அரசியல் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்!

umnotobersatu‘ஞாயிறு’ நக்கீரன், ஆகஸ்ட் 17, 2017.  பார் போற்றும் மலேசியத் திருநாடு, அரசியல் நிலைத்தன்மைக்கும் பல இன சமுதாயமாக விளங்கும் மலேசியக் கூட்டு சமுதாயம் இஃதுகாறும் கடைப்பிடிக்கும் இன இணக்கத்திற்கும் சமய சகிப்புத் தன்மைக்கும் பெயர் பெற்றநாடு. இப்படிப்பட்ட நாட்டின் அரசியல் போக்கில் எவ்வளவுதான் கடுமையான சூழல் நிலவினாலும் வன்முறை மட்டும் கூடவேக் கூடாது; வேண்டுவதெல்லாம் நன்முறைதான். இஃது, ஆளுந்தரப்பார், எதிரணியினர் என இருசாராருக்கும் பொருந்தும்.

நாட்டின் முன்னாள் பிரதமரும் நவீன மலேசியத் தந்தை என போற்றப்படுபவரும் அம்னோவையும் தேசிய முன்னணியையும் இருபது ஆண்டு-களுக்கும் மேலாக வழிநடத்தியவருமான துன் டாக்டர் மகாதீர் முகம்மது, வெகு அண்மையில் ‘ஒழிப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது வன்முறை எழுந்தது.

அந்த மோசமான சம்பவம் நடந்து ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், நாட்டின் மையப் பகுதியை ஒட்டிய சிரம்பான் நகரில் பட்டப்பகலில் ஹிண்ட்ராஃப் தலைவரும் வழக்கறிஞருமான பொன்.வேதமூர்த்தி தாக்கப்பட்டிருப்பது, நாட்டின் ஒட்டு மொத்த அரசியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் மகாதீர் பேசிக் கொண்டிருந்தபோது காலணி, நாற்காலிகளெல்லாம் வீசப்பட்ட ன. அது மலேசிய அரசியல் களத்திற்கு புதியது. சம்பந்தப்பட்ட நபர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முற்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, நாகரிக மக்கள் கடைப்பிடிக்கும் நாகரிக அரசியல் நெறிமுறைக்கு ஒவ்வாதப் போக்கு, இத்தகைய வன்முறைப் போக்கு.

கருத்துக்கு கருத்து என்பதுதான் அரசியல் பண்பாடு; அது சொல்லாக இருந்தாலும் சரி; அச்சடிக்கப்பட்ட எழுத்தாக இருந்தாலும் சரி; அதுதான் பண்பட்ட அரசியல் போக்கு; நாட்டிற்கும் சமுதாயத்திகும் நன்முறையான அரசியல்தான் பயனளிக்கும். ஏதோ, எப்படியோ கைமீறி நடந்துவிட்ட அந்த நிகழ்ச்சியின் தாக்கம் மறைவதற்குள் இன்னொரு அரசியல் தாக்குதல் நடைபெற்றிருப்பது நல்லதல்ல.

ஏதோ பத்திரங்களை ஒப்படைப்பவர்களைப் போல உள்ளே நுழைந்த ஈராடவர்கள், முன்னாள்  துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியைத் தாக்கி இருப்பது, அரசியலில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பவர்களின் மனதை நெருடவேச் செய்யும். ஆகஸ்ட் 16-ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தின்போது, சம்பந்தப்பட்ட ஆடவர்கள் வேதா’வின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியது கடும்போக்கு ஆகும். அத்துடன், அரசாங்கத்தை குறை கூறும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவ்விரு ஆடவரும் மிரட்டி இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசாங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி தனிப்பட்ட பகை காரணமாக இவர்கள் இருவரும் ஏவப்பட்டனரா என்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.

எது எவ்வாறாயினும் இதுபோன்ற போக்கு உடனே நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், போகிற போக்கில் வேதாவின் மனைவியையும் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த ஆபரணத்தையும் அபகரித்துச் சென்றிருப்பது அநாகரிகத்தின் உச்சம்.

ஒரு பெண், தன் கண் முன்னால் தன் கணவர் தாக்கப்படும்பொழுது எப்படி வாளாயிருக்க முடியும்? குறைந்தபட்சம் கணவருக்காக குரல் எழுப்புவார். அதைத்தான் திருமதி வேதாவும் செய்துள்ளார். அதற்காக அவரையும் தாக்கிவிட்டு, அவரின் தங்க ஆபரணத்தை அபகரிப்பது பெரும்போக்கிரித் தனமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, வேதாவின் அலுவலகத்தில் ஏதோ கெட்ட திரவத்தை விசிறி அடித்து,  அலுவலகச் சூழலைக் கெடுக்க முற்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

அதேவேளை, இதைப்போன்ற தாக்குதல், ஆளுந்தரப்பை சேர்ந்தவர்களுக்கு எதிராக நடத்தப்படுமா? ஒருகாலும் நடத்தப்படாது என்பதுதான் நடுநிலையாளர்களின் பதில். காலம் என்னும் நல்லாசிரியனின் கவனத்தில் அனைத்தும் இடம்பெறும்.