அரசியல் நாகரிகம் எதிரணியினருக்கு மட்டும்தானா?

TodefeatBNஎதிர் அணியினரை, குறிப்பாக  மகாதீரை வலிந்து விமர்சனம் செய்வதில் எப்போதுமே முனைப்பு காட்டுபவர் மாட்சிர் காலிட். கெடா மாநிலத்தின் ஒன்பதாவது மந்திரி பெசாராக விளங்கிய இவர், கெடா மாநில அரசியலில் ஒரு காலத்தில் தான் விரும்பியபடி யெல்லாம் செயல்பட முடியாமல் கடிவாளம் போட்டவர் முன்னாள் பிரதமர் மகாதீர் என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான், இப்பொழுது மகாதீர் வாயைத் திறந்தாலே போதும், அடுத்த கணமே எதிர் அம்பை வீசும் முதல் அரசியல்வாதியாக மாட்சிர் விளங்குகிறார்.

இதற்கு முன், எரிசக்தி-பசுமைத் தொழில்நுட்பம்-நீர்ப்பராமரிப்புத் துறையின் துணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மாட்சிர், 2008 அரசியல் ஆழிப் பேரலையின்போது கெடா மாநில ஆட்சியை பாஸ் கட்சி கைப்பற்றிய நேரத்தில் கெடா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த நூற்றாண்டு முடிவுறும் தறுவாயில் 1999-இல் துணைப் பிரதமர்  அப்துல்லா படாவின் அரசியல் செயலாளராக தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடக்கிய மாட்சிர், மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் நன்கு அனுபவம் பெற்றவர். அப்படிப்பட்ட இவர், நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர்களை, குறிப்பாக மகாதீரை தனிப்பட்ட முறையில் இந்த அளவிற்கு எதிர்ப்பது சரியானதாகப் படவில்லை;

இப்படிப்பட்ட மாட்சிர் காலிட் கொஞ்சம் ஓய்ந்திருந்தால் போதும், உடனே எதிரணியினருக்கு எதிராக சாட்டையை சொடுக்கும் பணியை கெருவாக் கையில் எடுத்துக் கொள்கிறார்.

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், சபா மாநில வளர்ச்சியை இலக்காகக் கொண்ட பான் போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிந்துமின்-கம்போங் மெலாலியா சாலைத் திட்டத்தை சிந்துமின் பட்டணத்தில் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், நம்பிக்கைக் கூட்டணியயைப் பார்த்து ‘அலிபாபா ஒப்பந்தம்’ கண்டுள்ள அலிபாபா கூட்டணியினர் என்று விமரிசனம் புரிந்தார்.

தற்பொழுது, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களைப் பார்த்து, வயாதானவர்களின் கூடாரம் என்கிறார் இதே பிரதமர். இந்தக் கருத்தெல்லாம் அரசியல் நாகரிகம் மிக்கதா என்பதற்கு சைட் சாலே கெருவாக் என்று பொதுவாக அழைக்கப்படும் டத்தோஸ்ரீ பங்ளிமா முகமட் சாலே முகமட் சைட்-தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஞாயிறு’ நக்கீரன்