முக்ரிஸ்: கெடாவில் பாஸுடன் பேச்சுகள் நடத்த இடமுண்டு

mukrizகெடாவில்   பக்கத்தான்  ஹராபானும்   பாஸும்  சமரசம்   செய்துகொள்ள   வாய்ப்பிருப்பதாக   பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா (பெர்சத்து)  துணைத்  தலைவர்    முக்ரிஸ்   மகாதிர்   கூறுகிறார்.

ஹராபானுக்கும்  பாஸ்  கட்சிக்குமிடையில்   தேசிய   நிலையில்    ஒட்டுறவு  இல்லை      என்றாலும்   கெடா  நிலைமை   வேறு   என    கெடாவில்    பெர்சத்து   தேர்தல்   பணிகளுக்குப்  பொறுப்பேற்பார்   என  எதிர்பார்க்கப்படும்   முக்ரிஸ்   குறிப்பிட்டார்.

“அரசியலில்   ஒற்றைத்  தீர்வு   என்று   எதுவும்  கிடையாது. பலர்   பெர்சத்து   ஹராபானில்   இணையாது    என்றுதான்     நினைத்தார்கள்.   ஆனால்,    முடிவில்   அதுதான்   நடந்தது”,  என்றவர்   ஓரியெண்டல்   டெய்லியிடம்   தெரிவித்தார்.

கெடா   பாஸ்    தலைவர்   அஹ்மட்   பக்ருடின்   ஷேக்   பக்வாருசி   தம்   கட்சி   கெடாவில்   எல்லாத்   தொகுதிகளிலும்   போட்டியிடும்    என்று    அண்மையில்   கூறியது   குறித்துக்   கருத்துரைத்த   முக்ரிஸ்,   அதை   அப்படியே   எடுத்துக்கொள்ளக்கூடாது    என்றார்.

மும்முனைப்  போட்டியைத்   தவிர்க்க     பாஸ்   ஹராபானுடன்   ஒத்துழைக்கும்    என்றே   அவர்    நம்புகிறார்.

இதனிடையே,   ஜோகூர்   கோத்தா   திங்கியில்   ஹராபான்   நிகழ்வு   ஒன்றில்      சுமார்   மூவாயிரம்  பேர்   பெர்சத்து   நிர்வாகத்   தலைவர்    டாக்டர்   மகாதிர்   முகம்மட்    வாழ்க    என்று   வாழ்த்தொலி    எழுப்பியதாக  ஓரியெண்டல்   டெய்லி   அறிவித்திருந்தது.

அக்கூட்டத்தில்   பேசிய   மகாதிர்     ஹராபான்   முடிவில்   ஒரே   கொடியின்கீழ்   ஒன்றிணைந்திருப்பதாகக்   கூறினார்.  அது  மலேசியர்களுக்கு    மேலும்   நம்பிக்கையூட்டும்    என்று   எதிர்பார்ப்பதாகவும்     அவர்   சொன்னார்.

ஹராபான்   போராட்டத்தில்   ஜோகூர்  ஒரு  முன்னணி  மாநிலமாக   விளங்கும்  என்றாரவர்.  2013-இல்  எதிரணியினர்   அங்கு   எட்டு   நாடாளுமன்ற   இடங்களையும்   18    சட்டமன்ற   இடங்களையும்   வென்றதை    அவர்   சுட்டிக்காட்டினார்.