இந்திய முஸ்லிம்களுக்கு பூமி தகுதி: அமைச்சரவையில் விவாதிக்கப்படவே இல்லை, லியோ கூறுகிறார்

bumistatusmcaஇந்நாட்டின் இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி அளிக்கப்படும் என்பது எந்த ஓர் அமைச்சரவை கூட்டத்திற்கும் கொண்டுவரப்படமில்லை, விவாதிக்கப்படவுமில்லை என்று மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறுகிறார்.

இந்தப் பிரச்சனை சில தரப்பினரால் அவர்களின் சொந்த நலன்களுக்காக அரசியலாக்கப்பட்டுள்ளது. இது தேசியக் கொள்கை சம்பந்தப்பட்டதால், இந்த முன்மொழிதல் சீராக சிந்திக்கப்பட்டு முறையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றாரவர்.

தேசியப் பிரச்சனைகள் அல்லது கொள்கைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பாரிசான் பங்காளித்துவ கட்சிகளுக்கிடையே கருத்து வேற்றுமைகள் அல்லது எதிர்ப்புகள் இருந்தால், அவற்றை வெளிக்கொணர்வதற்கு அக்கட்சிகளிடையே வழிவகைகள் இருக்கின்றன என்று போக்குவரத்து அமைச்சருமான லியோ கூறினார்.

“இது ஒரு பிச்சனை அல்ல. இந்த விவகாரம் அமைச்சரவை கூட்டத்திற்கு கொண்டுவரப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. பாரிசான் அளவில்கூட விவாதிக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனையுடன் விளையாடுவதை நிறுத்துவீர். மெர்தேக்கா தினம் நெருங்கிக் கொண்டிருக்கையில், தேசிய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்”, என்று கோலாலம்பூரில் இன்று ஓரு செய்தியாளர் கூட்டத்தில் லியோ மேலும் கூறினார்.

கடந்த வாரம், இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு பூமிபுத்ரா அங்கீகாரம் வழங்குவது பற்றி அரசாங்கம் ஆழ்ந்த ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் என்று பிரதமர் நஜிப் கூறியிருந்தார்.