தமிழ்ப்பள்ளியைக் காப்பற்ற எங்களைப் போல் போராடுங்கள் – சீன அமைப்புகள் ஆலோசனை!

DJZ 1டோங் ஜோங் எனப்படும் சீனர்களின் உயரிய கல்வி ஒருங்கிணைப்பு அமைப்பு மே19 இயக்கதிற்கு அதன் முழுமையான ஆதரவை வழங்கியதோடு, தாய்மொழிக் கல்விக்காக போராடும் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கூறியது.

இன்று காலை, மே 19 இயக்கத்தினருடன் நடத்திய இரண்டு மணி நேர கலந்துரையாடலின் போது, டோங் ஜோங் அமைப்பின் தலைவர் தெமங்கோங் டத்தோ லாவ் லீ மிங் மற்றும் அதன் முக்கிய செயலவையினர் கலந்து கொண்டனர்.

இருமொழித்  திட்டம் என்பது அரசாங்கத்தின் ஒரு தாரள மனம் கொண்ட வியூகத்திட்டம். அதன் தாக்கம் தாய்மொழிக் கல்வியைத் தகர்க்கும் என்பது எங்களின் கணிப்பு என்றார் லாவ்.

“கொள்கையாக வடிவமைத்தால் எதிர்ப்பு இருக்கும் என்பதால், இருமொழித் திட்டம் என்ற போர்வையில், தோல்வி கண்ட பிபிஎஸ்எம்ஐ என்ற ஆங்கிலத்தில் அறிவியல் கணிதம் போதிக்கும் திட்டத்தை மீண்டும் அரசாங்கம்   அறிமுகப்படுத்தியுள்ளது. சில தரவுகளின் அடிப்படையில் பள்ளிகள் அமுலாக்கம் செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இது தாய்மொழிப்பள்ளிகளின் தனித்தன்மையை அகற்றும்; அதோடு அறிவு சார்ந்த கல்வியைப் புரியும் அளவில் வழங்காது”, என்றார் லாவ்.

djz 2“இருமொழித் திட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம், இதற்கு ஆதரவாக சீனர் சமூகம் துணை நிற்கிறது. பள்ளி மேலாளர் வாரியம்தான் இதற்கான ஆழமான கருத்தை பள்ளி நிருவாக தரப்பில் நிலைநிறுத்தி வருகிறது. இதற்கு எதிராகப் பள்ளிகள் செயல்பட  துணிவதில்லை”, என்று எவ்வாறு தலைமை ஆசிரியர்கள் கட்டுக்கோப்பாகத் தாய்மொழிக் கல்வியை பாதுகாக்க செயல்படுகின்றனர் என்பதை அவர் விளக்கினார்.

மே19 இயக்கத்தின் சார்பாக வழக்கறிஞர்கள்  கா. ஆறுமுகம், பாலமுரளி, மற்றும் கௌத்தம், தியாகு, காத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருமொழித் திட்ட அமுலாக்கத்திற்கு கடுமையான எதிர்ப்பை மே19 இயக்கம் பதிவு செய்து வருகிறது. சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் நாளடைவில் தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பை அழிக்கும் எனவே, அதன் அமுலாக்கத்தை முடக்க பல நட வடிக்கைகளை அது எடுத்து வருகிறது.

இந்தத் திட்டத்தை தலைமை ஆசிரியர்கள் திணிக்க முற்படக்கூடாது என்று கேட்டுக்கொள்ளும் மே 19 இயக்கத்தினர் அதேவேளையில், அப்படிச் செய்வது நமது அடையாளத்தை கட்டிக்காக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு செய்யும் துரோகிகமாக அமையும் என்கின்றனர்.