காட்கோ பிரச்சனையில் புக்கிட் அமான் தலையீட்டை கோரும் குடியேறிகள்

 

Gatcobukitamanநெகிரி செம்பிலான், கம்போங் காட்கோ பிரச்சனையில் மாநில போலீசாரின் அத்துமீறல் நடவடிக்கைகளை புக்கிட் அமான் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று சுமார் 70 கம்போங் காட்கோ குடியேறிகள் இன்று கோரிக்கை விடுத்தனர்.

புக்கிட் அமான் ஒரு சிறப்புக்குழுவை அமைத்து கம்போங் காட்கோ விவகாரத்தில் நிகழ்ந்த அத்துமீறல்களை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று புக்கிட் அமானில் கொடுக்கப்பட கோரிக்ககளில் அடங்கும். அக்கோரிக்கையை மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ். அருட்செல்வன் புக்கிட் அமான் அதிகாரி எ..ஸ்கந்தகுருவிடம் அளித்தார்.

காலை மணி 10.30 க்கு பெடரல் போலீஸ் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்த கிராமவாசிகளின் குழு, “காட்கோ நிலம் எங்களுடைய நிலம்!”, “போலீஸ் இரக்கமற்றது”, என்ற வாசகங்களைக் கொண்ட பதாதைகளை அவர்களுடன் வைத்திருந்தனர்.

அருட்செல்வன் அங்கு கடமையில் இருந்த போலீஸ் அதிகாரி எஸ்கந்தகுருவிடம் உள்ளே சென்று இவ்விவகாரம் குறித்து விவாதிக்க அவர்களை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அவர்களை உள்ளேவிடக் கூடாது என்று “மேலிடத்து” உத்தரவு இருப்பதால் யாரையும் உள்ளேவிட முடியாது என்று எஸ்கந்தகுரு தெரிவித்தார்.

நடந்ததை அருட்செல்வன் அங்கு கூடியிருந்த காட்கோ குடியேறிகளிடம் தெரிவித்ததோடு செய்தியாளர்களுக்கும் காட்கோ நில விவகாரம் குறித்த முழு விபரங்களையும் கொடுத்தார்.

அருட்செல்வனுடன் கைது செய்யப்பட்ட கிராமவாசிகளைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் கார்த்திக் ஷான், சுவாராம் செயல்முறை இயக்குனர் சீவன் துரைசாமி ஆகியோரும் இந்தனர்.

கடந்த திங்கட்கிழமை புக்கிட் அமான் அதிகாரிகளைச் சந்திப்பதற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் துரைசாமி தெரிவித்தார்.

இறுதியில், எஸ்கந்தகுரு கம்போங் காட்கோ மக்கள் கூடிநின்ற இடத்திற்கு வந்தார். அவர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டார். கிராம மக்களின் கோரிக்கையை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகாரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று அவர் மீண்டும் மீண்டும் உறுதி கூறினார்.

அங்கிருந்த ஒரு மூதாட்டி சக கிராமவாசிகளின் ஆரவார ஆதரவோடு அவரை நன்றாக தமிழில் திட்டித் தீர்த்தார்.

அதன் பின்னர், சுமார் பிற்பகல் ஒரு மணி அளவில் அவர்கள் கலைந்து சென்றனர்.