ஆகா! மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு மே தினம் எவ்வளவு அமைதியாக இருக்கிறது, பிரதமர் புளகாங்கிதம்

Maydaynajibஇதர சில நாடுகளைப் போலல்லாமல், இந்நாட்டில் தொழிலாளர் தினம் (மே தினம்) எவ்வளவு அமைதியாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பிரதமர் நஜிப் மலேசியர்களுக்கு நினைவுறுத்தினார்.

இதில் சுவாரசியமானது இங்கு இந்நாள் அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் கொண்டாடப்படுகிறது. வேறு சில நாடுகளில் இந்நாள் சர்ச்சைகள், நேரடித் தாக்குதல்கள், ஏன் கலவரங்கள் போன்றவற்றால் கலங்கப்படுத்தப்படுகிறது என்று நஜிப் இன்று புத்ராஜெயா பிஐசிசி மையத்தில் நடைபெற்ற தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் பேசுகையில் கூறினார்.

இது தொழிற்சங்கம், முதலாளிகள் மற்று அரசாங்கம் ஆகிய முத்தரப்பினர்களுக்கிடையில் நிலவும் நெருங்கிய உறவைத் தெளிவுப்படுத்துகிறது என்றாரவர்.

மலேசியாவில் தொழிலாளர் தினம் அமைதியான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது என்று கூறிய பிரதமர், அன்றைய தினத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் விடுமுறையில் சென்று விடுகின்றனர் என்றார்.

இவ்வாண்டு மே தின பேரணியை பேரணி என்று சொல்வதற்கில்லை, வெறும் 300 பேர் மட்டுமே பங்கேற்றனர். கடந்த ஆண்டில் 1,500 பேர் பங்கேற்றதாகவும் அதற்கு முந்திய ஆண்டில் 20,000 பேர் கலந்துகொண்டதாகவும் மதிப்பிடப்பட்டிருந்தது.