மண்ணின் மைந்தர்’ தகுதிக்கு சமயம்தான் அளவுகோலா?

–  ஞாயிறு நக்கீரன், ஜூலை 20, 2017. 

tamilsinestatesபல இனம், பல சமயம், பல மொழி, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்த மலையக மண்வாழ் மைந்தர்களில் ஒரு சாரார் மட்டும் அரச அணுகூலத்தைத் தடையின்றி காலம் உள்ளளவும் கார் உள்ளளவும் பெற்றுக் கொள்ள ஏதுவாக ‘மண்ணின் மைந்தர்’ என்னும் தகுதி வழங்கப்படுவதற்கு அரசியல் சாசன ரீதியில் உரிமை இருப்பதாகவும் அதைப்பற்றி ஒருவரும் ஒருபோதும் கேள்வி எழுப்பக்கூடாதென்றும் அப்படி கேள்வி எழுப்ப முனைபவர்கள் பழைய வரலாற்றை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தேசிய முன்னணியின் பெரிய அண்ணனான அம்னோ சார்பில் அவ்வப்பொழுது சொல்லப்படுவதுண்டு.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நோ ஓமாரைப் போன்றவர்கள் வந்தேறிகள் என்று அவ்வப்பொழுது சொல்லி வைப்பதுடன் ‘மே 13-ஐ மறந்து விடாதீர்கள்’ என்று எச்சரிப்பதும் அடிக்கடி நடக்கும்.

இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்து பல நூற்றாண்டுகளாக தங்களின் வாழ்வை இந்த மலையக மண்ணுடன் ஐக்கியப் படுத்திக் கொண்ட மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் மண்ணின் மைந்தர் தகுதி வழங்க முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் அது குறித்து அரசிதழில் வெளியிடுவதா அல்லது  நிர்வாக நடைமுறையின்படி அறிவிப்பு செய்வதா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்ற பொருள்படும்படியும் பிரதமர் அறிவித்திருப்பது, அவரின் ‘ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும்’ என்ற பாரபட்சப் போக்கை வெளிப்படுத்துகிறது.

umityபத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்கை வள நாடாக விளங்கிய அதே நேரத்தில் வேளாண்மை வள நாடாகவும் திகழ்ந்தது, மலாயா. அந்தக் காலக் கட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக ‘டின்’ என்னும் உலோக உற்பத்தியையும் ரப்பர் உற்பத்தியையும் நாடு நம்பி இருந்தது. அந்த நேரத்தில், மலாயா இந்தியர்களில் 90 விழுக்காட்டினருக்கும் மேலாக மலாயாத் தமிழர்கள்தான் இருந்தனர்; குறிப்பாக தோட்டப் பாட்டாளிகள் திகழ்ந்தனர்.

உலக சந்தையில் ரப்பருக்கு வாய்ப்பு மந்தமடைந்தபோது, செம்பனை உற்பத்தியை பொருளாதார மேம்பாட்டிற்கு பற்றுக் கோடாக நாடு கொண்டபோது செம்பனை பயிர் வளர்ப்பிலும் செம்பனை உற்பத்தியிலும் தமிழ்த் தொழிலாளர்கள் முற்றும் முழுதும் ஈடுபட்டனர்.

அன்றைய மலாயாவில் நாட்டின் வட புலத்தில் இருந்து தென்புலம் வரை மலாயாத் தமிழர்கள்தான் தோட்டத் தொழிலாளர்களாக பாடுபட்டனர். இதற்காக, காட்டையும் மேட்டையும் திருத்தி, இந்த மண்ணின் வளப்பத்திற்காக இரத்தத்தையும் வியர்வையும் சிந்தி ஓடாய்த் தேய்ந்தவர்கள் தமிழ்ப் பாட்டாளியினர்தான். தங்களின் வாழ்க்கை நிலையும் ஓடாகத்தான் இருந்தது; அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த மண்ணின் வளப்பத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள் தமிழர்கள் என்றால் அதில் மிகையில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாடு விடுதலை அடைவதற்காக எத்தனையோ வழியில் தங்களின் வாழ்வையும் எதிர்காலத்தையும் ஈகம் செய்தவர்கள் மாலாயத் தமிழர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததால் இன்னும் ஊக்கம் பெற்று மலாயா விடுதலை இயக்கத்திலும் போராட்ட களத்திலும் ஈடுபட்டவர்கள் மலாயாத் தமிழர்கள்.

எனவே, இந்த மண்ணில் பிறந்த தமிழர்கள் அனைவருக்கும் மண்ணின் மைந்தர் என்ற தகுதியை சமய எல்லையைக் கடந்து வழங்கினால், அது பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ள ‘ஒரே மலேசியக் கொள்கை’க்கு பொருத்தமாக இருக்கும்.