கேமரன் மலையில் – கலக்கப்போவது யார்?

MIC-Electionகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்காக தேசிய முன்னணியில் முட்டலும் மோதலும் தொடர்கிறது. கடந்த 2008 முதல் அமைச்சரவை சுகம் கிட்டாத டான்ஸ்ரீ கேவியஸ் இந்த முறை எப்படியாவது எங்காவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பதால், கேமரன் மலைத் தொகுதி சுயேச்சை உறுப்பினர் தொகுதி என்று அண்மையில் அடையாளம் காணப்பட்டதால், உடனே மண்ணின் மைந்தன் என்ற முத்திரையுடன் கேமரன் மலையை வலம் வருகிறார் அவர்.

அதோடு கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் சேவையாற்றி வரும் மலேசிய சோசலிசக் கட்சியும் அந்தத் தொகுதியை கைப்பற்ற குறிவைத்துள்ளது. எது எவ்வாறாயினும், பிரதமரும் கட்சித் தலைமையும் எனக்கு அடையாளம் காட்டி விட்டதால், என் அரசியல் வாழ்வு-தாழ்வு எதுவாயினும் அது இனி கேமரன்மலையுடன்தான் என்ற முனைப்பில் மஇகா-வின் சி.சிவராஜா அடிக்கடி  கேமரன் மலையேறி வருகிறார்.

நாட்டில் தேசிய முன்னணிக்கு பாதுகாப்பான தொகுதிகளில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியும் ஒன்று. அதனால்தான், புதிதாக உருவாக்கப்பட்ட அந்தத் தொகுதியில் கடந்த முறை கண் வைத்த ஜி.பழனிவேல், அதற்குமுன் இரு முறை அங்கு வெற்றிக் கொடி நாட்டிய சி.கி. தேவமணியை சுங்கை சிப்புட்டிற்கு வண்டி ஏற்றி அனுப்பிவிட்டு அந்த இடத்தில் நிம்மதியாக கரை சேர்ந்தார்.

தற்பொழுது சிறையில் இருக்கும் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கும் டத்தோ எஸ்.சோதிநாதன் ஆகிய இருவரும் சேர்ந்து கொம்பி சீவி விட்ட காளையாக சீற்றத்துடன் வலம் வந்த பழனிவேல், மஇகா மத்திய செயலவைக்கும் உதவித் தலைவர்களுக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நடந்திருந்தால் இன்று அவர்தான் மஇகா தலைவர்; இயற்கை வள, சுற்றுச் சூழல் அமைச்சரும் அவர்தான்.

அதெல்லாம் ஆகாது; கட்சியின் அனைத்துப் பொறுப்புகளுக்கும் தேர்தல் என்று பசையுள்ள இராமலிங்கம் போன்றோர் மெச்ச முழக்கம் செய்துவிட்டு, தற்பொழுது உள்ளதையும் இழந்து, ஏறக்குறைய பொதுவாழ்வுப் பயணத்தில் தொலைந்துவிட்டார்.

1kaveasஅரசியல் ஆழிப் பேரலைக்கு ஆளான பன்னிரெண்டாவது பொதுத் தேர்தலில் எத்தனையோ கொம்பர், வம்பரெல்லாம் எதிரணியிடம் மண்டியிட நேர்ந்தது. ஆயினும், கேமரன் மலையில் தேவமணி, ஜசெக-வின் சிம்மாதிரியை எளிதில் புறங்காணச் செய்துவிட்டு,  அப்துல்லா தலைமையிலான  வெற்றி அணியில் இணைய தலைநகர் நோக்கி நகர்ந்தார். அதேவேளை, கட்சியின் தேசியத் தலைவர்  ச.சாமிவேலு சுங்கை சிப்புட் தொகுதியிலும் உதவித் தலைவர் பழனிவேலு உலு சிலாங்கூர் தொகுதியிலும் புறமுதுகுக் காட்டி விழுப்புண்களைத் தடவிக் கொண்டிருந்தனர்.

