நஜிப் : அந்த இந்திய வம்சாவளி பிரதமரைவிட, நான் அதிகம் செய்திருக்கிறேன்

Slide1இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரைவிட, மலேசிய இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு  தாம் அதிகம் பங்காற்றியுள்ளதாக பிரதமர் நஜிப் கூறினார்.

அந்த முன்னாள் பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமலேயே, அவரின் சேவை காலத்தோடு, நஜிப் தம்மை ஒப்பிட்டுப் பேசினார்.

“நான் பிரதமரான பிறகு, கிட்டத்தட்ட 900 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைத் தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கியுள்ளேன் என்று டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்”, என ம.இ.கா. தலைவரும் சுகாதார அமைச்சருமான  டாக்டர் எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி நஜிப் பேசினார்.

“அதோடுமட்டுமின்றி, அந்த இந்திய வம்சாவளி பிரதமர் உட்பட, எனக்கு முன்னாள் இருந்த அனைத்து பிரதமர்களையும் விட, நான் அதிகம் செய்திருக்கிறேன் என்றும் டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்”, என 200-ஆம் ஆண்டு தமிழ்க்கல்வி கொண்டாட்ட விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் நஜிப் குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர்களின் எதிர்கால மேம்பாட்டிற்குக் கல்வி இன்றியமையாத ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டுமென நஜிப் வலியுறுத்தினார்.

“முறையான கல்வியறிவு ஒருவன் தன் வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவுவதோடு, தன்னைச் Slide2சார்ந்தவர்களையும் முன்னேற்ற உந்துதலாக அமையும். அதனால்தான், நான் இந்திய சமூகத்தைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க ஊக்குவிக்கிறேன்”, என நஜிப் தனதுரையில் கூறினார்.

மேலும், இவ்வாண்டு அறிமுகம் கண்ட ‘மலேசிய இந்தியர் பெருந்திட்டம்’, இந்தியர்களை ஒருமுகப்படுத்தி, நாட்டின் முன்னேற்றப்பாதையில் அவர்களையும் இணைத்து செல்ல உதவும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

2009-ம் ஆண்டு தொடக்கம், தனது நிர்வாகத்தின் கீழ் இந்தியச் சமூகத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள் பல, தொடர் நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.