திருக்குறளும் சமயமும்

-கி. சீலதாஸ், வழக்குரைஞர்,  ஜூலை 1, 2017.

siladassஒரு  சிலர்  திருவள்ளுவரை  இந்து  சமயவாதியாகக்  காட்ட  முற்படுவதும்,  திருக்குறளை  இந்து  சமய  நூல்களில்  ஒன்று  என  பறைசாற்றுவதும்  இயல்பாகி  வருகிறது.  இது  காலங்காலமாக  நிகழ்வதாகும்.  திருவள்ளுவரைப்  பற்றி  எழுதியவர்கள்  அவர்  சைவசித்தாந்த  சமயத்தைச்  சேர்ந்தவர்  என்றும்  மேலும்  பலர்,  அவர் சமணர்  என்பார்கள்.

தமிழில்  வந்துள்ள  பெரும்பான்மையான  நூல்கள்  கடவுள்  வாழ்த்துடன்  ஆரம்பிப்பது  வழக்கிலிருக்கும்  மரபைக்  குறிக்கிறது.  நூல் ஆசிரியர்  எந்தக்  கடவுளை  வழிபடுகிறாரோ  அந்தக்  கடவுளை  வாழ்த்தி  தம்  கருத்துப்படைப்பை  ஆரம்பிப்பதும்  இயல்பே.

திருவள்ளுவர்   எந்தச்  சமயத்தையும்  சாராதவர்  என்பதற்குச்  சான்றாக  விளங்குவது  முதல்  குறள்:

“அகர  முதல  எழுத்தெல்லாம்  ஆதி

பகவன்  முதற்றே  உலகு.”

இதில்,  “ஆதிபகவன்”  என்பதின்  பொருளானது  பொதுவான  ஒரு  சக்தியை   குறிக்கிறது  என்கிறார்கள்.  அதாவது,  எழுத்தெல்லாம்  எவ்வாறு  அகரத்தை  முதல்  எழுத்தாக  கொண்டிருக்கிறதோ  அதுபோலவே  உலகம்  அமைவதற்கு  ஆதிபகவன்  மூலமாக  இருந்தார்  என்பதாகும்.  இங்கே  ‘ஆதிபகவன்’  என்கின்ற  ஆதியும், பகவனும்  ஆகிய  இருவரை  ஒன்றாக  காட்டும்  சொற்பாங்கு   என்ற  கருத்தும்  உண்டு.  ஆதியும்  பகவனும்  ஒன்றே  என்பது  மற்றொரு  கருத்து.    இரு  சொற்களான  ஆதியும்  பகவனும்  ஆதிபகவனாக ஒன்றித்துவிட்டனர்.  எனவே  இறைவன்  ஒன்றே  என்பதை  முதல்  குறள்  விளக்குகிறது  என்ற  கருத்து  பொருத்தமாக  தென்படுகிறது.  எனவே  ஆதிபகவன்  என்று  திருவள்ளுவர்  சொன்னபோது  சமயமுலாம்  பூசப்படாததைக்  காணமுடிகிறது.  ஓர்  உன்னத  சக்தியை  மட்டும்  விவரிக்கிறார்  திருவள்ளுவர்  என்று  சொன்னால்  தகும்.  “ஆதிபகவன்”  என்பதை  வைத்து  திருவள்ளுவரின்  மதசார்பற்ற  நிலையை  மாற்ற   காட்டப்படும்  உற்சாகம்  வியக்கச்செய்கிறது.

திருக்குறளில்  மனித  குலம்  சிறப்புடன்,  கன்னியத்துடன்,  அறம்பேணி  நிம்மதியாக  வாழ்வதற்கான   அறிவுரைகள்  சொல்லப்பட்டிருக்கிறதே  அன்றி  அதில்  மந்திரம்,  மாயஜாலம்,  ஜாதி,  மதம்  எதுவுமே  கிடையாது.