அதன்பின், சாமிவேலு கட்சியின் தேசியத் தலைவர் பதவியைத் துறக்க வேண்டியக் கட்டாயம் நேர்ந்தது; ஆம். 31 ஆண்டுகளாக தலைவர் பதவியை இறுகப் பற்றியிருந்தாலும் தலைமை மோகம் தணியாமல், சட்டப்படியும் கட்சி விதிப்படியும் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஏன் விலக வேண்டும் என்ற நிலையில் இருந்தார். தொடர்ந்து தேசிய முன்னணியின் தலைமை கொடுத்த நெருக்கடியைத் தாங்கமுடியாமல் பழனிவேலுவை தான் வகித்த பதவியில் அமர்த்திவிட்டு, ஒதுங்கினார்.

அன்வார் இப்ராகிம் அம்னோவின் தேசியத் தலைவராக வரமுடியாமல் துன் மகாதீரால் எப்படி வஞ்சிக்கப்பட்டாரோ அதேப்போல மஇகா-வின் தேசியத் தலைவர் பதவியை எட்ட முடியாமல் சுப்ராவை வஞ்சித்தவர் சாமிவேலு. சாமிவேலுவை பழி தீர்க்க சுப்ராவிற்கு ஓர் அரிய சந்தர்ப்பம் 2008 பொதுத் தேர்தல் சமயத்தில் வாய்த்தது. சிங்கத்தின் குகையில் புகுந்து அதன் பிடரியைப் பற்றி உலுக்குவதைப் போல சுங்கை சிப்புட் தொகுதியில் அதிரடியாக சுயேச்சை வேட்பாளராக களம் கண்டிருப்பாரேயானால், சுப்ரா நூற்றுக்கு நூறு அங்கு வெற்றி பெற்றிருப்பார்.

ஒரேக் கல்லில் இரு மாங்காய்களை அடித்ததைப் போல சாமி முகத்தில் வெள்ளையையும் அடித்திருக்கலாம்.

sureshஅந்த மாதிரி விவேகமும் குயிக்தியும் தன் அரசியல் பாதையில் இல்லாததால் தான் கடைசிவரை அவரால் சாமிவேலுவை எதிர்கொள்ள முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் தலைவர் பதவிக்கு வந்த பழனி வேலு, இதற்கு முன் உலு சிலாங்கூர் தொகுதியில் அலுங்காமல் குலுங்காமல் ஆடாமல் அசையாமல் மல்லிகைப் பூவைக் கிள்ளுவதைப் போல மூன்று முறையும் வெற்றிக் கனியைப் பற்றிக் கொண்டார். மறுமுறை அதே உலு சிலாங்கூரில் இடைத் தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமையே தலைகீழாக நின்றும் முடியாமல் போக, மூக்குடைப்பட்ட நிலைக்கு ஆளான பழனிவேலு, ஒரு வழியாக 2010 மே 3-ஆம் நாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகி முழு அமைச்சராகவும் இருந்தார்.

அவரின் அரசியல் பயணத்தில் ‘சூடு கண்ட பூனையைப் போல’ உலு சிலாங்கூர் என்ற பெயரைக் கேட்டாலே மிரண்டு, அரண்டு ஒதுங்கிய பழனிவேலு ஒரு வழியாக கேமரன் மலையை வசப் படுத்திக் கொண்டார். தற்பொழுது பழனிவேலு மக்கள் பிரதிநியாக இருக்கும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தானா ராத்தா, ஜெலாய் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தானா ராத்தாவில், தற்போதைய வாக்காளர் நிலவரப்படி 16,394 பேர் உள்ளனர். இவர்களில் சீனர்கள் 54 விழுக்காடு; இந்திய வக்காளர்கள் 21 விழுக்காடு; மலாய் வாக்காளர்களும் பூர்வகுடி மக்களும் தலா 12 விழுக்காட்டினர் என்ற அளவில் உள்ளனர். பொதுவாகவே, தானா ராத்தா சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டில், எதிரணிதான் காலங்காலமாக வலுவான நிலையில் உள்ளது. மற்றொரு தொகுதியான ஜெலாயில் எப்பொழுதும் தேசிய முன்னணிக்குத்தான் அதிகமான வாக்குகள் கிடைக்கும்.

