சுபாங் பள்ளிவாசலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

pkrசுபாங்   எம்பி   சிவராசா  ராசையாவைப்  பேசுவதற்கு    அனுமதித்த   சுபாங்  பள்ளிவாசலுக்கு    எதிராக    நடவடிக்கை   எடுக்குமாறு   சிலாங்கூர்    சுல்தான்   மாநில   சமய   விவகாரத்   துறை(ஜயிஸ்)யைப்   பணித்துள்ளார்.

சுல்தான்   ஷராபுடின்  இட்ரிஸ்   ஷாவின்   தனிச்   செயலாளர்    முனிர்   பானி  வழியாக    அவ்வுத்தரவு    வந்தது   என  ஜயிஸ்   இயக்குனர்   ஹரிஸ்   காசிம்   கூறினார்.

“நேற்று   சுல்தான்  சலாஹுடின்  அப்துல்    அசீஸ்  ஷா    பள்ளிவாசலில்    நோன்பு   துறப்பு   நிகழ்வில்   உரையாற்றிய    சிலாங்கூர்   இஸ்லாமிய   மன்றத்   தலைவர்    முகம்மட்   அட்ஸிப்    முகம்மட்  இசா  கூறியதுபோல்   அதிகாரமற்ற   பேச்சாளர்கள்   பேசுவதற்கு    அனுமதிக்கக்கூடாது   என்ற  விதிமுறையை   எல்லாப்  பள்ளிவாசல்களுமே  பின்பற்ற  வேண்டும்”,  என்று   ஹரிஸ்   கூறியதாக   நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்   செய்தி   தெரிவித்தது.

சிவராசா   சுபாங்   கம்போங்  மலாயு    மஸ்ஜித்   அன் -நூரில்  அப்பள்ளிவாசலின்    உதவிக்காக   ரிம71,000  காசோலை  வழங்கிய   நிகழ்வில்  உரையாற்றினார்.

தம்முடைய  உரை   அரசியல்   செராமா   அல்ல   என்று  குறிப்பிட்ட    அவர்,      சிலாங்கூர்  அரசு   பள்ளிவாசல்களின்    நலனுக்காக    செய்து  வரும்   காரியங்களை   மட்டுமே   அதில்  விவரித்ததாகக்  கூறினார்.