அம்னோ இளைஞர்களுக்குக் கண்ணியம் தேவை- முகைதின்

muhபார்டி  பிரிபூமி  பெர்சத்து    மலேசியா(பெர்சத்து)   பிரதமர்    நஜிப்  அப்துல்   ரசாக்கை    டாக்டர்   மகாதிர்   முகம்மட்டுடன்   வாதத்துக்கு    அழைத்தது    ஒரு   மிரட்டல்   அல்ல   என   அக்கட்சித்   தலைவர்   முகைதின்   யாசின்    கூறினார்.

எனவே,  வாதத்துக்கு   அழைப்பு   கொடுக்கச்   சென்ற    பெர்சத்து    இளைஞர்களை    அம்னோ   இளைஞர்கள்    தடுத்தது   சரியல்ல    என  முகைதின்   சொன்னார்.

“அது   ஒரு  மிரட்டலே   அல்ல.  அம்னோ   இளைஞர்கள்   இன்னும்   சற்று   கண்ணியமாக    நடந்து    கொண்டிருக்கலாம்”,   என்றவர்   இன்று   நாடாளுமன்ற    வளாகத்தில்    செய்தியாளர்களிடம்    கூறினார்.

நேற்று  நஜிப்பைச்   சந்தித்து     அவரிடம்   ‘மறைப்பதற்கு   எதுவுமில்லை  2.0   கருத்தரங்கு’க்கு      அழைப்பு    கொடுக்க   புத்ரா      உலக    வாணிக    மையத்துக்குச்    சென்ற    பெர்சத்து    இளைஞர்களை    அம்னோ   இளைஞர்கள்   தடுத்து   நிறுத்தியபோது    அங்கு   இரு   தரப்பினருக்குமிடையில்    சிறு  மோதல்   நிகழ்ந்தது.

இதுபோன்ற   அசம்பாவிதம்     மீண்டும்   நிகழக்கூடாது    என்று   முகைதின்  குறிப்பிட்டார்.

கருத்தரங்கு   ஆகஸ்டு  13-இல்   ஷா  ஆலம்,   டேவான்  ராஜா   மூடாவில்   நடைபெறுகிறது.

அதில்  கலந்துகொள்ளும்   மகாதிர்,   நஜிப்பின்   வங்கிக்  கணக்கில்     வரவு  வைக்கப்பட்ட   ரிம2.6 பில்லியன்   குறித்து   பல   கேள்விகளை    எழுப்புவார்    என்று   தெரிகிறது.