இங்குள்ள வாக்காளர்களில், சுமார் 65 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்கள். இவர்களில் பெரும்பாலோர் நிலக் குடியேற்ற(பெல்டா)வாசிகள்; மற்றவர்கள் அரச ஊழியர்கள். 33 விழுக்காட்டினர் பூர்வகுடி மக்கள். இவர்களும் தேசிய முன்னணி காட்டும் திசை நோக்கி அப்படியே நடைப் போடக் கூடியவர்கள். இத்தொகுதியில் சீன வாக்காளர்கள் ஏறக்குறைய ஒரு விழுக்காடும் இந்திய வாக்காளர்களும் அதே அளவுக்கு இருக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கேமரன் மலையிலிருந்து ஜெலாய் செல்ல வேண்டுமெனில் ரவூப், பெந்தோங் நகரையெல்லாம் சுற்றி 120 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதனால், ஜசெக-வினரும் பாஸ் கட்சியினரும் தானா ராத்தாவில்தான் காலங்காலமாக கவனம் செலுத்தி வந்தனர்.

najib flays palaniveluகடந்த பொதுத் தேர்தலுக்குமுன், ‘பழனியை எதிர்த்து களம் காணாமல் விடுவதில்லை’ என்ற நிலையில் ஜசெக தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரும் பகாங் மாநில மூத்தத் தலைவருமான சிம்மாதிரி களப்பணியை சுறுசுறுப்புடன் மேற்கொண்டிருந்த நிலையில், கடைசியில் வேட்பாளர் மாற்றப்பட்டு மனோகரன் பழனியை எதிர்கொண்டார்.

லிம் கிட் சியாங் ஜசெக தலைவராக இருந்தபொழுது, வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தும்கூட, “எந்த மக்களுக்காக காலங்காலமாக பணியாற்றுகிறேனோ, அந்த மக்களை நம்பி கேமரன் மலையில்தான் போட்டியிடுவேன்” என்று சொல்லி தொடர்ந்து 4 முறை போட்டியிட ஜசெக இவருக்கு வாய்ப்பு அளித்ததென்றால் கட்சியில் சிம்மாதிரியின் நிலை எத்தனை வலுவானது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கடந்த பொதுத் தேர்தலில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமியும் டத்தோ சு.சுந்தரும்(சுப்ராவின் மகன்)கூட இதேக் கேமரன் மலைத் தொகுதிபில் போட்டியிட முயன்று, கடைசியில் பின் வாங்கினராம். ஜசெக சார்பில் சிம்மாதிரியின் மகன் ரவியை களமிறக்கவும் கட்சி எண்ணியது. பொருளாதாரப் பட்டதாரியான ரவி, சீன மொழியில் வெலுத்து வாங்கும் தங்கையைக்   கொண்டிருந்ததால், அது சீன வாக்காளர்களைக் கவர துணைப் புரியுமென்று ஜசெக கட்சித் தலைமை அப்போது பரிசீலனை செய்தது; இரவியின் தங்கையான திருமதி சாரதாவைக் கூட ஒரு கட்டத்தில் கட்சி பரிசீலித்தது.  மலாயாப் பல்கலைக்கழக பட்டதாரிப் பெண்ணான இந்தப் பெண் புலியை வேட்டையில் இறக்கி, பழனியை மண்டியிடச் செய்யலாம் என்று ஜசெக தலைமை போட்ட தப்புக் கணக்கும் அப்பொது இடம்பெற்றது.

இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது. அப்பளசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட சிம்மாதிரி, தேர்தல் களத்திலிருந்து அடியோடு ஒதுங்கும் தற்போதைய மாறுபட்ட சுழலில் மஇகா-வின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராசா சந்திரனை அக்கட்சியின் தலைமை களம் இறக்கியுள்ளது. கடந்த முறை புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் களம் இறங்கி, ஜஜெகவின் ஏ.சிவசுப்பியமணியத்திடம் மண்டியிட்ட சிவராசாவும் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்குத் தாவுகிறார்.

இரவு சந்தைக்கு அடிக்கடி இடம் தேடும் வணிகரைப் போல, தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி தேடும் கேவியஸ், தேசிய முன்னணி பங்காளிக் கட்சியின் தொகுதி என்பதையும் மறந்து கேமரன் மலையில் போட்டியிட இன்றளவும் முனைப்பு காட்டுவது மஇகா  வட்டாரத்தை சூடேற்றுகிறது.

தேர்தல் நாளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்வரை இந்தக் கூத்தெல்லாம் தொடரும்; தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதுதான் நம் வேலை!

– கில்லாடி