ஹரப்பான் உச்சநிலை தலைமையத்துவத்தில் இந்தியப் பிரதிநிதித்துவம் எங்கே?”, கேட்கிறார் அம்பிகா

 

Ambiga asksபக்கத்தான் ஹரப்பானின் முன்னணித் தலைவர்களில் இந்தியப் பிரதிநிதிகள் இல்லாதது குறித்து வழக்குரைஞரும் மனித உரிமைகள் போராளியுமான அம்பிகா சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார்.

பெர்சத்துவான் ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தியையும் மற்றும் மஇகாவின் முன்னாள் தலைவர் ஜி. பழனி வேலுவின் ஆதரவாளர்களையும் தமது பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் ஹரப்பான் அவைத் தலைவர் மகாதிர் ஈடுபட்டிருப்பது பற்றி எதிர்வினையாற்றிய அம்பிகா இதைக் குறிப்பிட்டார்.

மகாதிர் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வழிகளை கண்டறிவதில் ஈடுப்பட்டுள்ளார். இந்தியச் சமூகத்துடன் தொடர்பு ஏற்ப்டுத்திக்கொள்வது முக்கியமானது என்று தாம் கருதுவதாக அம்பிகா கூறினார்.

ஹரப்பான் தலைமைத்துவத்தைப் பார்க்கையில் அதில் இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லை. அதில் இந்திய உதவித் தலைவர் இல்லை. இந்நிலையில் மக்களை எப்படி சந்திக்கப் போகிறோம் என்று அவர் வினவினார்.

“இந்தியர்களின் வாக்குகள் வேண்டும் என்பதில் ஹரப்பானுக்கு அக்கறையிருந்தால், அதை அவர்கள் தலைமைத்துவ பிரதிநிதித்துவத்தில் காட்ட வேன்டும். எனக்கு, அது மிக முக்கியமானதாகும்”, என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மகாதிர் இந்தியக் குழுக்கள் பலவற்றை சந்தித்திருப்பதாக கூறப்படும் செய்திகளை ஒரு நல்ல நடவடிக்கை என்று ஒப்புக்கொண்ட அம்பிகா, அது ஹரப்பான் உச்சநிலை தலைமைத்துவத்தில் பிரதிபலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய அம்பிகா, மு. குலசேகரனை பொருளாளராக நியமித்திருப்பது வெறும் அடையாளத்திற்காக செய்யப்பட்டிக்கிறது என்பது தமது கருத்து என்றார்.

“நான் இதை ஹரப்பானிலிருக்கும் எனது நண்பர்களிடம் தெரிவித்து விட்டேன். ஆனால், எந்த மாற்றத்தையும் நான் இன்னும் காணவில்லை”, என்று அம்பிகா மேலும் கூறினார்.

தேர்தல் நெருங்கி விட்டது. அவர்கள் விரைந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு அதிக நேரம் கிடையாது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து ஹரப்பான் முன்னெடுப்புகள் செய்திருப்பதை நல்லது என்று கூறிய அவர், சரியான மக்களுடன் அல்லது குறைந்த பட்சம் எல்லாத் தரப்பினருடனும் பேசுவது மிக முக்கியமானது என்றாரவர்.

அரசியல் வேண்டாம்

பிரபலமான வழக்குரைஞரான அம்பிகா அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்று அவரை பலர் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், தமக்கு அதில் நிச்சயமாக விருப்பம் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.