முகமட் ஹசான் : திருவள்ளுவர் சிலையை மூடச் சொன்னதில் எந்த தீய எண்ணமும் இல்லை

hassanசிரம்பானில், ஒரு தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை மூடச் சொன்னதில் எந்தவொரு தீய எண்ணமும் இல்லையென, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான் இன்று தெரிவித்தார்.

சமீபத்தில் லாடாங் ஷாங்காய் தமிழ்ப்பள்ளிக்கு முகமட்டின் வருகைக்கு முன், திருவள்ளுவர் சிலை மூடச்செய்ததற்கு, மந்திரி பெசாரின் அலுவலகம்தான் காரணம் எனக்கூறி, எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில், அப்பள்ளிக்கு நிலம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்ள வந்த முகமட், அச்சிலையை மூடச் சொன்னது உண்மைதான் என்றார். மந்திரி பெசார் அலுவலகம் அச்சிலையை மூடச்சொன்னதற்கு காரணம், வள்ளுவர் மீதுள்ள மரியாதையினாலேயே தவிர, எதிர்க்கட்சியினர் கூறுவது போல் அதனை அவமதிப்பதற்காக அல்ல என்று அவர் விளக்கப்படுத்தினார்.

“திருவள்ளுவர் சிலைக்கு முன்னதாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் நின்று பேசினால், வள்ளுவருக்குப் பின்புறத்தைக் காட்டி,  அவரை அவமதிப்பதாக இருக்கும். எனவேதான், சிலையை மூடச் சொன்னோம். இதனைக் காரணமே இல்லாமல் ஒருசிலர் அரசியலாக்கிவிட்டனர்,” என அவர் மேலும் கூறினார்.

லாடாங் ஷாங்காய் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலமும், அப்பள்ளியின் நுழைவாயிலில் கோயில் கட்டுவதற்காக 17,000 அடி நிலத்தை மாநில அரசு வழங்கவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே அவர் அங்கு வந்ததாக கூறினார்.

மாநில அரசு வழங்கிய அந்நிலத்தில், பள்ளிக்கு 3 மாடியில் புதியக் கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசாங்கம் 4.9 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“நெகிரி மாநில மக்களுக்குத் தெரியும், நான் அவர்களுக்காக நிறைய செய்துள்ளேன். சட்டத்திற்குப் hassan1புறம்பாகக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு அனுமதி பெற்று தந்துள்ளேன். 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிலம் வழங்கியுள்ளேன்,” என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.

அண்மையில், மலேசியா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலக் கொடிகளால் மூடப்பட்ட திருவள்ளுவர் சிலையும், அதனை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேடையும் புலனக் குழுக்களில் அதிகம் பகிரப்பட்டு, பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கு ஆளாகி வந்தது.

மந்திரி பெசாரின் வருகைக்கும் சிலை மூடப்பட்டதற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, சிலையை மூடச் சொல்லி யாரும் பணிக்கவில்லை என்றும், புதிதாக வண்ணம் பூசப்பட்டதால்தான் அதனை மூடி வைத்ததாகவும், நேற்று பள்ளியின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக எஃப்.எம்.தி. இணையப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.