துணைக் கல்வி அமைச்சர் : பள்ளிக்கூடங்கள் அனைவருக்கும் உரியது!

Chong-Sin-Woon-3தேசியப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளும் இன, மதப் பேதமின்றி அனைத்து மாணவர்களுக்குமானது எனத் துணைக் கல்வி அமைச்சர் செனட்டர் சோங் சின் வூன் கூறினார்.

உலு லங்காட்டில் உள்ள ஒரு தேசியப் பள்ளியில், ‘இஸ்லாம் மாணவர்’ மற்றும் ‘இஸ்லாம் அல்லாத மாணவர்’ எனக் குடிநீர் குவளைகளில் எழுதி வைக்கப்பட்டது தொடர்பாக அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இச்சம்பவம் குறித்து, மாநிலக் கல்வி இலாகாவின் விளக்கத்திற்காகக் கல்வி அமைச்சு காத்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தாமான் புத்ரி தேசியப் பள்ளியில் ‘இஸ்லாம் மாணவர்’ மற்றும் ‘இஸ்லாம் அல்லாத மாணவர்’ எனக் குடிநீர் குவளைகளில் எழுதி, பிரித்து வைத்திருப்பது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை எப்.எம்.தி. இணையப் பத்திரிக்கை உறுதிபடுத்தியிருந்தது. ஆனால், இது குறித்து விளக்கம் பெற, பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டது, தோல்வியில் முடிந்தது எனவும் எப்.எம்.தி. தெரிவித்தது.

இச்சம்பவம் பலரின் கண்டனத்திற்குள்ளானது. ‘ஜி25’ அமைப்பின் உறுப்பினர் ஜோஹான் அரிப்பின் நாட்டில் ‘இஸ்லாமியம்’ செல்லும் பாதை தமக்கு வருத்தமளிப்பதாக உள்ளது எனக் கூறினார். ‘ஹலால்’ என்பதில் முக்கியமாகக் கருதப்படுவது சுத்தமே தவிர, அப்பொருளைப் பயன்படுத்தியது இஸ்லாமியரா? இஸ்லாம் அல்லாதவரா? என்பதில் அல்ல என்று அவர் கூறினார்.

“குவளையைச் சுத்தமாகக் கழுவினாலே போதும். அதனைப் பயன்படுத்தியது இஸ்லாமியரா? இஸ்லாம் அல்லாதவரா? என்பது முக்கியமல்ல. மதவாரியாகக் குவளைகளைப் பிரித்து வைப்பது ‘முட்டாள்’ தனம்,’ என அச்செயலை அவர் கண்டித்தார்.

அமானா கட்சியின் துணைத் தலைவர் முஜாஹிட் யூசோப் ராவா இச்சம்பவத்தை ‘துரதிஸ்டமான’ ஒன்று என வர்ணித்துள்ளார்.

“அந்த குடிநீர் டிஸ்பென்சர், அனைத்து மதங்களுக்கும் பகிர்ந்துகொள்ளும் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. மற்றவரோடு ஒன்றைப் பகிர்ந்துகொள்வது தவறான ஒன்றல்ல,” என்று கருத்துரைத்தார்.

“இது ஒரு ‘கடுமையான செயல்’, இத்தகைய செயல்கள் மற்றப் பிரச்சனைகள் உருவாகவும் வழிவகுக்கும். இஸ்லாம் இதையெல்லாம் கேட்டதில்லை,” என முஜாஹிட் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ம.சீ.ச. மத நல்லிணக்கப் பிரிவு தலைவர், தி லியன் கெர், அப்பள்ளியின் செயல் மாணவர்கள் மத்தியில் பாரபட்சத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என விமர்சித்தார்.

“மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் 1 மலேசியா கொள்கையை ஊக்குவிக்கும் வகையில், வேற்றுமையில் ஒற்றுமையை வளர்க்கும் எடுத்துக்காட்டாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் இருக்க வேண்டுமே ஒழிய; இளையத் தலைமுறையினர் மத்தியில் இன, மதவெறியை ஊட்டக்கூடாது,” எனக் கூறினார்.