முன்னாள் இராணுவத்தினர் 2,88,952 பேரின் வாக்குகள் வளைக்கப்படுகின்றன!

yrsaynothingtohidenajib -ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 4, 2017.  

தேர்தல் யானை நெருங்குகிறது போலும்; மணியோசை பலமாகக் கேட்கிறது. ஆனாலும், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர்தான் இது உறுதி செய்யப்படும்.  நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பிறவிடங்களிலும் சேவையாற்றி ஓய்ந்திருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 952 பேரின் வாக்குகளை தேசிய முன்னணி கொத்தாக வளைக்க முனைப்பு காட்டுகிறது.

பதின்மூன்றாவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி எப்படி தடுமாறியதோ அதைப்போலத்தான் வரவிருக்கும் 14-ஆவது பொதுத் தேர்தலிலும் முடிவெடுக்க முடியாமல் தேசிய முன்னணி தலைமையும் அம்னோவின் தலைமைப் பீடமும் மதில்மேல் பூனையைப் போல தென்படுகின்றன.

தற்பொழுது வழங்கப்படும் ‘பிரிம்’ என்னும் சமூக நல உதவித் தொகையை இப்படி ஆண்டுதோறும் வழங்கும் எண்ணமெல்லாம் ஆரம்பத்தில் தேசிய முன்னணி அரசுக்கு இல்லை; 2012-ஆம் ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்தி முடித்திடலாம் என்றத் திட்டத்துடன்தான் அப்போது அத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆனாலும் அந்த ஆண்டில் தேசிய முன்னணி அரசு எதிர்பார்த்தபடி தீபகற்ப மலேசியாவில் ஆதரவு அலை  வீசாததால், அந்த ஆண்டில் தேர்தலை நடத்தாமல் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நலிந்த நிலையில் உள்ள மக்களுக்கான உதவி என்ற பெயரில் அளிக்கப்பட்ட அந்த அரச உதவியை அதிக வருமானம் பெற்ற அரச ஊழியர்களும் பெற்றுக் கொண்டது ஒருபுறமிருக்க, 2012-இல் அளிக்கப்பட்ட அந்த உதவித் தொகையை மக்கள் மறந்து விட்டதால், அடுத்த ஆண்டிலும் அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு தேசிய முன்னணி அரசு தள்ளப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு பேரளவில் நிதி தேவைப்படுவதால், அதை விடவும் முடியாமல் தொடரவும் விருப்பமின்றி இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருக்கும் இன்றைய தேசிய முன்னணி அரசு, அந்த பிரிம் உதவித் திட்டத்தை தற்பொழுது இராணுவ முன்னாள் வீரர்களுக்கும் ஏகமாக நீட்டித்துள்ளது.

brimஐந்துவித சலுகைகளை அள்ளி அளிக்க மத்திய தேசிய முன்னணிக் கூட்டரசு அறிவிப்பு செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘(B)பந்துவான் ‘(B)பக்தி நெகாரா’(பிபிஎன்) என்னும் உதவித் திட்டத்தின்வழி, ஓய்வூதியம் பெறாத சுமார் அறுபத்து ஆறாயிர முன்னாள் இராணுவத்தினர் பயனடைவர். அத்துடன், 1,200/= வெள்ளி  பிரிம் உதவித் தொகையும் இவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. ஓய்வூதியம் பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்ட முன்னால் இராணுவத்தினர் ஆண்டுக்கு அறுநூறு வெள்ளி பெறுவதற்கான அறிவிப்பும் இந்த சலுகைகளில் இடம்பெற்றுள்ளது; காயத்தினால் செயல்பட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் தொகையும் அதிகரிக்கப்படவுள்ளது. மொத்தத்தில் இராணுவ முன்னாள் வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகை ஆண்டுதோறும் அதிகரிக்கப்படவுள்ள தகவலால் முன்னாள் இராணுவத்தினரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அண்மைப் புள்ளிவிவரப்படி நாட்டில் முன்னாள் இராணுவத்தினர் 2,88, 952 பேர் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் ஏறக்குறைய 59 விழுக்காட்டினர் (170,581 பேர்) ஓய்வூதியம் பெறாதவர் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இராணுவ முன்னாள் வீரர்களுக்கான சேவையை தேசிய முன்னணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடினும் ஒருங்கிணைந்து இந்த முன்னாள் இராணுவத்தினர்பால் இத்துணைக் கரிசனம் காட்டுவது நல்லதுதான் என்றாலும், விரைவில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் அவர்களின் வாக்குகளைக் கவர வைத்துள்ள கண்ணி இது என்பதும் வெளிப்படாமல் இல்லை.

-ஞாயிறு’ நக்கீரன்