புத்ரா ஜெயாவைப் பிடிப்போம்; இந்தியர்களின் இரத்தக் கண்ணீரைத் துடைப்போம்

Indian Dilemmaமலேசியா சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஆனால், மலேசியக் குடிமக்களாகிய இந்தியர்கள், குறிப்பாக வறுமைப்பிடியில் சிக்கியிருக்கும் 40 விழுக்காட்டு இந்தியர்கள் (B40) அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். அம்னோவின் தலைமையிலான பாரிசான் நேசனல் அரசாங்கம் அக்கூட்டணியின் பங்காளியான மஇகாவின் வழி இந்தியச் சமூகத்திற்கு உதவுவதற்கு என்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும்  தலைவிரித்தாடும் இலஞ்ச ஊழல்களால் தோல்வியடைந்து விட்டன. இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்தியர்களின் இரத்தக் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். புத்ரா ஜெயாவைப் பிடிப்போம், இந்தியர்களின் இரத்தக் கண்ணீரைத் துடைப்போம் என்று பெட்டாலிங் ஜெயா ஆர்மடா ஹோட்டலில் இன்று காலை மணி 9 லிருந்து மாலை மணி 5 வரையில் நடைபெற்ற மலேசிய இந்தியர்களின் சிக்கல்கள் மீதான தேசிய ஆலோசனை கூட்டத்தில் முழங்கப்பட்டது

armada 1இன்று காலை தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுமார் 120 க்கு மேற்பட்ட ஹரப்பான் கூட்டணியின் பங்காளித்துவக் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்களில் டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன், ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா,  முன்னாள் செனட்டர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் தெலுக் இந்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் ஆகியோரும் அடங்குவர்.

முன்னாள் செலயாங் நகராட்சி மன்ற உறுப்பினர் குணராஜ் தலைமை ஏற்றிருந்த இந்த நிகழ்ச்சியை வழக்குரைஞர் கா. ஆறுமுகம் வழிநடத்தினார்.

“இந்தியர்களின் பிரச்சனைகள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லிகள் போன்ற சமூகங்களின் பிரச்சனைகளைக் கையாள்வதற்கு ஏஜென்சி முறை பயன்படுத்தப்படுகிறது என்று இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்த சார்ல்ஸ் சந்தியாகு , அது போதுமானதல்ல என்று கூறினார்.

“இந்தியர்களின் வறுமை நிலை விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக அதுவும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

இந்தியர்களின் மருத்துவ தேவைகள் பற்றி குறிப்பிட்ட சேவியர், அவர்களுக்கு போதுமான சேவை அளிக்கப்படவில்லை என்பதோடு நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றார்.  முதியவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். ஒற்றைத் தாய்மார்கள், பதினாறே வயதானவர்கள் உட்பட, கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் உதவி அளிக்க வேண்டும். அந்த உதவி அவர்களுக்கு நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்று சேவியர் மேலும் கூறினார்.

இளைஞர்கள் குற்றச்செயல்களின் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களை ஒதுக்கித்தள்ளி விடுவது விவேகமான செயல் அல்ல என்றும் அவர்களை முறையாகக் கையாள வேண்டும் என்றும் கருத்துரைத்த சேவியர், அதற்கு ஒரு திட்டம் தேவைப்படுகிறது என்றார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா,  மஇகா-அம்னோ உறவினால் ஏற்றப்படப் போவது ஒன்றுமில்லை, ஏனென்றால் இந்தியர்களின் பிரச்சனைக்குத் தீர்வு அம்னோவிடமிருந்து வரப்போவதில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்தியர்களின் பிரச்சனைகளை பிஎன் ஒப்புக்கொள்கிறது. மஇகாவிடம் பணம் கொடுப்பதால் எதையும் தீர்த்துவிட முடியாது. அரசாங்கம் நேரடியாக தீவிரமாக தலையிட வேண்டும். இல்லையென்றால், பி40 விவகாரம் இன்னும் மோசமாகும் என்று சார்ல்ஸ் எச்சரிக்கை விடுத்தார்.

யார் செய்வது?

armada2செய்தியாளர்களுடனான இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்ததே. பாரிசான் அரசாங்கம் இப்பிரச்சனைகளைத் தீர்க்கப் போவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். தீர்க்கப் போவது யார் என்ற கேள்விக்குப் பதில் அளித்த சேவியர், ‘புத்ரா ஜெயாவை நாம் கைப்பற்ற வேண்டும்”, என்றார்.

இந்தியர்களின் வறுமை உற்பத்தி செய்யப்பட்டது

தொடர்ந்து நடைபெற்ற மலேசிய இந்தியர்களின் சிக்கல்கள் மீதான தேசிய ஆலோசனை கூட்டத்தில். “வறுமையை உற்பத்தி செய்தல்: மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால அனுபவம்” பற்றி ராமா ராமநாதன் மலேசிய இந்தியர்கள் பெருந்திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களைப் பட்டியலிட்டு இந்தியர்களின் வறுமை எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை விளக்கினார்.

இந்தியர்களின் வறுமையைத் தோற்றுவிக்கும் எடுத்துக்காட்டமைப்பு விளக்கம் என்ற தலைப்பில் டாக்டர் முகமட் அப்துல் காலிட் உரையாற்றினார்.

அடுத்து, டாக்டர் டோரிஸ் செல்வரெத்தனம் “இந்தியக் குடும்பத்தின் உருமாற்றம்” குறித்து பேசினார்.

மேற்கூறப்பட்டுள்ள உரைகளைத் தொடர்ந்து, “எதிர்காலத்தை எதிர்பார்த்தல்” என்ற தலைப்பில் டாக்டர் தாதாச்சாயினி கன்னனாது, டாக்டர் வோங் சின் ஹுவாட் மற்றும் குமார் மேனன் ஆகியோர் உரையாற்றினர்.

armada 3இறுதியாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மூன்று குழுக்களாப் பிரிக்கப்பட்டு, கீழ்க்கண்ட மூன்று கருப்பொருள்கள் மீது விவாதம் செய்து தங்களுடையக் கருத்தை முன்வைத்தனர்:

– 1. இந்தியக் குடும்பங்களின் உருமாற்றம் – முன்னேற்றத்திற்கான வழி

– 2. நெருக்கடியில் இந்திய இளைஞர்கள், கல்வியின் பங்கு மற்றும் வேலை மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கான வழிகள் – படைப்பு: ஜனார்த்தனி ஆறுமுகம்

– 3. எதிர்காலத்தை எதிர்பார்த்தல்.

இதில் பங்கேற்றவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களுடையக் கருத்துகளை முன்வைத்தனர்.

உரிமைக்காக போராடுவேன்

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராமசாமி, உரிமைக்காக போராட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். “நான் எனது உரிமைக்காகப் போராடுவேன். நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல”, என்று கூறி அவர் நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.