எப்போதுமே, மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடு – கி.சீலதாஸ்.

Islamic stateமலேசிய ஓர் இஸ்லாமிய நாடு என்ற வகையில்தான் செயல்படுகிறது. இஸ்லாம் என்பது மதம். ஆனால், இஸ்லாமிய அரசியல் என்பதுதான் இப்போது நமது நாட்டின் ஆட்சியைக்  கைப்பற்றி வருகிறது. அடுத்த தேர்தல் இதை மேலும் வளர்க்குமா அல்லது கட்டுப்படுத்துமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும். இக்கட்டுரையின் படைப்பாளர், சீலதாஸ் சில முக்கிய விவாதங்களை முன்வைக்கிறார் – ஆசிரியர் . 

மலேசியா  இஸ்லாமிய  நாடா?  இல்லை  என்று  ஒரு  சாராரும்;  ஆமாம்  என்று  மற்றொரு  சாராரும்  சொல்கிறார்கள்.  இந்தச்  சர்ச்சை  ஓய்ந்தபாடில்லை.  இந்தப்  பிரச்சினையை  அரசியலாக்குவதில்  செலுத்தப்படும்   உற்சாகம்,  புலமை,  விவேகம்,  போன்றவை  மத,  இன  உணர்வில்  பிளவை  ஏற்படுத்த  உதவுகிறதே  அன்றி  மத  நல்லிணக்கத்திற்கு  உதவுவதாகத்  தெரியவில்லை.

சமீபத்தில்  முன்னாள்  மலேசியாவின்  தலைமை  நீதிபதி  துன்  ஃபைருஸ்   ஷேக்  அப்துல்  ஹலீம்,  “பொது  சட்டத்துக்கு  மேலாக  இஸ்லாமியச்   சட்டம்  முன்னிடம்  வாய்ந்தது”  என்று  குறிப்பிட்டுள்ளார்.  சட்ட  வல்லுநர்,  நாட்டின்  தலைமை  நீதிபதியாக  இருந்தவர்  இவ்வாறு  ஒரு கருத்தரங்கில்  சொன்னது  அவர்  சொந்த  கருத்தாக  இருக்கலாம்;  ஆனால்,  சொல்லப்படும்  கருத்து  நியாயமானதாக  இருக்கவேண்டும்.

islmaic 3மேலும்  ஒரு  நீதித்துறையின்   உச்சப்  பதவியை  வகித்தவர்  தம்  கருத்துக்களை  வெளியிடும்போது  கவனமாக  இருக்க வேண்டும்   என்பதோடு  தன்  புலமையை,  அனுபவத்தை  நீதிநிறைந்த  மனதோடு  வெளிப்படுத்துவதைத்தான்  அரங்கத்தில்  கூடியிருக்கும்  பார்வையாளர்கள்,  மற்றும்  பொதுவாக  மக்கள்  உன்னிப்பாக  கவனிப்பார்கள்.  எனவே,  அவர்  சொன்னதில்  நியாயம்  இருக்கிறதா  என்பதைவிட  சரியான  கருத்தா  என்பதை  கவனிக்க  வேண்டும்.  அது  அவருடைய  கருத்து  என்றால்  பிரச்சினை  கிடையாது.  ஆனால்,  அதுதான்  சட்டம்  என்றால்  அதுதான்  பிரச்சினையைக்  கிளப்புகிறது.

அரசமைப்புச்  சட்டத்தின்  3(1)ஆம்  பிரிவானது  “இஸ்லாம்  கூட்டரசின்  சமயம்”  என்கிறது.  இந்தப்  பிரிவை  இணைத்தப்போது  மலாய்  சுல்தான்கள்  தரப்பில்  எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது.  கொடுக்கப்பட்ட  விளக்கம்  என்ன?  இது  வெறும்  இஸ்லாமிய  சம்பிரதாயத்தைப்  பேணப்படுவதற்கு   உதவும்  என்று  கொடுக்கப்பட்ட  விளக்கத்தை  ஏற்றுக்கொண்டனர்.  ஆக,  இஸ்லாம்  மலேசிய  கூட்டரசின்  சமயம்  என்பதால்  அது  இஸ்லாமிய  நாடோ  இஸ்லாமிய  குருமார்களின்  ஆட்சியை  குறிக்கும்  நாடாகவோ  உறுதிப்படுத்தவில்லை.

மலாயாவின்  சுதந்திரத்திற்கும்  மலேசியா  அமைவதற்கும்  முன்னோடியாக  இருந்த  இந்நாட்டின்  முதல்  பிரதமர்  துங்கு  அப்துல்  ரஹ்மான்  மலாயா,  மலேசியா  இஸ்லாமிய  நாடல்ல  என்று  ஆணித்தரமாகக்  கூறினார்.  வலியுறுத்தினார்.  அவரைப்போலவே,  முன்னாள்  பிரதமர்  துன்  ஹூசேன்  ஓனும்  உறுதியாக   இருந்தார்.

மலாயாவின்  சுதந்திரத்திற்கு  முன்னும்  பின்னும்  மலேசியாவின்  இணைப்புக்கு முன்னும்  பின்னும்  நடந்த  பேச்சுவார்த்தையில்  மலாயா,  பின்னர்  மலேசியா  சமய  சார்பற்ற  நாடு  என்று  சொல்லப்பட்டது,  உறுதி   அளிக்கப்பட்டது.  அதுமட்டுமல்ல  அரசமைப்புச்  சட்டத்தின்  3(1)ஆம்  பிரிவு   இஸ்லாம்தான்  கூட்டரசின்  சமயம்  என்று  சொன்னதே  தவிர  அதுமட்டும்தான்  கூட்டரசின்  சமயம்  என்று  சொல்லாததைக்  கவனிக்கவேண்டும்.

islamஅதுமட்டுமல்ல,  இஸ்லாம்தான்  கூட்டரசின்  சமயம் என்று  சொன்ன  அதே  மூச்சில் – அதே  வரியில் – மற்ற  சமயங்களும்  கூட்டரசின்  எந்தப்  பகுதியிலும்   அமைதியாகவும்  சமாதானத்துடனும்  இயங்கலாம்  என்கிறது.  இதன்  அர்த்தம்  என்ன?  இதன்  நோக்கம்  என்ன?  மலேசியா   இஸ்லாமிய   நாடு  என்றால்  மற்ற  சமயங்களுக்கு  இடம்  இருக்காது.  பிற  சமயங்களும்  இயங்கலாம்,  சமாதானத்தோடு  பேணப்படலாம்,  வழிபடலாம்  என்பதானது  அரசமைப்புச்  சட்டத்தின்  சமயச்  சார்பற்ற  தரத்தை  தெளிவுப்படுத்துகிறது.

இஸ்லாமிய  சட்டத்திற்கு  முதலிடம்  தரப்படுகிறது  அல்லது  தரப்படவேண்டும்  என்கின்றபோது,  அரசமைப்புச்  சட்டத்தின்  4(1) ஆம்  பிரிவு,  இந்த  அரசமைப்புச்  சட்டம்  கூட்டரசின்   ஒப்புயர்வற்றதாகும்.  மெர்டெக்கா  தினத்திற்குப்  பிறகு  இயற்றப்படும்  சட்டம்  இந்த  அரசமைப்புச்  சட்டத்திற்குப்  புறம்பாக  இருப்பின்  அது  செல்லுபடியாகாது  என்கிறது.