கிட் சியாங்: தோல்வி கண்ட நாடாகிக் கொண்டிருப்பது மலேசியா, பினாங்கு அல்ல

 

NotpenangbutmalaysiaafailedstateLimபினாங்கு ஒரு தோல்வி கண்ட மாநிலமாகப் போகிறது என்று பாரிசான் கூறியிருப்பதை டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார்.

“இதை நான் படித்த போது எனக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

“பிஎன் தலைவர்கள் இதை மனப்பூர்வமாகத்தான் சொல்கிறார்களா? கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ், கெடா, பகாங், மலாக்கா, நெகிரிசெம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களைவிட பினாங்கு மோசமானதா?, என்று கிட் சியாங் கேட்கிறார்.

பாரிசானின் வியூகத் தொடர்புகள் குழு, பினாங்கு மாநிலம் மேலும் மேலும் அதிகரிக்கும் கடன்கள் காரணமாக ஒரு தோல்வி கண்ட அரசாக ஆகிக்கொண்டிருக்கிறது என்று விடுத்திருந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய கிட் சியாங் இவ்வாறு கூறினார்.

கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான கிட் சியாங், மலேசியாதான் ஒரு திவாலான நாடாகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும், விவரமறிந்த பெரும்பான்மையான மலேசியர்கள், பிஎன் உறுப்பினர்கள் உட்பட, இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றாரவர்.