தமிழக அரசின் சினிமா விருது மர்மங்கள்!

pasanga-mynaஇந்த சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டதில் பல மர்மங்கள், ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன, 6 வருடங்கள் வழங்காத இந்த விருதுகளை மொத்தமாக‌ திடீரென வழங்கியதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. விஷயம் இதுதான்… சிம்பிளாக சொல்லிவிடலாம்.

ஜெயலலிதாவிற்கு பின் இன்னொரு சினிமாக்கார முதல்வர் உருவாகிவிட கூடாது என்பதில் அரசுக்கு கடும் அக்கறை, முதல்வர் என்ன, எதிர்கட்சி தலைவர் கூட ஆகிவிடக் கூடாது,

நன்றாக கவனியுங்கள், ஒரு மாதிரி அலையும் நடிகர்கள் யாருக்கும் விருதில்லை, அதே போல அரசியல்வாதிகளை குதறிய படமான ஜோக்கர் போன்ற படங்களுக்கும் விருதுகள் இல்லை. அரசினை விமர்சிக்கும் யாரையும் கண்டுகொள்ளமாட்டோம், சினிமாகாரர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம் என இறங்கியிருக்கின்றது இந்த அரசு.

உச்சமாக கமலஹாசனை ஒரு அமைச்சர் ஒருமையில் திட்டியதும், இன்னொரு அமைச்சர் கமலை கைதுசெய்யவேண்டும் என கொதிப்பதற்கும் இதுதான் காரணம். ஜெயாவிற்கு பின் யாருக்கும் குனிந்து நிற்க தமிழ் திரையுலகமும் தயாராக இல்லை, சினிமாவிலிருந்தே உருவான கட்சியான அதிமுகவும் அவர்களை தெறிக்கவிடும் முடிவிலே இருக்கின்றது.

கொஞ்ச காலமாக திமுகவிற்கும், அதிமுகவிற்கும் ஏற்பட்டிருக்கும் ‘ரகசிய உடன்படிக்கை’யும் கவனிக்கத்தக்கது. இருகட்சியுமே இன்னொரு கட்சியினை வளரவிடக் கூடாது எனும் முடிவில் இருக்கின்றன, கலைஞரும் ஜெயாவும் இல்லாத நிலையில் திரையுலகிலிருந்து அடுத்த அரசியல்வாதி வந்துவிடக் கூடாது என்பதில் இருவருக்குமே அலாதி பிரியம்.

பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு இந்த சினிமா உலகில் இருந்து யாரும் சென்றுவிட கூடாது என்ற கவலையும் இருக்கின்றது. அதனால்தான் சினிமாத் துறையினரை இந்த ஆட்சி குறிவைத்து அடிக்கின்றது. திமுக ரகசியமாக சிரிக்கின்றது.

திரைத் துறையினரை நெருக்குகின்றார்கள், கமலை வேண்டுமென்றே மிரட்டுகின்றார்கள். இப்படி எல்லாம் காட்சிகள் நன்றாக தெரிகின்றன‌.. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அதிமுக அரசு இனியொரு முறை அமைய வாய்ப்பே இல்லை. இந்நிலையில் ஏதோ தங்களால் முடிந்ததை செய்து அடுத்த எதிரி உருவாகாமல் பார்த்துகொண்டால் பின்னாளில் 10 இடமாவது எம்ஜிஆர் ஜெயா பெயரைச் சொல்லி வெல்லமுடியாதா என்ற தொலைநோக்கு திட்டத்தில் இருக்கின்றது.

இந்த பனிப்போர் எதில் முடியும் என தெரியாது, வருங்காலம்தான் பதில் சொல்லும். எப்படியோ சினிமாவால் பலமான‌ திராவிட கட்சிகள், அந்த சினிமாவினையே முடக்க நினைப்பதுதான் விசித்திரம். – ஸ்டான்லி ராஜன்.

tamil.filmibeat.com