மனித  குலம்  உய்வு  பெற  வேண்டும்  என்ற  உயரிய  நோக்கமே  திருவள்ளுவரை  ஆட்கொண்டிருந்தது  என்றும்  சொல்லலாம்.  இதனால்  எல்லா  சமயத்தினரும்  திருக்குறளில்  சங்கமத்தைக்  காணமுற்பட்டதையும்  சரித்திரம்  வழங்கும்  சான்றாகும்.

கிறிஸ்துவப்  பாதிரியார்  பெஸ்கி,  இவரை  வீரமாமுனிவர்  என்றழைப்பர்,  திருக்குறளை  முதன்  முதலில்  லத்தீனில்  மொழியாக்கம்  செய்தவர்.  பத்தொன்பதாம்  நூற்றாண்டின்  பிற்பகுதியில்  ஆங்கிலத்தில்  மொழியாக்கம்  செய்தவர்  டாக்டர்  ஜி.யு.போப்.  இவரை  ‘போப்பைய்யர்’  என்றும்  அழைப்பர்  தமிழறிஞர்கள்.

ஜி.யு.போப்  திருக்குறளை  மட்டுமல்லாது,  மாணிக்கவாசகரின்  திருவாசகம்,  நாலடியார்  ஆகியவற்றையும்  ஆங்கிலத்தில்  மொழியாக்கம்  செய்துள்ளார்.  திருவாசகம்  சைவ  சமயத்தை  ஒட்டியது  என்பதை  போப்  சுட்டிக்  காட்டுகையில்  அதில்  பொதிந்திருக்கும்  எழில்  ததும்பும்  கருத்துக்களை  படித்து  மகிழ்ந்து  மற்றவர்களும்  அதன்  எழிலை  அனுபவிக்க  வேண்டும்  என்றார்.  நாலடியாரின்  கருவூலமோ  புத்த  சமயத்தைச்  சார்ந்தவர்  இயற்றியதாகக்  கூறுகிறார்.  இவ்வாறு  வெள்ளைக்காரர்கள்  என்ன  சொல்கிறார்கள்  என்பதில்தான்  நம்  கவனம்.

பல  ஆய்வுகளைப்   படிக்கும்போது  எது சமயச்  சார்புடைய  நூல்,  எது  சமயச்  சாயல்  சார்பற்றது   என்பதை  அறிய  முடிகிறது.  திருக்குறள்  சமயச்  சாயலற்ற  நூல்  என்பதே  ஒருமித்த  கருத்து.

முத்தமிழ்க்காவலர்  கி.ஆ.பெ.விசுவநாதம்  ஒரு  சம்பவத்தைச்  சொல்வார்.  தம்முடைய  முஸ்லிம்  நண்பர்  ஒருவர்  தம்மிடம்  வந்து  “இந்த  ‘ன்னன்னா’  என்ன  செய்தது?”,  என்று  கேட்டுவிட்டு,  “திருக்குரான்”  என்பதை  மாற்றி  “திருக்குறள்”  என்று  எழுதிவிட்டார்கள்  என்பாராம்.  திருக்குரான்  இஸ்லாம்  சமயத்தைச்  சார்ந்த  நூல்.  திருக்குறளைப்  படிப்பத்தில்  முஸ்லிம்கள்  தயங்காதது,  அதில்  மனித குலத்துக்குத்  தேவையான  கருத்துக்கள்  இருப்பதை  ஏற்றுக்கொண்டதையே  சுட்டுகிறது.

