மிதவாதம் பேசும் நஜிப் பிடிஎன்னை கலைக்காவிட்டால், ஹரப்பான் அதைச் செய்யும், கஸ்தூரி கூறுகிறார்

 

KasthuriBTNமிதவாதத்தை தூக்கிப்பிடிக்கும் பிரதமர் நஜிப் ரசாக் அதே வேளையில் இனவாதத்திற்கு தூபம் போடுவதாக கருத்தப்படும் பிடிஎன்னுக்கு (Biro Tata Negara)ஆதரவு கொடுப்பது அவரது கபடவேடதாரித்தனத்தைக் காட்டுகிறது என்று பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறுகிறார்.

ஒரே மலேசியாவை ஆதரித்து வாதாடும் நஜிப், பிரிவினைவாதத்தையும் வேறுபாட்டையும் வளர்க்கும் ஓர் அரக்கனை பிடிஎன் என்ற பெயரில் அவரது பிரதமர் இலாகாவிலேயே ஊட்டி வளர்க்கிறார் என்று கஸ்தூரி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

நேற்று, நஜிப் பிடிஎன்னை பாராட்டியதோடு பாரிசானின் எதிர்கால பொதுத்தேர்தல்கள் வெற்றிக்கு அந்த அமைப்பு தேவைப்படுகிறது என்று தெரிவித்திருந்த கருத்துக்கு கஸ்தூரி பதில் அளித்து இவ்வாறு கூறினார்.

பிடிஎன்னுக்கு பகிரங்கமாக அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு ஒரு தேசத்தை உருவாக்குவது. ஆனால், அது அதற்கு நேர்மாறானதைச் செய்துள்ளது என்றாரவர்.

பிடிஎன் சகிப்புத்தன்மை, தொழிலியம், நேர்மை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றுக்கு எதையும் செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் ஆனால் வெளிப்படையாக சொல்லப்படாத இரகசியமாகும். மாறாக, அது அம்னோ-பிஎன்னின் இன்னிசைக்கு நடனம் ஆடிக்கொண்டு மேலாண்மை, இனவாதம் மற்றும் பிளவுபடுத்தும் கொள்கைகள் ஆகியவற்றை பரப்பிக்கொண்டு மலேசியாவில் ஒன்றுபட்ட, நேர்மையான மற்றும் நியாயமான சமுதாயத்தை அழிப்பதற்கு அதன் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

36 ஆண்டுகளாகியும் பிடிஎன் ஒரு தேசத்தை உருவாக்கும் பணியில் தோல்வி கண்டுவிட்டது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

நஜிப்பின் ஒரே மலேசியா சுலோகம் உண்மையானது என்றால், பிடிஎன்னை கலைக்கும்படி அவர் நஜிப்பை வலியுறுத்தினார்.

நஜிப் செய்யவில்லை என்றால், ஹரப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் அதைச் செய்யும் என்று கஸ்தூரி கூறினார்.

“மலேசியன் மலேசியாவில் அமைதியை விரும்பும் மலேசியர்களிடையே பிடிஎன் தொடர்ந்து இருப்பதற்கு இடமில்லை”, என்றார் கஸ்தூரி.