சம்பந்தனின் புதிய வியூகம்..?

sambanthan_001நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த அரசை உருவாக்கிய கட்சிகள் மத்தியில் மெல்ல மெல்ல மனக்கசப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் வரும் தேர்தலைகளை மையமாகக் கொண்டு தம்மை பலப்படுத்தி வருவதுடன், தேசிய அரசாங்கத்திற்குள்ளும் முட்டி மோதத் தொடங்கி விட்டனர்.

மஹிந்த தலைமையிலான பொது எதிரணி தெற்கில் பலம் பெற்று வருவது இந்த கூட்டுக்குள் மேலும் சிக்கல் நிலையை உருவாக்கியிருக்கிறது.

இதே நிலையில் தேசிய அரசாங்கத்தின் இணக்கத்துடன் கூடியதாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகள் மத்தியிலும், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் மனக்கசப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அண்மைக்கால செயற்பாடுகள் ஊடாக அறிய முடிகின்றது.

நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காத்து வந்த கூட்டமைப்பு தலைமை, இந்த அரசாங்கத்தை விமர்சனம் செய்கின்ற நிலமை ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டியது.

அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு தலைமை நம்பிக்கையிழந்து விட்டதா…? அல்லது அடுத்த தேர்தலை நோக்கிய நகர்வில் கூட்டமைப்பு தலைமை சாதுரியமாக ஈடுபடத் தொடங்கி விட்டதா..? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக இந்த அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சில தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளுடனும் ஒரு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிய போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை அதனை நிராகரித்து, மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டு செயற்பட்டது.

அதனடிப்படையில் அதற்கான ஆதரவையும் வழங்கியிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித அறிகுறிகளும் இன்றி 2017 ஆம் ஆண்டு அதனை நடைமுறைப்படுத்த 34- 1 இன் மூலம் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

சர்வதேச விசாரணை நிறைவடைந்து விட்டதாக ஆரம்பத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடும் பிரயத்தனம் செய்திருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகளும், தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கக் கூடாது என ஐ.நாவிற்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

அதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வவுனியாவில் கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.

அதில் 2015 ஆம் ஆண்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது எனவும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்குவது அவசியம்.

அவ்வாறு கால அவகாசம் வழங்காது விட்டால் சர்வதேச சமூகம் வழங்கும் அழுத்தம் இல்லாமல் போய்விடும் எனவும், சர்வதேச நாடுகளை இராஜதந்திர ரீதியாகவே கையாள வேண்டும் எனவும் கூறி ஈபிஆர்எல்எப் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் ஆதரவை பெற்றிருந்தது.

ஐ.நா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இது ஐ.நாவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டும் எனக் கூறி அந்த இரண்டு வருட கால அவகாசத்திற்கு சொல் மயக்கங்களை பயன்படுத்தி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரைப் பெற்று ஐ.நாவிற்கும் தெரியப்படுத்தியது.

தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரியும், காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதி கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் 6 மாதங்களைத் தொட்டு விட்டது.

அந்த மக்கள் நீதிக்காகவும், தமது உரிமைக்காகவும் வீதிகளில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமை காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்காமை அந்த மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமை மீது குறிப்பாக தமிழரசுக் கட்சி மீது கடும் அதிருப்தி நிலையை உருவாக்கியிருந்தது.

வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையத் தொடர்ந்து இன்று வரை வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களும், அதை தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் கையாண்ட விதமும் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

வடமாகாண சபை அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு முதலமைச்சர் எடுத்திருந்த நடவடிக்கையும், தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களது அபிலாசைகள் குறித்தும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவாறு வடக்கு முதல்வர் தன்னை சந்திக்க வருகின்ற இராஜதந்திரிகளிடமும், அரசங்கத்திற்கும் அழுத்தமாக தெரிவித்து வந்தமையும், நாளாந்தம் போராட்டத்துடனேயே வாழும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு முதலமைச்சரை ஒரு நம்பிக்கைக்கு உரியவராக மாற்றியது. அதனால் அவருக்கான ஆதரவு அதிகரித்தது.

இருப்பினும், தன்னை நம்பி இருக்கும் மக்களுக்காக வடக்கு முதல்வர் என்ற நிலையில் இருந்து மாறி தலைமை கொடுக்க அவர் இன்று வரை தவறியிருக்கிறார்.

கூட்டமைப்புக்கு வெளியே தீவிர தமிழ் தேசிய பற்றுடன் அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின’ தவறுகள் தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் கிராமம் கிராமமாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் இருந்த பனிப்போர் வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து பங்காளிக் கட்சிகள் அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தத் தொடங்கி விட்டனர். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டின் இருப்பை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இத்தகைய நிலைமைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சி மீதும், கூட்டமைப்பு தலைமை மீதும் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி, இன்று தமிழ் மக்கள், அரசியல் ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், இளைஞர்கள் எனப் பல்வேறு மட்டங்களிலும் மாற்றுத் தலைமை பற்றி பேச வைத்திருக்கின்றது.

மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனை தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் கூட்டமைப்பு தலைமையின் பொறுப்பற்ற, ஆளுமையற்ற செயற்பாடுகள் என்பவற்றின் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் உருவாகியது.

இது எதிர்வரும் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும் அளவுக்கு மாறியிருக்கின்றது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் விழித்துக் கொண்டவராக மாறியிருக்கிறார்.

தமிழ் மக்களது நலன் என்பதற்கு அப்பால் இந்த பத்தியாளர் கடந்த வாரம் சுட்டிக் காட்டியது போன்று தேர்தல் நோக்கிய கட்சி நலனை முன்னிறுத்தி அவர் நகரத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், வடக்கில் போராட்ட களத்தில் உள்ள மக்களை சந்தித்து அவர்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக அண்மையில் பேசியிருந்தார்.

அந்த மக்களது கோரிக்கைகளையும், ஆதங்கங்களையும் கேட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, ஒத்தி வைப்பு பிரேரணைகள் மூலம் அவை தொடர்பில் அவர் பேசியதுடன் அவை முடிவுற்றுள்ளது.

அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதி அல்லது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் படியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை எதுவும் செய்யவில்லை. வடக்கு மாகாண சபை விவகாரத்திலும், தமிழரசுக் கட்சியினரை அமைதி காக்குமாறு தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் இழந்த கட்சிச் செல்வாக்கை மீள கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.

கேப்பாபுலவு காணி விவகாரம் தொடர்பில் அரசிற்கும், இராணுவத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளதுடன், ‘காணி விவகாரத்தில் தமிழ் மக்கள் பொறுமை இழந்து விட்டனர்.

தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் தொடர்ந்தும் வைத்திருப்பது நல்லிணக்கத்திற்கு சாதகமான சமிக்ஞை இல்லை. எனவே சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக் கொண்டிராமல் தலையீடு செய்ய வேண்டும்’ எனக் கோரி ஐ.நா செயலாளர், மனிதவுரிமை ஆணையாளர், வெளிநாட்டு தூதரகங்கள் என்பவற்றுக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் பொறுமை இழந்த நிலையினையும், கூட்டமைப்பு தலைமை மீது கொண்டுள்ள அதிருப்தி நிலையையும் புரிந்து கொண்டவராக தனது கட்சியையும், தமது இருப்பையும் தங்க வைப்பதற்காகவும், அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்காகவும் காய்களை நகர்த்தியிருக்கினறார் இரா.சம்பந்தன்.

மறுபுறம், ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு வழங்கிய மற்றும் வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவு மூலம் பதவி நிலைகளைத் தவிர, மக்களுக்காக எதையும் செய்ய முடியவில்லை என்பதும் கூட்டமைப்பு தலைவருக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

இதனால் நித்திரை கொண்டு விழித்தவர் போல் அண்மையில் மஹிந்தவுடன் இணைந்து ஆட்சி செய்வது குறித்தும் பேசியிருந்ததுடன், ஐ.நாவுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிருறார்.

இதனை நல்லாட்சி அரசாங்கத்தை மிரட்டுவதற்கான ஒரு உத்தியாகவும் அவர் கையாள முயன்றுள்ளார்.

பிரச்சினைளை தீருங்கள் அல்லது மஹிந்தவுடன் கூட்டு சேர்ந்து இந்த ஆட்சியை மாற்றி விடுவோம், சர்வதேசத்திடம் முறையிடுவோம் என்கின்ற தொனியிலான அழுத்தம் ஒன்றை நல்லாட்சி எனக் கூறும் இந்த அரசாங்கத்திற்கு பிரயோகித்துள்ளார் என்றே எண்ண வேண்டியுள்ளது.

ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பிய கூட்டமைப்பு தலைவர் தமிழ் மக்களது கோரிக்கைளையும், அபிலாசைகளையும், நிரந்த தீர்வையும் எட்டுவதற்கு காத்திரமான வகையில் போர் முடிந்து 8 ஆண்டுகளுக்குள் என்ன செய்திருக்கின்றார்.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் பயன்படுத்தி எதனை சாதித்து இருக்கின்றார்.

சம்பந்தரின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்ன..? இவ்வாறான பல கேள்விகள் எழுகின்றது. வெறும் மிரட்டல்களால் மட்டும் அரசாங்கத்தை தமிழர் நலன் சார்ந்து சிந்திக்க வைக்க முடியாது என்பது கடந்த கால வரலாறு.

இதனை உணராத நிலையில் தான் கூட்டமைப்பு தலைமை இருக்கின்றதா…? உண்மையில், தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், நிரந்தர தீர்வை எட்டுவதற்கும் அனைத்து தமிழ் மக்களையும், தமிழ் மக்கள் நலன்சார் அரசியல் தலைமைகளையும் ஒன்றிணைத்து ஒரு பலமிக்க சக்தியாக அழுத்தம் கொடுப்பதற்கு முன்வருவதன் மூலமே இந்த நாட்டில் ஒரு நிலையான தீர்வை எட்ட முடியும்.

-tamilwin.com

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Thileepan அவர்களால் வழங்கப்பட்டு 22 Aug 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Thileepan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

TAGS: