பள்ளியில் சேலைக்குத் தடை – பண்பாட்டுப் படையெடுப்பா?

sare-sekolahஜூலை 14: -ஞாயிறு நக்கீரன் – ஓர் இனத்தை ஒடுக்க வேண்டுமென்றால், முதலில் அவர்களின் தாய் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் சிதைத்தாலேப் போதும் என்பது, ஆதிக்க மனப்பான்மையினர் கைக்கொள்ளும் வழக்காகும். குறிப்பாக, தமிழ் மொழியும் தமிழ் இனமும் சீரும் சிறப்பும் இழந்து இன்றைய நாட்களில் நலிந்து காணப்படுவதற்குக் காரணம், இத்தகைய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஆட்பட்டதுதான்.

பல்லாயிர ஆண்டுகளாகவேத் தொடரும் இத்தகையப் போக்கின் வெகு அண்மைய நீட்சிதான், இடைநிலைப் பள்ளியில் இந்திய மாணாக்கியர் சேலை அணியக் கூடாதென விதிக்கப்பட்ட தடையாகும்!

மெத்தப் படித்தவர்களும் கல்லூரி விரிவுரையாளர்களும் சேர்ந்து தமிழ் மொழி ஒரு கலப்பு மொழி என்று, தம் சிந்தையை அடியோடு அடகு வைத்துவிட்டு கருத்து வெளியிட்டு, அதன்பின் எழுந்த கண்டனத்திற்குப் பின் அவர்கள் பின்வாங்கினர்.  தற்பொழுது, ஏறக்குறைய ஓராண்டு இடைவெளியில், குரங்கு தன் குட்டியைவிட்டு ஆழம் பார்க்கும் விதமாக, தேசியப் பள்ளியில் சேலை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நடந்ததல்ல; நம் திருநாட்டின் மையப் பகுதியில்தான்.

இந்தியர்களின், குறிப்பாக தமிழ்ப் பெண்களின் பண்பாட்டு உடை சேலை என்பது உலகத்திற்கேத் தெரியும். இப்படிப்பட்ட நிலையில், இன இணக்கத்திற்கும், சமய சகிப்புத் தன்மைக்கும் பண்பாட்டுக் கலவைக்கும் பெயர்பெற்ற இம்மலைத்திருநாட்டில், ஓர் இடைநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரே இப்படி கசட்டுத் தனமாக நடந்து கொள்கிறார் என்றால், அவர் ஏதோ அசட்டுத் தனமாக நடந்து கொண்டுள்ளார் என்று கருத முடியாது. அவர் வேண்டுமென்றே இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

malaysia truly asiaஸ்ரீ செராஸ் தேசியப் பள்ளியில் கடந்த  இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நோன்புத் திருநாள் தொடர்பான நிகழ்ச்சிக்குத்தான் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையான மஸ்னா லத்திப், இப்படி சேலை உடுத்த தடை போட்டுள்ளார். அதற்கு அவர் சொல்லியுள்ள காரணம், கடந்த ஆண்டு இதேப் போன்ற நோன்புத் திருநாள் நிகழ்ச்சியின்போது ஒரு சில மாணாக்கியர் சேலை அணிந்து வந்தது, நிகழ்ச்சிக்கு அசௌகரியமாக இருந்ததுடன், அதைப்பற்ற மற்ற மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த ஆண்டும் அதைப்போல நடந்துவிடக் கூடாதென்பத்ற்காகத்தான் இந்திய மாணவிகள், தங்களின் பண்பாட்டு உடையான சேலையை அணிந்து வர தடை விதித்ததாக ஒரு சொத்தைக் காரணத்தைச் சொல்லி சமாளித்திருக்கிறார் மஸ்னா லத்திப்.

(இது சார்பாக எப்எம்டி ஆங்கில இணையத்தலம் நேற்று வெளியிட்ட செய்தியில் அந்தத் தலைமை ஆசிரியர் வருந்துவதாகவும் சேலை தடையை மீட்டுக்கொண்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது – (http://www.freemalaysiatoday.com/category/nation/2017/07/13/school-apologises-for-saree-ban/http://www.freemalaysiatoday.com/category/nation/2017/07/13/school-apologises-for-saree-ban/)

காலங்காலமாக இந்த மண்வாழ் மக்கள் போற்றிவரும் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைக்கும் விதமாக நடந்து கொள்ளும் இந்த ஆசிரியை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் முகம்மது முழங்கி வரும் ‘ஒரே மலேசிய’க் கொள்கையையும் புறக்கணிக்கிறார் என்பது புலனாகிறது.

ஒரு படையை வழிநடத்தும் தலைவன் எப்படி எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டுமோ, அதைப்போலத்தான் ஒரு கல்விச் சாலையின் தலைவனும் நடக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால், மஸ்னா லத்திப்பிற்கு ஒரு கல்விச் சாலையை வழிநடத்தும் பாங்கு இல்லை.

இந்த விடயத்தில் வழக்கறிஞர் அன்னாஸ் ஸுபேடி, பல்கலைக்கழகப் பேராசிரியர் தாஜுடின் ரஸ்டி, கல்வி வளர்ச்சி தொடர்புடைய அரசு சாரா அமைப்பின்(‘பேஜ்’) தலைவர் நூர் அஸிமா ஆகியோர் கருத்தும் கவலையும் தெரிவித்திருப்பது, நாட்டின் இறையாண்மையிலும்  ஓர்மையிலும் அவர்களுக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது.

நாட்டின் பல இன பரிமாணத்திற்கு குந்தகம் விளைவிக்கும் மஸ்னா லத்திப் போன்றவர்கள் நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குபவர்கள்; இத்தகையோர், கல்வித் துறையில் தொடர்வது நல்லதல்ல.