நஜிப்பும் ஹாடியும் சிலாங்கூரைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்களாம்

selபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கும்  பாஸ்   தலைவர்  அப்துல்   ஹாடி  ஆவாங்கும்    எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்  சிலாங்கூரைக்  கைப்பற்றுவதற்காக    தேர்தல்   உடன்பாடு  ஒன்றைச்  செய்துகொள்ளும்   ஏற்பாட்டில்   மும்முரமாக  ஈடுபட்டிருக்கிறார்களாம்.

இதனைத்     தெரிவித்த     சிங்கப்பூர்    நியு    ஸ்ரேய்ட்ஸ்     டைம்ஸ்,   கடந்த  சில   மாதங்களில்   நஜிப்பும்  ஹாடியும்   அன்றாடம்  ஒருவர்  மற்றவருடன்   தொடர்பில்   இருந்து  வருவதாகக்   கூறிற்று.

மே  மாதம்  ஹாடி  இருதய  சிகிச்சை   செய்துகொண்டு   குணமடைந்து  வந்தபோதுகூட  அவர்கள்  ஒருவர்  மற்றொருவரைத்   தொடர்புகொள்வதை  நிறுத்தவில்லை.

சிலாங்கூர்   மாநிலத்துக்குத்   தலைமையேற்க   நம்பிக்கையான    ஆள்   தேவை   என்பதால்    அம்னோவும்   பாஸும்   முன்னாள்   மந்திரி  புசார்  காலிட்   இப்ராகிமை  வளைத்துப்   போட   முயல்வதாகவும்   ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  தெரிவித்தது.

“அண்மையில்   அவரைப்    பிரதமர்   அலுவலகத்தில்  அடிக்கடி   காண   முடிந்தது”,  என  ஒரு   வட்டாரம்    தெரிவித்தது.

அதற்கு  எழுத்து   வடிவில்   எதிர்வினையாற்றிய    காலிட்,  தாம்   அம்னோ,  பாஸ்   அதிகாரிகளையும்   மற்ற   கட்சிகளைச்    சேர்ந்தவர்களையும்   சந்தித்தது   உண்மைதான்  என்பதை   உறுதிப்படுத்தினார்.

“நான்   ஒரு  சுயேச்சை   பிரதிநிதி   என்பதால்   எந்தத்  தரப்பையும்   சந்திக்கும்    உரிமை   எனக்குண்டு.  அதேவேளை   அடுத்த   தேர்தலில்   போட்டியிடும்   எண்ணம்  எனக்கு   இல்லை.

“பாஸ்    இறுதிவரை   எனக்குப்  பக்கபலமாக   இருந்ததற்கு  நன்றி   தெரிவித்துக்  கொள்கிறேன்.    ஆனால்,  இன்றுவரை   எந்தக்  கட்சியிலும்   சேரும்     எண்ணம்  கிடையாது”,  என்றார்.