ஒற்றையாட்சி முறையோ, பௌத்தத்துக்கான முன்னுரிமையோ மாற்றப்படாது – சிறிலங்கா அதிபர்

maithri-mahasangaபுதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதற்கோ பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குவதற்கோ எந்தவொரு சூழ்நிலையிலும் இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட  மகுருப்பே பன்னசேகர நாயக்க தேரரிடம், அதற்கான ஆணையை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இன்னமும் புதிய அரசியலமைப்புக்கான வரைவு தயாரிக்கப்படவில்லை. புதிய வரைவு தயாரிக்கப்பட்டால் அது நாடாளுமன்றத்திலும் நாட்டுக்கும் சமர்ப்பிக்கப்படும்.

அதன் பின்னர், எல்லா பரிந்துரைகளும், விமர்சனங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு தேவையான திருத்தங்கள் செய்யப்படும்.

ஒற்றையாட்சி தொடர்பான மற்றும் 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும்  விடயங்களில் எந்த திருத்தங்களும் செய்யப்படாது.

தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் அதிகாரங்களைப் பகிரும் ஒரு அரசியல் பொறிமுறை எந்தவொரு சூழ்நிலையிலும், நாட்டைப் பிளவுபடுத்துவதாகவோ, ஒற்றையாட்சி முறையை மாற்றுவதாகவோ இருக்காது.” என்றும் அவர் தெரிவித்தார்.

-puthinappalakai.net

TAGS: