மகாதிர்: ரோஸ்மா டிஓஜேமீது வழக்கு தொடுக்கலாமே

drmபிரதமரின்   துணைவியார்    ரோஸ்மா    அவர்மீது   அவதூறு   கூறப்படுவதாக    நினைத்தால்    அமெரிக்க    நீதித்துறைமீது     வழக்கு    தொடுக்கலாம்   என  முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    கூறினார்.

ரோஸ்மாமீது    அவதூறு   கூறுவோருக்கு    எதிராக    சட்ட    நடவடிக்கை     எடுக்கப்படும்     என    அவரின்   வழக்குரைஞர்கள்     எச்சரித்திருப்பதை    அடுத்து   பார்டி   பிரிபூமி   பெர்சத்து    மலேசியா   நிர்வாகத்    தலைவர்    டாக்டர்   மகாதிர்   முகம்மட்   இவ்வாறு   கூறினார்.

“அமெரிக்க    நீதித்துறை    பதிவு   செய்துள்ள    வழக்கில்   குறிப்பிடப்பட்டிருக்கும்   நகைகள்   தொடர்பில்    ரோஸ்மாமீது   குற்றஞ்சாட்டுவோருக்கு   எதிராக    அவர்   சட்ட     நடவடிக்கை     எடுப்பார்   என்று    எச்சரிக்கை    விடுக்கப்பட்டிருப்பதாகக்    கேள்விப்படுகிறேன்.

“அவர்  ஏன்     டிஓஜே- க்கு   எதிராக   இந்த   எச்சரிக்கையை   விடுக்கவில்லை?”,  என     மகாதிர்    அவரது   முகநூல்  பக்கத்தில்    பதிவேற்றியுள்ள   காணொளியில்    வினவினார்.

டிஓஜே   கடந்த   வியாழக்கிழமை    நீதிமன்றத்தில்   பதிவு  செய்த   மனுவில்,    “மலேசிய   முதன்மை   அதிகாரி”யின்   துணைவியார்,    1எம்டிபி-யுடன்   தொடர்புள்ள    ஜோ   லவ்   என்பவரிடமிருந்து    யுஎஸ்$22  மில்லியன்   பெறுமதியுள்ள   வைரக்கல்லைப்  பெற்றிருப்பதாகக்  கூறப்பட்டிருந்தது.

ஜோ  லவ்    1எம்டிபி-இலிருந்து   சுருட்டிய   பணத்திலிருந்து     எம்ஓ1-இன்  துணையாருக்காக   அந்த  வைரத்தை   வாங்கினார்   என்றும்   டிஓஜே   குற்றஞ்சாட்டியிருந்தது.

டிஓஜே ,   எம்ஓ1  யார்   என்று  அடையாளம்   கூறவில்லை.   அவர்   ரோஸ்மாவின்   மகன்   ரிஸா   அசீசின்   உறவினர்   என்று   மட்டுமே   கூறியிருந்தது.   ஆனால்,  பிரதமர்துறை    அமைச்சர்    அப்துல்   ரஹ்மான்   டஹ்லான்    எம்ஓ1   என்பது   நஜிப்தான்   என்று  கடந்த     ஆண்டு    கூறியிருந்தார்.

“அவதூறு   கூறுவோரை   விடப்போவதில்லை    என்கிறார்   ரோஸ்மா.   இது   அவதூறு   அல்ல   என்பதால்     எனக்குப்  பயமில்லை.   நான்   துணிந்துதான்  சொல்கிறேன்.   ஏனென்றால்   நான்  சொல்வது   உண்மை…….

“துணிச்சல்   இருந்தால்    வழக்கு   தொடுக்கட்டும்.   நான்  தயார்”,  என  மகாதிர்  காணொளியில்   கூறினார்.