சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: நெய்வேலியில் இருந்து குடிநீர் வருகிறது


சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: நெய்வேலியில் இருந்து குடிநீர் வருகிறது

semparambakkamசென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கும் நீராதாரமாக இருந்து வரும் 4 ஏரிகளும் வறண்டதால் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க நெய்வேலியில் இருந்து குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை நகர மக்களுக்கு தினமும் சுமார் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.

இந்த குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் பூர்த்தி செய்து வந்தன. இவை தவிர வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவை மூலமாகவும் சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உள்ள நீர் அளவு மளமளவென குறைந்தது. கடும் வெயிலால் ஏற்பட்ட வறட்சி காரணமாக வீராணம் ஏரி வறண்டது. இதனால் அங்கிருந்து கிடைத்து வந்த தண்ணீர் கிடைக்கவில்லை.

அடுத்தப்படியாக கிருஷ்ணா கால்வாய் மூலம் கிடைத்த தண்ணீரும் நின்று போனது. இதன் காரணமாக சென்னை குடிநீர் தேவைக்கு 4 ஏரிகளையும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் நம்பி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

புழல் ஏரி.

 

இதையடுத்து சென்னை நகருக்கு செய்யப்படும் குடிநீர் சப்ளை சுமார் 850 மில்லியன் லிட்டரில் இருந்து சுமார் 500 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டது.

தண்ணீர் சப்ளை குறைப்பு காரணமாக சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக சுமார் 7 ஆயிரம் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு தடவையே லாரி தண்ணீர் கிடைக்கிறது. சில ஏரியாக்களில் பதிவு செய்து ஒரு வாரம் கழித்தே லாரி தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள் குடிநீருக்கு மிகவும் திண்டாடும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் சென்னையின் தாகம் தணித்து வந்த ஏரிகள் தற்போது ஒவ்வொன்றாக வறண்டு விட்டன. முதலில் சோழவரம் ஏரி வறண்டது. பிறகு பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டன.

பூண்டி ஏரி.

 

தற்போது புழல் ஏரியில் இருந்து மட்டும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் அங்கிருந்து உறிஞ்சப்படுகிறது.

இன்னும் 4 நாட்களில் அந்த தண்ணீரும் இல்லாமல் புழல் ஏரியும் வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 முக்கிய ஏரிகளும் வறண்டுள்ளன.

கடந்த 14 ஆண்டுகளில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் இப்படி ஒரே சமயத்தில் வறண்டு விட்டது இதுவே முதல் தடவையாகும். தற்போது இந்த 4 ஏரிகளிலும் 1 சதவீதம் அளவுக்கே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 4 ஏரிகளிலும் 41 சதவீதம் அளவுக்கு குடிநீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 057 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும். கடந்த ஆண்டு இதே நாளில் 4607 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 125 மில்லியன் கனஅடி தண்ணீரே இருக்கிறது.

சென்னை குடிநீர் ஏரிகள் நான்கும் வறண்டு விட்டதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மிகக் கடுமையாக போராடியபடி உள்ளனர். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே அவர்களுக்கு உறுதியாக கிடைத்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீர் போதுமான அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவை ஓரளவுதான் கை கொடுக்கின்றன.

புழல் ஏரித் தண்ணீர் வரும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு கிடைக்காது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திருவள்ளூர் மற்றும் நெய்வேலியில் இருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. குழாயிலும் தண்ணீர் வராது. லாரி தண்ணீரும் குறிப்பிட்ட நேரத்துக்கு கிடைக்காது என்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டத் தொடங்கி உள்ளது.

சோழவரம் ஏரி.

 

அடுத்தவாரம் முதல் தண்ணீர் தட்டுப்பாடு மிக, மிக அதிகமாக இருக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் லாரி தண்ணீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்ட காரணத்தால் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நெம்மேலி, காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து தினமும் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இது தவிர நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரும் வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு கொண்டு வந்து வினியோகம் செய்கிறோம்.

இது தவிர மாங்காடு பகுதியில் உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

மேலும் போரூர் ஏரி தண்ணீரையும் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.

ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு கொடுத்து வருகிறோம்.

இதற்கு முன்பு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சென்னைக்கு வழங்கப்பட்டது. இப்போது 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-maalaimalar.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: