மின்னல் பண்பலை – தேசிய முன்னணியின் ஊதுகுழலா?

minnal2கணியன். 20.7.2017. ஆர்.டி.எம். தமிழ் வானொலி அலைவரிசையான மின்னல் பண்பலை, அரச வானொலி என்ற நிலையிலிருந்து வழுவி, தேசிய முன்னணியின் அலைவரிசையாக மாறி பல பத்து வருடங்கள் ஆகிவிட்டதை பொது மக்கள்  நன்கு அறிவார்கள். ஆனாலும், அண்மைக் காலமாக, மின்னல் பண்பலை வானொலி தேசிய முன்னணியின் ஊது குழலாகவே மாறிவிட்டது.

ஆர்டிஎம் வானொலி பொதுவாக நாட்டிற்குரியது. அது, ஆளுந்தரப்பினர், பொது மக்கள், எதிர்க்கட்சியினர் என எல்லாத்தரப்பினருக்கும் பொதுவானது. நாட்டை ஆளுவோரின் கொள்கை அறிவிப்பு, புதியத் திட்டங்கள் பற்றியெல்லாம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற கடமை வானொலிக்கு உண்டு. அதேப்போல, பொது மக்களின் கருத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்து விளக்கம், மறுப்புச் செய்திக்கெல்லாம்கூட இடமளிக்கப்பட வேண்டும். வானொலியைப் பொறுத்தவரை, இதுதான் உலகில் உள்ள பொதுவான நிலை.

ஆனால், இங்குள்ள மின்னல் பண்பலை வானொலியோ மலேசிய இந்தியச் சமுதாயத்திற்கான பிரச்சார பீரங்கியாக, தேசிய முன்னணி சார்பில் தொய்வில்லாமல் செயல்படுவதைக் கண்டு, தேசிய முன்னணி தலைமைப் பீடமோ  மஇகா தலைமையகமோ கொஞ்சமும் கவலைப்படுவதாகவோ மனம் கூசுவதாகவோ தெரியவில்லை.

பொருள்-சேவை வரி என்பது, இந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் ஐக்கியமான ஒன்று. இதனால் மக்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது பற்றி தேசிய அளவில் ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படாத நிலையில், அரசுக்கு நன்மையானது என்றுமட்டும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில், வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால், ஜிஎஸ்டி என்னும் பொருள் சேவை வரியை அகற்றுவோம் என்று நம்பிக்கையுடன் சொன்ன கருத்தை மின்னல் வசதியாக இருட்டடிப்பு செய்துவிட்டது; மாறாக, அதைப் பற்றி விமர்சனம் செய்த அம்னோ தலைவர்களின் கருத்தை மட்டும் திரும்பத் திரும்ப மின்னல் வானொலி ஒலியேற்றியது.

மொத்தத்தில், ஆளுந்தரப்பினருக்குரிய ஊடகத்தைப் போல ஆர்டிஎம் வானொலிகள் செயல்படுகின்றன. இதில், மின்னல் வானொலி, முன்னிலையில் இருக்கிறது. தேசிய முன்னணிக்கு ஆதரவாக மேளம் தட்டும் பொதுமக்களின் கருத்து காலந்தோறும் இவ்வானொலியில் இடம்பெறும். எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்துகூட கடுகளவும் இடம்பெறுவதில்லை. மாறாக, ஆளுந்தரப்பினர் என்ன சொன்னாலும் அவற்றை அப்படியே ஒலிபரப்பும் ஆர்டிம் வானொலி-தொலைகாட்சி அலைவரிசைகள், எதிர்க்கட்சியினர்மீது ஆளுந்தரப்பினர் வசைமாரி பொழிந்தாலும் அதையும்  கொஞ்சமும் கூசாமல் ஒலிபரப்புகின்றன. இது, ஜனநாயகத் தன்மையை அப்பட்டமாக மீறுவதாகும்.

போகட்டும் என்று பொறுமை காக்கும் வேளையில், அன்றாடம் காலை 8.00 மணி செய்தியைத் தொடர்ந்து ஒலிபரப்பப்படும் ‘செய்தி விளக்கம்’, பெரும்பாலும் எதிர்க்கட்சியினரையும் தேசிய முன்னணிக்கு மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் சாடுவதற்கும் வசைபாடுவதற்கும்தான் பயன்படுத்தப் படுகிறது. அந்த வகையில்தான் ஜூலை 20-ஆம் நாள் காலையில் ஒலிபரப்பப்பட்ட செய்தி விளக்கத்தை ஒரு மூத்த செய்தியாளர் தயாரிக்க அதை மற்றொருவர் வாசித்தார்.

2050 தேசிய உருமாற்றத் திட்டம் (டி.என். 50)-ஐப் பற்றி விளக்கம் அளித்த வானொலி, பிரதமரின் சிந்தனையில் உதித்த அந்தத் திட்டம் சாதாரணத் திட்டம் அல்ல; நாட்டின் நீண்ட கால வளர்ச்சியையும் மக்களின் மேம்பாட்டையும் இலக்காகக் கொண்டு தீட்டப்பட்டது; 2020-இல் தொடங்கி 2050-இல் முடிவுறும் இந்தத் திட்டம் தற்பொழுது உருவாக்கம் பெற்று வருகிறது. பணப்பரிமாற்றமும் கடன்பற்று அட்டைப் பயன்பாடும் அற்ற நான்காவது தொழில்புரட்சிக்கு மக்களைத் தயார்ப்படுத்தும் அந்தத் திட்டம், இளைஞர்களுக்கு உந்து சக்தியை அளிக்க வல்லது என்றெல்லாம் சொல்லப்பட்ட அந்தக் கருத்து விளக்கத்தில், டி.என். 50ப் பற்றி விமர்சனம் செய்பவர்களை தூரநோக்குப் பார்வையற்றவர்கள் என்றெல்லாம் வசைபாடப்பட்டது.

அரச தகவல் சாதனத்தின் கிளை அமைப்பான மின்னல் பண்பலை கடைப்பிடிக்கும் ஜனநாயகக் கூறு இப்படித்தான் தொடர்கிறது; சில வேளைகளில் இழந்து வரும் மக்களின் நம்பிக்கையை மீட்க அவ்வப்போது நல்ல தகவல் பரிமாற்றத்தையும் ஒலிப்பரப்பும் இந்தப் பண்பலை ஒட்டு மொத்தத்தில் மக்களின் அதிருப்தியின் அறிகுறியாகவே உள்ளது.