நாட்டின் 60 ஆண்டுகால சுதந்திரத்துக்குப் பின்னும் அடையாளப் பத்திரமற்ற மலேசிய இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதில் எவருக்கும் வெட்கமில்லை!

 

xavierஇந்த நாட்டுக்கான சுதந்திரப் பேச்சுவார்த்தைகள்கூட 13 ஆண்டுகளில் முடிவுற்றன. ஆனால்  இந்நாட்டின் சுதந்திரத்துக்கும் மேம்பாட்டுக்கும் உழைத்து உருக்குலைந்த இனத்தினர் ஐந்தாம்  மற்றும் ஆறாம் தலைமுறைக்குப்பின்பும், சொந்த நாட்டில் நாடற்றவர்களாக நடமாடும் அவலம் வேறு எந்த நாட்டில் நடக்கும் என்பதை எண்ணி மஇகா மட்டுமின்றி அனைத்து மலேசியர்களும் வெட்கப்பட வேண்டும்! வெட்கப்பட வேண்டும்!! வெட்கப்பட வேண்டும்!!!

 

நாட்டின் முன்னேற்றத்துக்கு அரசியல் நிலைத்தன்மை குறித்து உரை நிகழ்த்தும் மேதாவிகள், இந்தியர்களின் பொருளாதார மேம்பாடு என்ற திட்டவரைவை மூன்றாம் முறையாக அறிவித்துள்ள பிரதமர் நஜிப், புற்றுநோய் போன்று இந்தியர்களை வாட்டி வதைக்கும் அடையாளப்பத்திரங்கள் இல்லாதவர்களின் இன்னலைத் தீர்க்க, எட்டு ஆண்டுகாலப் பிரதமர் பதவி காலம் போதாத அல்லது பாரிசானின் 60 ஆண்டு ஆட்சிக்காலம்தான் போதவில்லையா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

நாட்டின் ஆரம்பகாலத் தலைமைத்துவம் சவாலாக எடுத்துக்கொண்ட வறுமை ஒழிப்பின் ஒரு பகுதிதான் இன்றைய பெல்டா நிலத் திட்டம். சுதந்திரத்துக்குப் பின் சுமார் 21 லட்சம் ஏக்கர் காட்டு நிலத்தை மேம்படுத்திச் செம்பனை மரங்களை நட்டுள்ளது. ஆனால் நாடற்ற நம்மவர்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?

 

அதாவது, ஒரு ஏக்கர் காட்டுநிலத்தை மேம்படுத்தி அதில் மரங்களை நட்டு வளர்ப்பதை விட, இந்தியர்களின் அடையாளப் பத்திர விவகாரத்துக்குத் தீர்வுகாண்பது கடுமையானதா? அல்லது அம்னோ அரசியல்வாதிகளின் மனம், காட்டு மண்ணைவிட மேம்படுத்தக்  கடுமையானது, வஞ்சகமானது என்பதை அது அனைவருக்கும் உணர்த்துகிறதா? இந்த அரசாங்கத்திடம் நேர்மையும், அதற்கான கடப்பாடும் அறவே இல்லை என்பதைத்தானே இவை நிரூபிக்கின்றன என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரான சேவியர்.

 

நான் அனுப்பினேன் 800 மனுக்கள்

 

“கடந்த 2012 செப்டம்பரில், நஜிப்பின் முதல்கட்ட மைடப்தாருக்கு, 800 விண்ணப்பங்களைத் தேசியப் பதிவு இலாகாவிற்கு நானே அனுப்பி வைத்தேன். ஆனால், இதுவரை அதற்கு என்ன நேர்ந்தது என்பததைக்கூட அறிவிக்கும் கடப்பாடின்றி இருக்கிறது தேசியப் பதிவு இலாகா, என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

பிரதமர்  அறிவித்துள்ள இந்த இரண்டாம்கட்ட பதிவினை மஇகாவிடம் முற்றிலும் விட்டுவிடாமல், அதில் தேசியப் பதிவு இலாகாவே முதன்மையாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இந்த முறையாவது இவ்வியக்கம் வெற்றிபெற, தேசியப் பதிவு இலாகா இத்தனை இலட்சம் மக்களுக்கு இந்தக் காலக்கட்டதிற்குள் அடையாளப் பத்திரம் என்ற குறுகியகால இலக்கு நிர்ணயித்துச் செயல் பட வேண்டும் . தவறினால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளைப் பணி மாற்றம் செய்யவும் திறமையற்றவர்களின் பதவி உயர்வை தடுக்கவும் ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்று என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

தவறினால், தேசியப் பதிவு இலாகா என்பதைவிட, அதனைத் தேசியப் பதிவு தடுப்பு இலாகா என்று பெயர் மாற்றி கொள்ளட்டும் என்று இடித்துரைத்தார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

அம்னோவும் பாரிசானும் வகுத்த கொள்கைகள்  மற்றும் குறிக்கோள்கள்தான் இந்நாட்டு இந்தியர்கள் அடையாளப் பத்திரங்கள் பெறப் பெரிய இடையூறாக உள்ளன என்பதை நாம் உணரத் தவறக்கூடாது. ஒருபொறுப்பானஆளும்கட்சி, இந்நாட்டில் பிறந்து அடையாளப் பத்திரங்கள் இன்றி அல்லல்படும் சக மலேசியர்களைப் பற்றி கவலைப்பட்டிருக்க வேண்டிய அம்னோ, ஸக்கீர்  நாய்க் போன்ற  அன்னியர்கள் மீதே அதிகம் ஆர்வம் காட்டுகிறது என்பதை அதன் செயல்கள் தொடர்ந்து காட்டுகின்றன.

 

இதற்காகவே, நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். ஓட்டுக்கு அன்னியர்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் பாரிசானின்  கொள்கையைக் குப்பைக்கு அனுப்ப வேண்டியது நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும்.

 

இதுவரை அரசாங்கத்தின் இயலாமையால், அடையாளப் பத்திரமின்றி துன்பத்தை அனுபவிக்கும் குற்றமற்ற நமது சகோதர சகோதரிகளுக்காக, ஏன் நாமும் களத்தில் இறங்கக் கூடாது?

 

எல்லா இடங்களிலும் உள்ள அடையாளப்பத்திரமற்ற இந்தியர்களை நாமும் அடையாளம் காணுவோம். இந்த மைடப்தாரில் பதிவு பெற அவர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் டாக்டர் சேவியர்  ஜெயக்குமார்.

 

தமது  அலுவலகம் வழக்கம் போல் தொடர்ந்து அடையாளப்பத்திரமற்ற மக்களின் பதிவினை மேற்கொள்ளும். நியாயப்பூர்வமான உரிமை மறுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு தமது அலுவலகம் அதன் சேவையை வழங்கும் என்றார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.