‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் காலமானார்

ஹஜி தஸ்லிம்நாடறிந்த சமூகச் சேவையாளர், ‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள் சற்றுமுன், நோயின் காரணமாகக் காலமானார். அன்னாருக்கு வயது 68.

நுரையீரலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த சில நாட்களாக, கே.பி.ஜே. டாமான்சரா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையத்தில் (ஐ.சி.யு.) அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல், இரவு  10 மணியளவில், அவர் உயிர் பிரிந்தது.

நாளை காலை, தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TTDI) மசூதியில் பிரார்த்தனையைத் தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு, புக்கிட் கியாரா முஸ்லீம் கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2008 -ஆம் ஆண்டு, ஹஜ் யாத்திரி சென்றபோது, தற்செயலாக “ஆபத்தான இரசாயனம்” ஒன்றை சுவாசித்ததினால், அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக, அனாஸ் அலாம் ஃபைஸ்லி எனும் முகநூல் செயற்பாட்டாளர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரின் இறப்பு செய்தி வெளியான சில மணி நேரத்தில், நூற்றுக்கணக்கான இரங்கல் செய்திகள் சமூக ஊடகங்களை நிரப்பி வருகின்றன.