இந்தக்  கருத்துகள்  எல்லாம்  ஒரு  பக்கம்  இருக்க,  திருவள்ளுவர்  ஒருவர்  மட்டும்  திருக்குறளை  எழுதியிருக்க  முடியாது,  ஒருவேளை,  ஒரு  குழுவின்  தலைவராக  அவர்  இருந்திருக்கலாம்.  அந்தக்  குழுவின்  தயாரிப்பே  திருக்குறள்  என்ற  கருத்தும்  நிலவுகிறது.  திருவள்ளுவரைப்  பற்றி  பல  கதைகள்  பரவிவருவதையும்  ஒதுக்கிவிடமுடியாது.  திரு.வி.க (திரு.வி.கல்யாணசுந்தரம்)  திருவள்ளுவரைப்  பற்றி   பரவி  கொண்டிருக்கும்  கதைகளை  ஏற்றுக்கொள்ள  தயக்கம்  காட்டினார்.

திருக்குறளில்  காணப்படும்  கருத்துக்கள்  புதுமையானவையா  என்ற  கேள்வியும்  எழுந்தது.  அந்தக்காலத்தில்  பழக்க  வழக்கங்களை,  நெறிமுறைகளை  தொகுத்துத்  தந்தார்  திருவள்ளுவர்  என்று  சொல்வோரும்  உண்டு.

இருபதாம்  நூற்றாண்டில்,   விபரீதமான  ஒரு கருத்தை  வெளியிட்டார்  எம்.தேவநாயகம்  என்பவர்.  இவர்  இந்து  சமயத்தைவிட்டு  விலகி  கிறித்துவ  மதத்தை  தழுவிக்கொண்டவர்.  இவர்,  திருவள்ளுவர்  ஒரு  கிறிஸ்தவரா?  என்ற  தலைப்புடைய  நூலை  வெளியிட்டார்.  அவரின்  கருத்துப்படி  அருட்தொண்டர்  தாமஸ்,  திருவள்ளுவரை  கிறித்துவ  மதத்திற்கு  மாற்றினார்  என்பதாகும்.  திருக்குறளில்  உள்ள  பல  கருத்துக்கள்  விவிலியத்தில்  இருந்து  எடுக்கப்பட்டவை  என்பன  போன்ற  கருத்துக்களை  முன்  வைத்தார்  தெய்வநாயகம். ஜி.யு.போப்  கூட  திருக்குறள்  கிறித்துவ  கோட்பாடுகளைத்   தழுவியது  என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்.  இது  சவாலுக்குறியதாக  இருந்த  போதிலும்  அதைக்  குறித்த  கருத்து  மக்கள்   மேடைக்குக்  கொண்டு  வரப்படவில்லை.  தெய்வநாயகனின்  கருத்து  கவலைக்குறியதாக  இருந்தபோதிலும்,  கலைஞர்  மு.கருணாநிதியின்  முன்னுரை  தெய்வநாயகத்தின்  நூலுக்கு மெருகூட்டியது.  திருக்குறளுக்கும்  சோதனை  காலம்  வந்துவிட்டது.

ஆக  மொத்தத்தில்  கிறித்துவ  சமய  கோட்பாடுகள்தான்  திருக்குறளுக்கு  அடிப்படை  என்ற  கருத்தை  பரப்பியதும்  கவனிக்க வேண்டிய  செய்தியாகும்.  தெய்வநாயகத்தின்  கருத்து  மற்ற  கிறித்துவ  இறைமை  வல்லுநர்களால்  நிராகரிக்கப்பட்டது.  தமிழ்  இந்துக்களும்  தெவநாயகத்தின்  கருத்துக்கு  எதிர்ப்பு  தெரிவித்தனர்.  ஆக,  பல  மதத்தினருக்கு  திருக்குறள்  சொந்தமாகும்  தரம்  உண்டு  என்றால்  மிகையாகாது.

