மோடியின் இந்தியும் – சிங்கப்பூர் தமிழும்!

MalaysinSingapore ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 9, 2017.‘

உருவத்தால் சிறியது; இலக்கியத் தாக்கத்தால் பெரியது’ – திருக்குறள்; அதைப்போல மண்ணளவில் சிறியதாக இருந்தாலும் விண்ணளவில் புகழ்க்கொடியைப் பறக்க விட்டுள்ள சிங்கப்பூருக்கு இன்று விடுதலை நாள்!

தமிழ் மொழிக்கு ஆட்சிக் கட்டிலில் இடம் வழங்கியுள்ள சிங்கப்பூர் குடியரசிற்கு உலகத் தமிழர்களின் சார்பில் வாழ்த்துகள்!

வெறும் பாய்மரப் படகுகளை மட்டும் கைக்கொண்டு உலகளாவிய அளவில் ஆட்சி நடத்திய தமிழினம் இன்று, உலகளாவிய அளவில் ஒண்டுக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழினத்தின் தலைநிலமான தமிழ் நாட்டில்கூட இந்த நிலைதான். செம்மொழியான தமிழ் மொழிக்கு நீதி பரிபாலன கட்டமைப்பில் இடமில்லை. தமிழ் நாட்டின் உயர்நீதி மன்றத்தின் பெயர்கூட தமிழில் இல்லை. ஏறக்குறைய எட்டு கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் தமிழருக்கு கேபினட் தகுதியில் அமைச்சர் பதவி இல்லை; அந்த நாட்டில் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் மோடி தலைமையிலான அரசில்தான் தமிழருக்கு இத்தனை அவமானம் நேர்ந்திருக்கிறது.

modi-singaporeபி.வி.நரசிம்ம ராவ் என்னும் பார்ப்பன பிரதமர்கூட தமிழருக்கு கேபினட் தகுதியில் அமைச்சர் தகுதி வழங்காவிடினும் நான்கு பேருக்கு ‘துணை’, ‘இணை’ தகுதியில் எடுபிடி பொறுப்பு வழங்கினார். 2019 மார்ச் மாதத்திற்குள் உலக நாடுகள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட நினைக்கும் மோடி, போகும் இடங்களில் எல்லாம் இந்தி மொழி வளர்ச்சிக்கும், உலக வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கும் தளம் அமைத்து வருகிறார்.

ஆனால், தமிழ் மொழிக்கு முடிந்த அளவிற்கு அடியறுக்கும் வேலையை பகிரங்கமாகவே செய்துவருகிறார். தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் அகழாய்வுப் பணிகளுக்கு தடை விதிக்கும் மோடி, செம்மொழி தமிழ் வளர்ச்சி மையத்தையும் மூடுகிறார்.

மலேசியாவிற்கு அடுத்து சிங்கப்பூர்வாழ் தமிழ் மக்கள் செம்மாந்த செருக்குடனும் மனமார்ந்த பெருமையுடன் வாழ்வாங்கு வாழ்கின்றனர். இலங்கையுடன் மலேசியா, சிங்கையில் தமிழர்கள் ‘கேபினட்’ அமைச்சர்களாக விளங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு மோடியின் பாதம்தாங்கிகள் இடையூறு ஏற்படுத்த முயல்கின்றனர். இந்தியாவில் அதிகமாகப் பேசப்படும் மொழி இந்தியாம்; அதனால், சிங்கையில் தமிழ் மொழிக்கு வழங்கப்படும் சிறப்பிற்கு மாறாக இந்தி மொழிக்கு அதை அளிக்க வேண்டும் என்று குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதைப்போல, புது டில்லி முயன்றதற்கு சிங்கை அரசு  சுடு கொடுத்துவிட்டது.

ஆசிய மண்டலத்திலேயே நான்காவது பொருளாதார வல்லரசாகத் திகழும் சிங்கைத் திருநாடு விடுதலை பெற்றபோது, அங்கு சீன மொழியினர், மலாய் மொழியினருடன் தமிழ் மொழியினர்தான் கைகோத்தனர். அதனால்தான் தமிழ் மொழிக்கு அங்கு கொலுவீற்றிருக்கும் தகுதி வழங்கப்பட்டுள்ளது என்று மூக்குடைபடுமாறு சிங்கை சார்பில் பதில் சொன்னபிறகுதான், புதுடில்லி சூழ்ச்சிக் கூட்டம் வாலை சுருட்டிக் கொண்டது அண்மையில்.

மலேசியத் திருநாட்டின் தென்கோடி முனையை யொட்டி அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவு நாடான சிங்கப்பூர் ஒரு முக்கிய உலக நிதி மையமாகவும் திகழ்கிறது.

-ஞாயிறு’ நக்கீரன்