தமிழ் மக்களுக்குரிய சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவளிப்போம்: சம்பந்தன்!

எம்மை நம்பிய எமது மக்களுக்குக்குரிய நிம்மதியான நிலைத்திருக்கக்கூடிய தீர்வுத்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் கடுமையாக முயற்சித்து வருகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள், ஆதரவாளர்களான மக்கள் எனப் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த சந்திப்பு கடந்த 12 ஆம் திகதி 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கான நீடித்து நிலைத்திருக்கக் கூடிய அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக நாம் கடுமையாக முயற்சித்து வருகின்றோம்.

புதிய தீர்வுத்திட்ட வரைபில் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உரிய உரிமைகளை ஏற்றுக்கொண்டதாகவும் தமிழ் மக்களும் சுயாட்சி அதிகாரங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் உள்ள பலம் பொருந்திய பெறுமதியான தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம், நம்புகிறோம்.

இது பற்றி நாம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதில்லை. அதனை வைத்தே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள், உரிமைகள் வழங்கப்படாது என எதிர்க்கின்ற, தீர்வுத்திட்டத்தைக் குழப்புகின்ற கடும்போக்கு அரசியல் சக்திகள் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள்.

இலங்கை வரலாற்றில் இந்நிலைதான் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது. எமது மக்களின் பிரச்சினைகளை கடுமையாக எதிர்த்து அதிகாரங்கள் எவையும் வழங்கப்படாது என எதிர்க்கும் கடும்போக்கு அரசியல் சக்திகள் இருக்கின்ற தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உண்டு. அது நீண்ட காலமாகத் தொடர்கின்றது.

அதனை இப்படியே இனியும் தொடரவிடக்கூடாது அவர்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணங்கொண்ட அரசியல் சக்திகளும் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

எமது மக்களுக்கு இன்னுமின்னும் இனியும் பாதகமாக அமையக்கூடிய எந்தவொரு அரசியலமைப்புக்கும் நாம் ஆதரவளிக்கப் போவதில்லை. எமது கொள்கையில் நாம் உறுதியாகவுள்ளோம்.

அதேநேரம் எமது மக்களுக்குரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்வுத்திட்டத்தை நாம் எதிர்த்து ஆரம்பத்திலேயே குழப்பிவிடப் போவதுமில்லை.

எமது மக்களுக்கு துன்பத்தைக்கொடுத்து வந்த மஹிந்த ராஜபக்ச அரசு ஆட்சி இழக்கும், அது ஆட்சி கவிழும் என்பதை நாம் ஏற்கனவே நேரடியாகக் கூறியிருந்தோம்.

மஹிந்த அரசின் ஆட்சி இழப்பிற்கு எமது தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாது, தமிழர்களுக்குரிய அதிகாரங்கள் பகிரப்படாத சர்வாதிகார நிலையே காரணம்.

அப்படியான அடாவடித்தனமான ஆட்சியை தமிழ் மக்கள் மட்டுமல்ல இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரும் எதிர்த்தார்கள், எதிர்க்கின்றார்கள் என்பதே உண்மை.

இப்போதுள்ள நல்லாட்சி அரசில் நல்ல காரியங்கள் சில நடைபெற ஆரம்பித்துள்ளன என்பது உண்மை. நல்லாட்சி அரசு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசியல் பலம் மிக்க தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் எனவும் நாம் எதிர்பார்க்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டக் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் தலைவர் ப.குமாரசிங்கம் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் வட மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினர் க.ஜெயக்குமார், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், பெண்கள் அணித்தலைவி பிரபாமணி, பிரதேச அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

-tamilwin.com

TAGS: