பிகேஆர் எம்பி அரசியல் செயலகத்திலிருந்து விலகினார்

pkrபிகேஆர்   கட்சியில்   உள்ள   சிலருக்கு   அது  பாஸ்  கட்சியுடன்   பேச்சு   நடத்துவது   பிடிக்கவில்லை.   அதன்  விளைவாக    அக்கட்சியில்  விரிசல்   பெரிதாகிக்கொண்டு   வருகிறது.

பாஸுடன்   பேச்சு   நடத்தப்படுவதற்கு   எதிர்ப்புத்    தெரிவித்து   பிகேஆர்   எம்பி   வில்லியம்   லியோங்  கட்சியின்   அரசியல்    செயலகத்திலிருந்து     விலகிக்  கொண்டிருப்பதாக  அறிவித்தார்.

“ என்னால் (பாஸுடன்  ஒத்துழைப்பதைத்   தற்காத்துப்  பேச)  முடியாது.

“அப்படிச்   செய்ய  முடியாது   என்பதால்   விலகிக்கொள்வதுதான்  நல்லது”,  என்றவர்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்     போட்டியிடப்போவதில்லை   என்றும்   அந்த   செலாயாங்   எம்பி  கூறினார்.  தன்  முடிவைக்   கட்சி    மேலிடத்துக்கும்    தெரிவித்து  விட்டதாக    அவர்   சொன்னார்.

ஆனால்,    அவர்  பிகேஆர்   உறுப்பினராகவும்   கட்சியின்    தலைமைத்துவ   மன்ற  உறுப்பினராகவும்    தொடர்ந்து   இருப்பார்.

பிகேஆர்   அரசியல்   செயலகம்தான்     அக்கட்சியின்  நிர்வாகத்  தளம். வாரத்துக்கொரு  முறை   அது    கூடுகிறது.  கட்சித்  தலைவர்   அதன்   கூட்டங்களுக்குத்   தலைமை   ஏற்பார்.  அதன்  உறுப்பினர்கள்   நியமிக்கப்படுகிறார்கள்.  பெரும்பாலும்  கட்சியின்  மூத்த   உறுப்பினர்களே  அதற்கு  நியமிக்கப்படுகிறார்கள்.