வருமான வரி அதிகாரிகளின் குறியில் மகாதிர் மகன்களின் நிறுவனங்கள்

irbடாக்டர்   மகாதிர்    முகம்மட்டின்   மூன்று   மகன்களின்   நிறுவனங்கள்மீதும்  வருமான  வரி  வாரியம் (ஐஆர்பி)   குறி  வைத்திருப்பதாகத்   தெரிகிறது.

செவ்வாய்க்கிழமை,    மிர்சான்  மகாதிரின்    கிரெசெண்ட்   கெபிடல்    சென். பெர்ஹாட்டில்    ஐஆர்பி     அதிரடிச்   சோதனை    நடத்தியது.   அந்நிறுவனத்தின்  உயர்   அதிகாரி   ஒருவர்   அதை   உறுதிப்படுத்தினார்.

“எட்டிலிருந்து  பத்து   ஐஆர்பி   அதிகாரிகள்   வந்து   சில  கோப்புகளை    எடுத்துச்   சென்றனர்”,  என்றாரவர்.  அவருடைய   பெயரைத்   தெரிவிக்க   அவர்  விரும்பவில்லை.

அதே  நாளில்   முக்ரிஸ்  மகாதிர்   தோற்றுவித்து    அவரின்  அண்ணன்  மொக்சானி   மகாதிரால்    வழிநடத்தப்படும்   ஒப்கோம்  ஹோல்டிங்ஸ்   பெர்ஹாட்டிலும்     ஐஆர்பி   சோதனை   நடந்ததை    அதன்   பேச்சாளர்   ஒருவர்   உறுதிப்படுத்தினார்.  ஆனால்,  அவர்  மேல்விவரங்கள்   தெரிவிக்கவில்லை.

அதே  செவ்வாய்க்கிழமை    மொக்சானிக்குச்  சொந்தமான   கெஞ்சானா   கெப்பிடல்   சென். பெர்ஹாட்டிலும்  ஐஆர்பி   அதிரடிச்   சோதனை  நிகழ்ந்துள்ளதாக   மகாதிருக்கு   நெருக்கமான   வட்டாரங்கள்    தெரிவித்தன.   ஆனால்,  அதை   உறுதிப்படுத்திக்கொள்ள   முடியவில்லை.

மே  மாதமே  மகாதிர்   கூறியிருந்தார்,   தம்மைச்   சார்ந்தவர்களை   ஐஆர்பி  குறி  வைக்கிறது    என்று.

அவர்   யாருடைய   பெயரையும்   குறிப்பிடவில்லை,   என்றாலும்  மகாதிருக்கு  நெருக்கமான  இருவர்,   லீ  கிம்  இயு,  முஸ்தபா   கமால்   அபு   பக்கார்
ஆகியோரின்  தொழில்கள்  வருமான  வரிச்  சிக்கல்களை   எதிர்நோக்கி   வருகின்றன.

பக்கத்தான்   ஹராபானுக்கு    நன்கொடை   வழங்குவோருக்கும்   அதிகாரிகள்    நெருக்குதல்   கொடுப்பதாக   மகாதிர்   குற்றஞ்சாட்டியுள்ளார்.