கைரி ஜமாலுடின்: தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் அரசியல் திண்மை இருக்கிறதா?

 

KJtoabolishvschoolsதாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்ட வேண்டும். நாட்டில் ஒற்றுமையை வளர்க்க இது ஒரு பிரபலமான கருத்து. ஆனால், தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் திண்மை அரசியலிலுள்ள யாருக்காவது உண்டா என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பாக்கர் கேள்வி எழுப்பினார்.

அது ஒரு சிறந்த குறிக்கோள், ஏனென்றால் ஒற்றுமையின் ஒரு கூறாக அனைவரும் ஒரே பள்ளிக்குச் செல்கிறார்கள்…ஆனால், அது கடினமானது என்று கைரி கூறினார்.

தற்போதைய அரசியல் களத்தின் இருதரப்பினரில் எவரும் இதைச் செய்வார்கள் என்று நான் எண்ணவில்லை என்று பெட்ரோனாஸ் பணியாளர்கள் இன்று கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு டிஎன்50 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகையில் கைரி கூறினார்.

இது பொதுமக்கள் அவர்களுடைய 2050 பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு புத்ராஜெயா தொடர்ந்து நடத்தி வரும் டிரான்ஸ்போர்மாசி நேசனல்50 (டிஎன்50) கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகும். ஆனால், இது தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுவது அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சுமார் 250 பெட்ரோனாஸ் பணியாளகளுக்கு மிக விருப்பமான கருத்தாகக் காணப்பட்டது.

பங்கேற்றிருந்தவர்களில் அஸ்லான் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் தாம் ஓர் ஒன்றுபட்ட மலேசியாவை உணர்வுப்பூர்வமாக விரும்புவதாகவும், அதனை நாம் அடைவதற்கு தற்போதைய தாய்மொழிப்பள்ளி அமைவை ஒழித்துக்கட்டி விட்டு அதன் இடத்தில் ஒரு தேசியக் கல்வி அமைவு முறையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மலாய்மொழி மட்டும் போதிக்கும் பள்ளிகளின் நிலை?

பெட்ரோனாஸ் பணியாளர்களில் ஒரு பகுதியினரும் இது போன்ற விருப்பத்தைத் தெரிவித்தனர்.

2050 இல், ஒரு தேசியப்பள்ளி அமைவுமுறையின் கீழ் குழந்தைகள் ஒன்றுபடுத்தப்பட்டு, முழுமையாக்கப்பட்டு இருப்பதைக் காண விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்களிடம் தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் கருத்தை ஆதரிக்கிறீர்களா என்று கைரி கேட்டார். அதற்கு அங்கிருந்த பெரும்பாலானோர் தங்களுடையக் கைகளை உயர்த்திக் காட்டினர்.

1987 இல், எப்படி சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயு ஆங்கிலமொழி தேசியப்பள்ளிகளுக்கு ஆதரவாக தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டினார் என்பதையும் அதனால் தாம் கவரப்பட்டதாகவும் கூறிய கைரி, அது போன்ற கொள்கைகளை மலேசியாவில் அமல்படுத்துவதிலுல்ல சிரமங்களை எடுத்துரைத்தார்.

தாய்மொழிப்பள்ளிகளை மூடுங்கள் என்று நீங்கள் கூறிய அடுத்த கணமே, மற்ற தரப்பினர் உங்களுடைய முற்றிலும் தங்கிப்படிக்கும் மலாய்ப்பள்ளிகளின் நிலை என்ன என்று கேட்பார்கள் என்று கூறிய கைரி, “நியாயப்படி, அது போகத்தான் வேண்டும். அது சமூக ஒப்பந்தத்தை மீண்டும் எழுதுவதாகும். அது பெரிய விசயம். அதற்கு நாம் தயாரா?”, என்று கேட்டார்.

இக்கேள்விக்கு மௌனம்தான் பதிலாக இருந்தது.