கிட் சியாங் போரெக்ஸ் பணிப்படையை எதிர்கொள்கிறார்

 

kitsiangforexடிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் 1991 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பேங்க் நெகாராவுக்கு அந்நிய நாணயப் பரிவர்த்தனையில் ஏற்பட்ட இழப்பை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிப்படையின்முன் தோன்றவிருக்கிறார்.

அந்தக் காலக்கட்டத்தில் எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த கிட் சியாங் ஏழு-உறுப்பினர்களைக் கொண்ட பணிப்படையை எதிர்கொள்ளவிருப்பதாகக் கூறினார். அக்குழுவிற்கு அரசாங்க முன்னாள் தலைமைச் செயலாளர் முகமட் சிடெக் ஹசான் தலைமையேற்றிருக்கிறார்.

இருபது ஆண்டுக்களுக்கு மேலாக பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரணை வேண்டும் என்று தாம் கோரி வந்துள்ளதாக கிட் சியாங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“ஏப்ரல் 1994 இல் நாடாளுமன்றத்தில் பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு குறித்து விசாரிக்க ஓர் அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று எனது உரையில் கூறியிருந்தேன்”, என்று கூறிய கிட் சியாங், தாம் அன்று என்ன வேண்டும் என்று கேட்டிருந்தேனோ அதுதான் இந்த பணிப்படையின் இப்போதைய நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

விசாரிக்க வேண்டிய பலவற்றுள் ஒன்று 1992 ஆம் ஆண்டிலிருந்து பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரிம30 பில்லியனைத் தாண்டியிருக்குமா என்பதாகும் என்றாரவர்.

மேலும், இந்தப் பேரிழப்புகள் பற்றி வெளிவந்துள்ள பல பொருந்தாத மற்றும் முரணான விளக்கங்கள் மற்றும் நிதி சம்பந்தப்பட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

இதற்கு மேலும், பேங்க் நெகாரா எப்படி இவ்வளவு பெரிய பேரிழப்புக்கு ஆட்பட்டது என்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றாரவர்.

மிக அவசரமானது 1எம்டிபி

இவற்றையெல்லாம்விட இப்போததைக்கு மிக அவசரமானது 1எம்டிபி ஊழல் குறித்து விசாரிக்க ஓர் அரச ஆணையம் அமைக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை கிட் சியாங் வலியுறுத்தினார்.