சாந்தியாகோ: பிரதமரே, எம்ஐபி “வெட்டிப் பேச்சு” அல்லவென்றால், கம்போங் காட்கோ மக்களுக்கு உதவுங்கள்

 

Santiagohelpgatcoகம்போங் காட்கோ கிராம மக்கள் விவகாரத்தில் தலையிட்டு இந்தியர்களுக்கு சொன்னதைச் செய்யுமாறு பிரதமர் நஜிப்புக்கு டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ இன்று சவால் விட்டார்.

வறுமையில் வாழும் இந்தியர்களுக்கு அரசாங்கம் உதவும் என்று மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்ஐபி) உறுதியளித்துள்ளது என்று சாந்தியாகோ குறிப்பிட்டார்.

“ஆகவே, இந்தத் தகராறில் நேரடியாகத் தலையிட்டு ஏழை இந்தியர்கள் மேலும் சுரண்டப்படுதல் மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்குமாறு நான் பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

“இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என்றால், எம்ஐபி வெறும் வெட்டிப் பேச்சுதான் என்று இந்திய சமூகம் புரிந்து கொள்ளும்”, என்று சந்தியாகோ நாடாளுமன்ற ஊடக அறையில் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

ரப்பர் மரக்கட்டைகளை ஏற்றிச் செல்வதிலிருந்து ஒரு லோரியைத் தடுத்து நிறுத்தியதற்காக திங்கட்கிழம கம்போங் காட்கோவைச் சேர்ந்த 30 கிராமவாசிகளை போலீசார் கைது செய்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை, அதே காரணத்திற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்போங் காட்கோ நிலம் பற்றி நீண்ட காலமாக அக்கிராமவாசிகளுக்கும் தாமரை ஹோல்டிங்ஸிக்கும் நடந்து வரும் போராட்டித்தின் மிக அண்மைய நிகழ்ச்சியாக இந்த இரு சம்பவங்களும் இருக்கின்றன.