ஒரு  காலத்தில்  பினாங்கில்  வாழ்ந்த  என்  நண்பர்  காலஞ்சென்ற ஓலிவர்  ஃபிப்ஸ் (Oliver Phipps)  ஒரு  கத்தோலிக்கர்.  நெடுங்காலம்  வழக்கறிஞராகத்  தொழில்  செய்தவர்.  பின்னர்  உயர்நீதிமன்ற  நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  அவர்,  ஆ. அரங்கநாத  முதலியார்  ஆங்கில  மொழியாக்கம்  செய்த  திருக்குறளை  எனக்குப்  பரிசாகத்  தந்தார்.  இதில்  விசித்திரம்  என்னவெனில்  இந்த  நூலை  ஓலிவருக்குப்  பரிசாகத்  தந்தவர்  ஒரு  தமிழ்  முஸ்லிம்.  அவருடைய  கைப்பட  அழகாக  தமிழில்,  “பு.இ.மு.முகம்மது  அப்துல்லா,  பணைக்குளம்”  என்று  எழுதப்பட்டிருந்தது.  அதுமட்டுமல்ல,  இந்தத்  திருக்குறளை  மற்றுமொரு  முஸ்லிம்  நண்பரின்  கையில்  ஒரு  காலத்தில்  இருந்திருக்கிறது  என்பதற்கு   சான்றாக  “அப்துல்  கபூர்”  என்று  ஆங்கிலத்திலே  எழுதப்பட்டிருந்தது.  அரங்கநாத  முதலியாரின்  ‘திருக்குறள்’   1933ம்  ஆண்டு  அச்சிடப்பட்டதாகும்.

ஒரு  முஸ்லிம்,  திருக்குறளை  கத்தோலிக்கருக்குப்  பரிசாகக்  கொடுத்தார்  என்றால்  அந்தத்  தமிழன்பர்  திருக்குறளில்  சமயத்தைக்  காணவில்லை,  மாறாக   அதில்  புதைந்து   கிடக்கும்  கருத்துக்கள்  அவரைக்  கவர்ந்ததைத்தான்  குறிக்கிறது.  ஓலிவர்  அந்த  நூலை  என்னிடம்   கொடுத்தபோது,  “இது  ஓர்  அற்புதமான  நூல்  விவிலியத்துக்கு  (பைபிள்)  ஒப்பாக  இருக்கிறது”,  என்றார்.  திருக்குறள்  மீது  எனக்கு  இருந்த  பற்றுதலை  நான்  காட்டிக்கொள்ளவில்லை.

இவற்றை  எல்லாம்  பார்க்கும்போது  திருக்குறளை  பிற  சமயத்தினரும்  விரும்பிப்  படித்து  ஆய்வு  நடத்துவதைக்  காணமுடிகிறது.  அதிலே  சமயத்தைக்  காட்டவில்லை   திருவள்ளுவர்.  ஆனால்,  எல்லா  சமயத்தினரின்  போற்றுதலை  அது  பெற்றிருக்கிறது.

உலக  மக்கள்  பிறவிப்  பலனை  அடைய  வேண்டுமென்பதில்தான்  திருவள்ளுவர்  கவனம்  செலுத்தினாரே  அன்றி  எந்தச்  சமயத்தையும்  போற்றவுமில்லை  எந்தச்  சமயத்தோடும்  தம்மை  அடையாளம்  கண்டுகொள்ளவுமில்லை  என்பது  தெளிவாகிறது.

தமிழ்  மொழி  பேசும்  இந்துக்கள்   திருக்குறள்  இந்து  சமய  நூல்களில்  ஒன்று  எனச்  சொல்கிறார்கள்.  பிற  மொழி  இந்துக்கள்  அப்படிப்பட்ட  ஒரு  கருத்தை  ஏற்றுக்கொள்ளவுமில்லை,  திருக்குறளைப்  பற்றி  தெளிவாகத்  தெரிந்து  கொள்ளவுமில்லை.

திருக்குறள்  மனித  குலத்துக்கே  சொந்தமானது.  மனித  சமுதாயம்  அதனால்  பயனடைய  வேண்டும்.  அதற்குத்  துணை   நிற்க  வேண்டுமேயன்றி  அதைப்  பிறர்  ஒதுக்கும்படியான  நிலைக்கு   நாம்  துணைபோகக்கூடாது.