குடும்பப் பிரச்சனையைச் சட்டம் தீர்க்கவில்லை

-கே. சீலதாஸ், ஆகஸ்ட் 11, 2017.

siladass1976ஆம்  ஆண்டு  குடும்பச்  சட்டத்தில்  திருத்தம்  செய்து    இஸ்லாத்தைத்  தழுவாத  பெற்றோர்களுடைய  பிள்ளைகளின்   மத மாற்றம்  சம்பந்தமான  உரிமை  குறித்து  நிலவிய ஒருதலைப்பட்சமான  அநீதிக்கு  முடிவு  காணமுடியும்  என்று  நம்பப்பட்டது.  ஆனால்,   கொண்டுவரப்பட்ட  88A  பிரிவை  சமய  அரசியலாக்கி  முஸ்லிம்  அல்லாதாரின்   நிலையை  இன்னும்  சிக்கலிலேயே  வைத்திருக்கும்  நோக்கத்தில்  அந்த  88A  பிரிவை  கைவிட்டுவிட்டது  நடுவன்  அரசு.  பல  ஆண்டுகளாக  நிலவி  வரும்  பதினெட்டு  வயது  தேராத  பிள்ளைகளின்  சமயத்தைக்  குறித்த  சிக்கல்,  சச்சரவு மற்றும் அநீதி  நீடிக்கும்  என்பது  உறுதியாகிறது.  இந்தச்  சிக்கல்,  சங்கடநிலை,  இழுத்தடிப்பதில்  காட்டப்படும்  உற்சாகத்திற்கு  நடுவன்  அரசு  காட்டும்  ஆதரவு  சிறுபான்மை  மக்களின்  நலனைப்  புறக்கணிக்க  அது  தயாராகிவிட்டது  எனலாம்.  இப்படிப்பட்ட போக்கு  பிரிட்டீஷ்  காலனித்துவம்  சிறுபான்மையினரின்  குடும்பச்   சட்ட  விஷயத்தில்  எவ்வாறு  பொறுப்புடன்  நடந்து  கொள்ளவில்லையோ   அதே  நிலை  இன்னும்  நீடிக்கிறது  என்பதையே  நடுவன்  அரசின்  நிலைப்பாடு  குறிக்கிறது.

காலனித்துவ  ஆட்சியின்போது  சிறுபான்மையினருக்கு  பலமான  குடும்பச்  சட்டம்  கிடையாது.  இதில்  முஸ்லிம்  மற்றும்  கிறிஸ்தவர்கள்  பாதிப்படையவில்லை.  1976 ஆம் ஆண்டு குடும்பச்  சட்டம்  பொதுவாக  முஸ்லிம்  அல்லாதவர்களுக்காக  இயற்றப்பட்டதாகும்.   ஆனால்,   நாற்பது  ஆண்டுகளாக  சிறுபான்மை  மக்களின்  துயர்  துடைக்கப்படவில்லை.

ஒருவர்  மதம்  மாறுவதற்கு  முன்  ஏற்றுக்கொண்ட  குடும்ப  உறவு,  அதனால்  எழும்   பொறுப்புகள்,  பிள்ளைகளின்  வளர்ப்பு,  அவர்களின்  வழிபாட்டு  முறை,  சமய   போதனை  அனைத்தும்   பெற்றோர்களின்  பொறுப்பாகும்.  அதை  சட்டத்தின்  வழி  மாற்றி  அமைக்கக்  கூடாது.  அதோடு  “பெற்றோர்”  என்ற  சொல்லின்  உண்மையான  அர்த்தத்திற்கு   தவறான   விளக்கம்  தந்து  அதுவே  சரியானது  என்ற  வாதம்  நகைப்புக்கு  உரியதாகும்.  இது  மனிதாபிமானத்தைப்  போற்றாத  செயலாகும்.

அரண்டவன்  கண்ணுக்கு,  இருண்டதெல்லாம்  பேய்  என்பதானது  இந்த  மதமாற்றம்  விஷயத்தில்   சமய  அரசியல்வாதிகளின்  போக்கு  இருண்ட  நிலையிலிருந்து  வெளிச்சத்துக்கு  வரமறுப்பதை  பிரதிபலிக்கிறது.  அதற்கு  நடுவன்  அரசு  வளைந்து  கொடுபந்தை  நியாயமான  நடவடிக்கையாக   ஏற்றுக்கொள்ள  முடியாது.  நடுவன்  அரசின்  போக்கு  காலனி  ஆட்சியில்  சிறுபான்மை  மக்களின்  குடும்பப்  பாதுகாப்பு  மறுக்கப்பட்டதையே  நினைவுப்படுத்துகிறது.