60 லட்சம் மக்களை கொன்று குவித்த ஹிட்லர்: ஜேர்மனிக்கு நெருக்கடி அதிகரிப்பு

இரண்டாம் உலகபோரில் போலந்து நாட்டை சேர்ந்த 60 லட்சம் குடிமக்களை ஹிட்லரின் நாசிப்படைகள் கொன்று குவித்ததை தொடர்ந்து அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என போலந்து அரசு ஜேர்மனிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

உலகை புரட்டிப்போட்ட இரண்டாம் உலகப்போரில் ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லர் லட்சக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தார்.

1939 முதல் 1945 வரை நடைப்பெற்ற இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற பல்வேறு நாடுகள் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதாரத்தையும் இழந்தன.

இந்த வரிசையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து பெரும் உயிரிழப்பை சந்தித்தது இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் போலந்து மீது படையெடுத்தபோது, ‘போலந்து நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் போலந்து மொழி பேசும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கொன்று குவிப்பது தான் நமது படையின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்’ என ஹிட்லர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, போலந்து மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எண்ணற்ற நகரங்கள் மீது இரவும் பகலும் குண்டுகள் வீசப்பட்டன.

பல நாட்களாக நடைப்பெற்ற இத்தாக்குதலில் போலந்து நாட்டை சேர்ந்த 60 லட்சம் குடிமக்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

அதாவது, 1945-ம் ஆண்டில் போலந்து நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர்.

இதுமட்டுமில்லாமல், நாடு முழுவதும் எண்ணற்ற கட்டிடங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், இயற்கை வளங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டு போலந்து நாட்டை நாசிப்படைகள் படுகுழியில் தள்ளியது.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜேர்மனி தோல்வியை சந்தித்தாலும் கூட, பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன.

இந்நிகழ்விற்கு பின்னர், ஜேர்மன் அரசு தகுந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் என போலந்து அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

போலந்து பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியான Jaroslaw Kaczynski என்பவர் ஜேர்மன் அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

‘போலந்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த ஜேர்மன் அரசு அதற்காக பல பில்லியன் யூரோக்களை இழப்பீடாக வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

-lankasri.com