மணமாகாத பெற்றொருக்குப் பிறந்த பிள்ளை தந்தையின் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக்கொள்ளலாம்: நீதிமன்றம் தீர்ப்பு

courtமுறையீட்டு    நீதிமன்றம்,    மணமாகாத   பெற்றொருக்குப்  பிறந்த   பிள்ளைகள்   தொடர்பில்    ஒரு   முக்கியமான   தீர்ப்பை   இன்று   வெளியிட்டது.   அப்படி   பிறந்த    பிள்ளை   அதன்   தந்தையின்   பெயரை   அதன்  பெயருடன்   சேர்த்துக்கொள்ளலாம்    என்றும்    அதன்   தொடர்பில்    தேசிய  ஃபாட்வா   குழு   பிறப்பித்த   ஆணை   சட்டப்படி   செல்லாது   என்றும்   அது   தீர்ப்பளித்தது.

பெற்றோருக்குத்   திருமணம்    ஆகி   ஐந்து   மாதங்கள்  24  நாள்கள்  ஆன   நிலையில்   பிறந்த   ஒரு  பிள்ளைக்குப்  பெயரிடுவது     தொடர்பான    வழக்கு   மேல்முறையீட்டு   நீதிமன்ற  விசாரணைக்கு    வந்தபோது   அது   இத்தீர்ப்பை  வழங்கியது.

தந்தை   என்று   உரிமை  கொண்டாடுபவருக்கு    அதற்கான   தகுதிகள்   உண்டா    என்பதைத்   தீர்மானிக்கும்   உரிமை   தேசிய   பதிவுத்துறை(என்ஆர்டி)   தலைமை   இயக்குனருக்கு  இருக்கிறது    என்றும்    பிறப்பு,  இறப்புச்   சட்டம் (பிடிஆர்ஏ)  பிரிவு   13ஏ (2)   அந்த   அதிகாரத்தை    அவருக்கு    அளிக்கிறது   என்றும்   முறையீட்டு   நீதிமன்றம்   அதன்   தீர்ப்பில்   குறிப்பிட்டது.

இது  முஸ்லிம்களுக்கும்    முஸ்லிம்  அல்லாதாருக்கும்   பொருந்தும்.

2003-இல்  தேசிய   ஃபாட்வா   குழு   மணமாகாத   பெற்றோருக்குப்    பிறந்த   பிள்ளைகள்,   மணமான    ஆறு  மாதத்துக்குள்   பிறந்திருந்தால்   தந்தை   என்று   உரிமை   கொண்டாடுபவரின்   பெயரை   இணைத்துக்கொள்ள  முடியாது    என்று   தீர்மானித்திருந்தது.

ஆனால்,  முறையீட்டு   நீதிமன்றத்தின்   மூன்று   நீதிபதிகளான   நீதிபதி   அப்துல்   ரஹ்மான்   செப்லி,   தெங்கு   மய்மூன்  துவான்   மாட்,    சலேகா  யூசுப்   ஆகியோர்   வழக்கில்    குறிப்பிடப்படும்    பிள்ளை   அதன்    தந்தையின்   பெயரான  “MEMK”  என்பதைத்   தன்  பெயருடன்   இணைத்துக்  கொள்ளலாம்   என்று   தீர்ப்பளித்தனர்.

பிள்ளைகளின்   அடையாளத்தைப்    பாதுகாக்க    நீதிமன்றத்தில்     பெற்றோரின்   பெயரில்   உள்ள  முதல்   எழுத்துகள்   மட்டுமே  பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன.

தீர்ப்பை   வாசித்த    நீதிபதி     அப்துல்   ரஹ்மான்,    தேசிய   ஃபாட்வா   குழு   வெளியிட்ட    ஃபாட்வா    என்ஆர்டி  தலைமை  இயக்குனரைக்  கட்டுப்படுத்தாது   என்றும்    அவர்   அதைப்  பின்பற்ற  வேண்டியதில்லை    என்றும்   கூறிற்று.

அக்குழந்தை   பிறந்த    இரண்டாண்டுகளுக்குப்   பின்னர்தான்  என்ஆர்டியில்   பதிவு    செய்யப்பட்டது.  அப்போது   அதன்  பெயருடன்  தந்தையின்   பெயரான      MEMK-யை  இணைத்துக்கொள்ள   பெற்றோர்   கேட்டுக்கொண்டதற்கு    என்ஆர்டி   குழந்தையின்   பெயருடன்    “பின்  அப்துல்லா”   என்று   சேர்த்துக்  கொண்டது.

“அவர்  (என்ஆர்டி   தலைமை   இயக்குனர்)   அவ்வாறு    செய்தது  பிடிஆர்ஏ    அவருக்கு   அளிக்கும்      அதிகாரத்தை  மீறிய   செயலாகும்  என்பதுடன்  ஒரு  சமய  அமைப்புக்கு    அடிபணியும்   செயலுமாகும்.

“ஒரு  சமய   அமைப்பு    பிறப்பிக்கும்   ஃபாட்வா      அல்லது   சமய   ஆணையை    நாடாளுமன்றம்   கூட்டரசு   சட்டமாக   ஏற்றுக்கொண்டால்  ஒழிய  அது   சட்டம்  ஆகாது”,  என்று   நீதிபதி   அப்துல்   ரஹ்மான்   கூறினார்.