பிகேஆர் பினாங்கு: நோர்லேலாவின் செயலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை

norlela செபராங்  பிறையில்   சட்டவிரோத    தொழிற்சாலைகளுக்கு   எதிராக   எடுத்த    நடவடிக்கைகளுக்காக   பெனாந்தி   சட்டமன்ற    உறுப்பினர்    நோர்லேலா   அரிப்பின்   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணைய (எம்ஏசிசி)த்துக்கு    நன்றி    தெரிவித்தது  அவரது   தனிப்பட்ட   விவகாரம்   என்று   பினாங்கு   பிகேஆர்   கூறியது.

ஊழல்தடுப்பு   ஆணையம்   மாநில    ஆட்சிக்குழு   உறுப்பினர்  பீ  பூன்   போவை  வெள்ளிக்கிழமை   கைது   செய்ததை    அடுத்து   நோர்லேலா   “எம்ஏசிசி-க்கு  நன்றி”   என   முகநூலில்   பதிவிட்டிருந்தார்.

பிகேஆர்    தலைவர்கள்      பலர்,   நோர்லெலா    குடியிருப்பாளர்களுக்கு   ஆதரவாக       சட்டவிரோத  தொழிற்சாலைகள்   குறித்து    எம்ஏசிசியிடம்   முறையிட்டதை   ஏற்றுக்கொள்ளலாம்   என்றார்கள்.

“ஆனால்   எம்ஏசிசிக்கு   நன்றி    தெரிவித்ததுதான்   சரியல்ல.  எம்ஏசிசி   எதிரணியைத்தான்   குறி  வைக்கிறது.  பொடிமீன்களைத்   தேடிப்  பிடிக்கிறது,  1எம்டிபி   ஊழல்   போன்றவற்றில்   சம்பந்தப்பட்டவர்களை   விட்டு   விடுகிறது”,  என்று   ஒரு   பிகேஆர்   தலைவர்   அங்கலாய்த்துக்கொண்டார்.

மாநில   பிகேஆர்   தலைவர்   மன்சூர்   ஒத்மான்   தொடக்கத்தில்    அவ்விவகாரம்   குறித்துக்   கருத்துரைக்கத்     தயங்கினார்.  பின்னர்   கட்சியின்  ஆதரவு   டிஏபிக்குத்தான்   என்றார்.  அதே    வேளை,  கட்சி    நோர்லெலாவை   அவரது  செயலுக்காக   தண்டிக்காது  என்றும்   குறிப்பிட்டார்.  ஆனால்,  விமர்சகர்கள்,  நோர்லேலாவின்    செயல்    பினாங்கில்   டிஏபிக்கும்   பிகேஆருக்குமிடையில்   பிளவை   உண்டுபண்ணி  விடலாம்    என்கிறார்கள்.

“பினாங்கில்   எங்கள்   கட்சி  ஆதரவு    மாநில   அரசுக்குத்தான்.   பீ-க்கு   நேர்ந்ததை   நினைத்து    வருந்துகிறோம்.  எம்ஏசிசி   எதிர்க்கட்சியாக   பார்த்துத்தான்     நடவடிக்கை   மேற்கொள்கிறது.   ஆனால்,  கட்சி   நோர்லேலாவுக்கு   எதிராக   நடவடிக்கை    எடுக்காது”,  என  மன்சூர்    தெரிவித்தார்.

“பெனாந்தி   சட்டமன்ற    உறுப்பினர்    என்ற   முறையில்தான்   நோர்லெலா    செயல்பட்டிருக்கிறார்”,  என்றாரவர்.

ஆனால்,  நேர்லெலா ,  “எம்ஏசிசிக்கு    நன்றி”   பதிவிட்டதை   அடுத்து   தாம்   ஒரு   குற்றவாளிபோல்    நடத்தப்படுவதாகவும்   டிஏபி  சுங்கை   புயு   சட்டமன்ற    உறுப்பினர்   பீ-இன்  கைது   செய்யப்பட்டதற்குத்   தாமே  காரணம்   என்று   கூறப்படுவதாகவும்   கூறினார்.

அதன்   தொடர்பில்   மன்சூரை   வினவியதற்கு,   கட்சி  நோர்லேலாவிடம்   விளக்கமேதும்   கேட்கவில்லை    என்றும்   அவரை   அழைத்து   அறிவுரை  கூறும்   எண்ணம்   இல்லை   என்றும்    தெரிவித்தார்.

மேலும்,  குற்றவாளிபோல்    நடத்தப்படுவதாக   நினைப்பது   அவரது   நினைப்புத்தான்.  “நான்  அப்படி   நடந்து  கொண்டதில்லை”,  என்றார்.