பெண்டாத்தாங் என்ற சொல்லை தடை செய்ய வேண்டும், சுப்ராவின் பழைய கோரிக்கை

 

btnlogoபிரதமர் துறையிலிருந்து செயல்படும் பிடிஎன் (Biro Tata Negara) என்ற அமைப்பு நடத்தும் குடிமைப் பயிற்சியில் மாணவர்களிடையே இனவாதத்தையும், மலாய்க்காரர்களின் மேலாண்மை தத்துவத்தையும் பரப்புகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டு 2015 ஆம் ஆண்டில் எழுந்தது.

பிடிஎன் பயிற்சியில் இந்நாட்டு இந்தியர்களும் சீனர்களும் பெண்டாத்தாங் என்று மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.

சீனர்களையும் இந்தியர்களையும் பெண்டாத்தாங் என்று கூறுவது அச்சமூகங்களை அவமதிப்பதாகும். ஆகவே, அச்சொல் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என்று 6.11.2015 இல் மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் அக்கட்சியின் 67 ஆவது மாநாட்டில் பேசுகையில் கேட்டுக்கொண்டார்.

இந்தியர்களும் சீனர்களும் இந்நாட்டில் ஆறு தலைமுறைக்கு மேல் இருந்துள்ள போதிலும் அவர்கள் அந்நியர்கள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என்றாரவர்.

இந்த விவகாரம் பிஎன் தலைமைத்துவத்தால் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதுடன் இது தொடர்ந்து அனுமைதிக்கப்படக்கூடாது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சுப்ரமணியம் வலியுறுத்தினார்.
அம்மாநாட்டை பிரதமர் நஜிப் ரசாக் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.

மஇகா தலைவர் எஸ். சுப்ரமணியத்தின் கோரிக்கை உடனடியாக மறுக்கப்பட்டது.

 

பெண்டாத்தாங் என்பதில் எந்தத் தவறும் இல்லை

 

பெண்டாத்தாங் என்று சொல்லில் தவறும் ஏதும் இல்லை. பிரச்சனை அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் என்று பிடிஎன் இயக்குனர் ராஜா அரிப் ராஜா அலி எதிர்வினை ஆற்றினார்.

சீனர்கள், இந்தியர்கள், இபான், கடஸான் ஆகியோர் மலேசிய குடிமக்கள்; ஆனால், அவர்களின் பின்னணி வேறு நாட்டவர்கள். மலேசியாவிலிருக்கும் பல இனத்தவர்களின் வரலாற்று பின்னணியை மறுக்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

இந்நாட்டுக்கு வரும் வங்காளதேசிகளுக்கும்கூட அவர்களுடைய வரலாறு இருக்கிறது. “வரலாற்றை மறுக்காதீர்” என்று ராஜா அரிப் ராஜா அலி போதித்தார்.

 

பிடிஎன் பயிற்சி தேவைப்படுகிறது

 

பிஎன் கூட்டணி எதிர்கால -14 ஆவது, 15 ஆவது, 16 ஆவது. 17 ஆவது – பொதுத்தேர்தல்களில் வெற்றி பெறுவதை உறுதிசெய்துகொள்வதற்கு பிடிஎன் தேவைப்படுகிறது என்று பிரதமர் நஜிப் நேற்று கூறியிருந்தார்.

 

கர்பால்…

 

இந்த பிடிஎன் பயிற்சியில் போதிக்கப்படும் பலவற்றில் ஒன்று மலாய்க்காரர்கள் மந்திரம் (போமோ) செய்வதில் ஈடுபடக்கூடாது. ஆனால், கர்பால் சிங்கை கொல்வதற்கு அதைச் செய்யலாம் என்று ஒரு வகுப்பில் கூறப்பட்டதாக அந்த வகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு மாணவர் டிஎபி தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாக செய்தி வெளியாகியிருந்தது.