காவல்துறை லோட்டஸ் நிறுவனத்தின் கைக்கூலியா, பி.எஸ்.எம். இளைஞர் பிரிவு கேட்கிறது

Slide1கட்கோ குடியேறிகள் 30 பேரைக் கைது செய்த அரச மலேசியக் காவல்துறையின் போக்கை, மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு கண்டிப்பதாக, அதன் துணைத் தலைவர் சரண் ராஜ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 18-ம் தேதி, லோட்டஸ் நிறுவனம் தங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து, இரப்பர் மரங்களை வெட்டி, வெளியேற்றியதைத் தடுத்ததற்காக 13 பெண்கள் உட்பட 28 பேரைக் கைது செய்த காவல்துறையினர், இன்னும் முழுமையாக ஒரு வாரம் கூட நிறைவு பெறாத நிலையில், இன்று (ஜூலை 24),  30 பேரை மீண்டும் கைது செய்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் வயோதிகர்கள் மற்றும் 16 பெண்களும் அடங்குவர்.

லோட்டஸ் நிறுவனத்தின் தாமரை ஹோல்டிங்ஸ், கட்கோ குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய இரப்பர் மரங்களைச் சட்டத்திற்குப் புறம்பாக அழித்து வருவதைக் குடியேறிகள் தடுத்து வருகிறார்கள். நிலம் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தீர்ப்பு வழங்கப்படும் வரை, தாமரை ஹோல்டிங்ஸ் அமைதி காக்க வேண்டும், நீதிமன்றத்தை மதிக்க வேண்டுமென சரண் ராஜ் தனதறிக்கையில் கூறியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, கட்கோ மக்களையும் அவர்களின் நிலத்தையும் பாதுகாக்க வேண்டியது Slide2காவல்துறையின் கடமை என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த வாரம், காவல்துறையினரின் 3 நாள் தடுப்புக்காவல் கோரிக்கையை சிரம்பான் நீதிமன்றம் இரத்து செய்தது.

இலாபம் கருதி, கட்கோ குடியேறிகள் மீது பணக்கார வர்க்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த ஒடுக்குமுறையை, பி.எஸ்.எம். இளைஞர் பிரிவு மிகக் கடுமையாகக் கருதுவதாக சரண் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக, இன்று மதியம் 2.30 மணியளவில் லாரிகளைத் தடுத்து நிறுத்தியக் குற்றத்திற்காக கட்கோ குடியேறிகள் 30 பேரை, 339 சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

சுமார் 6 மணி நேரம் கழித்து, அவர்கள் அனைவரும் 1000 ரிங்கிட் போலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பி.எஸ்.எம். கட்சியின் சிரம்பான் கிளைத் தலைவர் ஆர்.விஜய் காந்தி தெரிவித்தார்.