பினாங்கில் சட்டவிரோத தொழிற்சாலையின் மேலாளர் மற்றும் நிர்வாகி கைது

2017MACCFileபினாங்கு, கம்போங் சுங்கை லெம்புவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையின் மேலாளரும் அவரின் மகனான நிர்வாகியும், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.எ.சி.சி.) கைது செய்யப்பட்டனர்.

அத்தொழிற்சாலை குறித்த விசாரணைக்காக, பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பீ ஓன் போ கைதான சில மணி நேரங்களில், இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த 70 வயது மேலாளரும் அவரின் 37 வயது மகனும், இன்று மாலை 6.45 மணியளவில், ஜாலான் சுல்தான் அஹ்மாட் ஷாவில் உள்ள எம்.எ.சி.சி. தலைமையகத்திற்கு, வாக்குமூலம் பதிவுசெய்ய சென்றபோது, தடுத்து வைக்கப்பட்டதாக ‘ஸ்டார்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டது.

அவர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்திய எம்.எ.சி.சி., நாளை காலை அவர்கள் ஜோர்ஜ் டவுன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு, பிணை எடுக்க கொண்டுவரப்படுவர் எனவும் ஓர் அறிக்கை வாயிலாகக் கூறியது.

கடந்த 10 ஆண்டுகளாக, உரிமம் ஏதுமின்றி, விவசாய நிலத்தில் அந்தக் கார்பன் வடிக்கட்டி தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அவ்வறிக்கை மேலும் கூறியது.

நேற்று, சுற்றுச்சூழல் துறை மற்றும் குடிநுழைவுத் துறையோடு அத்தொழிற்சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

செப்ராங் பிறை மாநகராட்சி மன்ற அலுவலகத்திலும், நேற்று எம்.எ.சி.சி.  சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.