பை இஸ்லாம் பெடரேசனின் சமயம் என்ற தகுதிக்கு சவால்விட எத்தனிக்கும் ஒரு தீவிரவாத அமைப்பு என்று குற்றம் சாட்டியுள்ளன.

இந்தியாவில் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஸக்கீருக்கு மலேசியாவில் பிஆர் தகுதி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

குரான் போதனைப்படி, முஸ்லிம்கள் மற்ற சமயங்களை அவமதிக்கக்கூடாது, அதுபோலவே மற்ற சமயங்களைப் பின்பற்றுபவர்களும் இஸ்லாத்தை அவமதிக்கக்கூடாது என்று வான் ஜி அவரது முன்னைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

எனினும், இப்படிக் கூறுவதால் தாம் ஸக்கீரை ஒரு மலேசிய குடிமகனாக நிராகரிப்பதாக பொருள்படாது, ஏனென்றால் அவர் ஒரு திறமையான போதகர் என்று வான் ஜி கூறினார்.

“இந்தச் சிறப்புரிமை (மலேசியக் குடியுரிமை பெறுவது) ஸக்கீருக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்று நான் எண்ணவில்லை, மாறாக நாட்டுப்புறங்களில் வாழும் ஏராளமான இந்தியர்களுக்கு இன்னும் அவர்களுடைய அடையாள அட்டைகள் கொடுக்கப்படவில்லை என்பதோடு அவர்கள் அரசாங்கத்தின் தீவிர கவனத்தைப் பெற வேண்டும்”, என்று வான் ஜி மேலும் கூறினார்.

“மலேசியாவில் சமய பாரபட்சம்”

வான் ஜி மலேசியாவில் காணப்படும் சமயப் பாரபட்சத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கு முஸ்லிம்கள் மற்றவர்களை மத மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுக்கிறார்கள், ஆனால் அந்த உரிமை முஸ்லிம்-அல்லாதவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

மற்போரில் ஒருவரின் கைகளைக் கட்டி விட்டு மற்றொருவரிடம் குத்து வாங்க வைப்பது நியாயமல்ல என்று கூறிய வான் ஜி, இங்கு இதுதான் நடக்கிறது: ஸக்கீர் போதிப்பதற்கு இடமளிக்கப்படுகிறது, ஆனால் வேறொருவருக்கு அவர் பக்கத்திலிருந்து போதிப்பதற்கு இடமளிக்கப்படவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.

முஸ்லிம் அல்லாதவர்களால் மத மாற்றம் செய்வதற்கு மலேசியாவில் இருக்கும் கட்டுப்பாடுகள் நாட்டிலுள்ள ஏராளமான இந்துக்களின் அதிருப்திக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் நினைக்கிறார்.

இஸ்லாமிய சமயம் ஓர் “உண்மையுள்ள சமயம்” என்று அதன் மீது மிக வலிமையான நம்பிக்கை கொள்வதோடு வேறு எந்த ஒரு சமயத்தை பின்பற்றுபவர்கள் அவர்களுடைய சமயத்தை போதிக்க அனுமதிக்க வேண்டும் என்று வான் ஜி முஸ்லிம்களை கேட்டுக்கொண்டார்.

“(மத மாற்றம் செய்யவிடாமல் இதர சமயங்களுக்கு) தடை விதிப்பது, குரானில் போதிக்கப்பட்டுள்ளபடி,    தீவினை தோற்கடிக்கப்படும்  என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதை மறைமுகமாகக் காட்டுகிறது.

“இஸ்லாம் ஓர் உண்மையுள்ள சமயம் என்பதில் நம்பிக்கையுடைய ஒரு முஸ்லிம் என்ற முறையில், நான் மற்ற சமயங்களின் போதனைகளை கேட்பதற்கு அச்சப்பட வேண்டும் என்று அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு கற்பிக்கக்கூடாது என்று ஆலோசனை கூறுகிறேன்.

“மாறாக, அவர்கள் பயிற்சி பெற்ற மற்றும் அறிவுத்திறம் வாய்ந்த இஸ்லாமிய போதகர்களின் நிலையினை மேம்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டும்.

“அரசாங்கத்திற்கு இக்கருத்து மன நிறைவு அளிக்காமல் இருக்கலாம், இது நடந்தால் மலேசியாவிலுள்ள முஸ்லிம்கள் கண்மூடித் தனமான வெறுப்புக்கு மாறாக அறிவுத்திறனுக்கான அடித்தளத்தைப் பெறுவர் என்று நான் நம்புகிறேன்”, என்று வான் ஜி மேலும் கூறினார்.