அஞ்சலி: உலகப்புகழ் இராஜ இராஜ சோழன்

raja-rajaசிம்மக் குரலோன், உலகமெங்கும் சீர்காழி புகழ் பாடி எண்ணற்ற ரசிகர்களின் இதையத்தை ஆட்கொண்ட மலேசிய சீர்காழி புகழ் திரு. இராஜ இராஜசோழன் இறைவனடி சேர்ந்தார்.

மெய்யழகு செல்வன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 1961 ஆம் ஆண்டு கிள்ளான் துறைமுக வட்டாரத்தில் பிறந்தவர். பொன்னியின் – சாந்தி தம்பதிகளின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாக பிறந்த இவருக்கு சங்கீத ஆர்வம் சிறு வயது முதலே இருந்தது என்கிறார் இவரின் இளைய சகோதரர் மேகநாதன். “என் தந்தைதான் குடும்பந்தில் இருந்த ஒரு அண்ணனின் பெயரையே இவருக்கும், இராசேந்திர சோழன், என்று வைத்தார்” என்கிறார்.

இவரின் வரலாற்றை செம்பருத்திக்காக நினைவு கூர்ந்த மேகநாதன், தனது அண்ணனின் பிரிவு பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளதாக மனம் கசிந்தார்.

நாடு தழுவிய அளவில் பலகுரல் மன்னன் சண்முகநாதனுடன் நாடு தழுவிய அளவில் மேடை பாடகர்களாக வலம் வந்ததும் அதன் பிறகு மஇகாவின் முன்னாள் தலைவர் சாமிவேலு அவர்களின் உந்துதலால் 1983 ஆம் ஆண்டுவாக்கில் சென்னைக்கு சென்று அங்கு சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில் இசை பயின்றவர். அதோடு பானுமதி மற்றும் மலேசிய வாசுதேவன் போன்றவர்களின் ஆசியுடன் தனது திறமையை வளர்த்தவர்.

இராசேந்திர சோழன் என்ற பெயரை மாற்றியவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட  டி ஆர் பாப்பா ஆகும்.  இராசேந்திர சோழன் போரில் தோற்றவன், இராச இராசேந்திர சோழந்தான் போரில் வென்று எட்டு திசைக்கும் சென்றவன் என்பாதால் டி ஆர் பாப்பா அவரின் புகழ் எங்கும் பரவட்டும் என்ற பெருந்தன்மையுடன் அவருக்கு அதைச் சூட்டினாராம்.

சுமார் 300 க்கும் அதிகமான கேசட் பதுவுகளை வெளியிட்ட  இவர் தமிழர்கள் வாழும் உலகின் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.  இவர் இறுதியாக சென்று வந்தது சுவீடன் ஆகும்.

இவரின் பிரிவு நமக்கு மட்டுமல்ல உலக தமிழர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் இழப்பாகும். தமிழ்க்கலையை நம்பி வாழ்வாதாரத்தை  நகர்துவதென்பது அசதாரணமானது. அதில் வரவு குறைவாக இருக்கும், ஆனால் அதில்தான் உன்னத உணர்வும் உயிரோட்டமும் இருக்கும்.  அன்னாரின் துயரில் ஆழ்ந்த உணர்வுடன் ஆறுதலுக்காக கூடும் கலைஞர்கள் மற்றும் சக அன்பர்களின் மனநிலை அதை மெய்பிக்கிறது.

அன்னாரது  இறுதிச்சடங்குகள் நாளை புதன்கிழமை காலை 10.00 அளவில், No.20, Jalan Krisoberil 7/20, Section 7, 40000 Shah Alam இல் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அன்னாரின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னார் இறைநிழலில் அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம். – செம்பருத்தி குடும்பத்தினர்.