நடைமுறை சாத்தியமற்றவை: மீண்டும் அடம்பிடிக்கும் கட்டார்

qatar01கட்டாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக கட்டார் கடுமையான போக்கை எப்போதும் எடுத்து வந்திருக்கிறது என குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானி,

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் தேச பாதுகாப்பு என்பது கட்டாருக்கு மட்டுமான பிரச்னை இல்லை என்றும் அண்டை நாடுகளுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டார் மீது நெருக்கடி நிலையை திணித்த ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக கூறி வருவது மிகைப்படுத்தப்பட்ட பொய் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், கட்டாரின் நட்பு நாடுகளின் கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருக்கிறது. அதேபோல் நடவடிக்கை எடுக்க முடியாத ஒன்றாகவும் உள்ளது.

இந்த கடுமையான போக்கு தீவிரவாதம் தொடர்பானது அல்ல. பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது என்றும் அல்-தானி கூறியுள்ளார்.

கட்டார் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் குவைத் மன்னர் ஈடுபட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் கட்டாருக்கு 13 கோரிக்கைகளை முன்வைத்தன.

அதில் எகிப்தில் சகோதரத்துவ கட்சிக்கு வழங்கும் ஆதரவை கட்டார் நிறுத்த வேண்டும். அல்-ஜசீரா டி.வி.யை மூடவேண்டும். ஈரானுடன் ஆன தூதரக உறவை குறைக்க வேண்டும்.

கத்தாரில் இயங்கும் துருக்கி ராணுவ முகாமை மூடவேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகளாகும். இவற்றை ஏற்றுக்கொள்ள கத்தாருக்கு 10 நாள் கெடு விதிக்கப்பட்டு இருந்தன.

10 நாட்கள் முடிந்தும் கத்தார் நடவடிக்கை ஏதும் எடுப்பது போல தெரியவில்லை. மேலும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட நட்பு நாடுகள், கத்தாருக்கு 2 நாட்களை கெடுவாக நீட்டித்தது.

இந்நிலையில், கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

-lankasri.com